Sunday, 21 August 2011

கத்திரிக்காய் பிரியாணி



சமையல்:கத்திரிக்காய் பிரியாணி

எஸ். மேனகா - Friday, August 19, 2011
Brinjal Biryani - Cooking Recipes in Tamil
கத்திரிக்காயில் பிரியாணியா என்று ஆச்சர்யமாய் இருக்கிறதா? நெசமாத்தாங்க.. கத்திரிக்காயில் பிரியாணியும் செய்யலாம் தெரியுமா... கத்திரிக்காயை கண்டால் காததூரம் ஓடுறவுங்ககூட கத்திரிக்காய் பிரியாணியை சாப்பிட்டு பார்த்தால் விடவே மாட்டாங்க... அந்தளவுக்கு இதன் ருசிக்கு அனைவரும் அடிமையாகிவிடுவோம்னா பாத்துக்கோங்களேன்!
தேவையான பொருட்கள்:
பெரிய கத்திரிக்காய் - 1
பாஸ்மதி - 2 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 6
பால்(அ)தேங்காய்ப்பால் - 3 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீ ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீ ஸ்பூன்
சோம்பு - 1 டீ ஸ்பூன்
புதினா, கொத்தமல்லி - 1 கைப்பிடி
உப்பு-எண்ணெய் - தேவைக்கு
வறுத்து பொடிக்க:
ஏலக்காய் - 3
பட்டை - சிறு துண்டு
கிராம்பு - 4
பிரியாணி இலை - 2
செய்முறை:
* வெங்காயம்-தக்காளி நறுக்கவும். பச்சை மிளகாயை கீறவும். கத்திரிக்காயை நீளவாக்கில் அரியவும்.
* அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும். பின் நீரில்லாமல் வடித்து 1/2 டேபிள் ஸ்பூன் நெய்யில் லேசாக வறுத்து தனியாக வைக்கவும்.
* குக்கரில் எண்ணெய் 1/2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு சோம்பு போட்டு தாளித்து வெங்காயம்-தக்காளி-பச்சை மிளகாய்-இஞ்சி பூண்டு விழுது-வறுத்து பொடித்த பொடி-கத்திரிக்காய் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
* பிறகு உப்பு-மஞ்சள்தூள்-அரிசி-எலுமிச்சை சாறு-புதினா கொத்தமல்லி சேர்த்து 3 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.
* குறிப்பு: இதற்கு உருளை வறுவல் பெஸ்ட் காம்பினேஷன்.

காய்கறி சூப்


சமையல்:காய்கறி சூப்

கூடல்.காம் - Thursday, February 17, 2005
Vegitable Soup - Vegetarian Soup - Cooking Recipes in Tamil
தேவையான பொருட்கள்:

காய்கறிகள் - பீன்ஸ், பட்டானி, கேரட்
வெங்காயம் - 2 கப் (பொடிப்பொடியாக நறுக்கியது)
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
பால் - 4 கப்
மைதா மாவு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

வெண்ணெயை அடுப்பில் வைத்து வெங்காயத்தை ஒரு நிமிடம் வதக்கவும். மற்ற காய்கறிகளையும் போட்டு 2 அல்லது 3 நிமிடம் வதக்கவும். ஒரு கப் தண்ணீர் விட்டு காய்கறிகள் மெத்தென ஆகும் வரை வேக வைக்கவும். பால் மற்றும் மைதா மாவை சேர்த்து சிறிது நேரம் சூடாக்கி, மற்ற காய்கறிகளுடன் சேர்க்கவும். சூடான சூப் தயார்.

Sunday, 7 August 2011

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காளான்


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காளான்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 ஓகஸ்ட் 2011, 01:30.26 பி.ப GMT ]
உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரை "வருமுன் காப்போம்" என்பது தான் தலைசிறந்த வழி.
நோய் தாக்குதலுக்கு ஆளாகி அவஸ்தைபட்டு பின்னர் அதிலிருந்து விடுபட நடவடிக்கை மேற்கொள்வதைவிட வரும்முன் காப்பதே சிறந்தது.
இன்றைய ரசாயன உலகில் புதிது புதிதாக நோய்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. இதற்கான தீர்வுகள் குறித்த ஆய்வுகளும் மறுபுறம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. வருமுன் காத்துக் கொள்ள பல பரிந்துரைகளை மருத்துவர்களும் வல்லுனர்களும் பட்டியலிடுகின்றனர். இந்தப் பட்டியலில் இயற்கையின் கொடை அதிகம்.
இந்த வரிசையில் மஷ்ரூம் எனப்படும் காளான் முக்கிய பங்கு வகிக்கிறது. இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் மார்பக மற்றும் ப்ராஸ்ட்ரேட் புற்றுநோயில் இருந்து காளான் பாதுகாப்பு அளிக்கிறது என்பதை கண்டறிந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
குறைந்த கலோரியை கொண்ட இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த உணவு என்பதும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காளானில் உள்ள எர்கோ தையானின் என்ற மூலப்பொருள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
இதனால் நோய்த்தாக்குதல் வாய்ப்புகள் குறையும். சைவ உணவான காளானில் மீன்எண்ணெய்க்கு நிகராக வைட்டமின் டி சத்து மிக அதிக அளவில் உள்ளது. இந்த சத்து நேரடியாகவும் உடனடியாகவும் காளானில் இருந்து கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, 3 August 2011

குழந்தைகளின் வளர்ச்சிக்கு கொய்யா...

குழந்தைகளின் வளர்ச்சிக்கு கொய்யா...


கொய்யாக்  கனியின் சுவையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. 

கொய்யா வீட்டுத் தோட்டங்களிலும் வயல் வரப்புகளிலும் வளர்க்கப் படும் மரவகையாகும்.  இது இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது.

இதற்கு ஜாம்பலா, கோவா, பலாம்பர் என்ற பெயர்களும் உண்டு.


இதன் கிளைகள்  வழுவழுவென்று காணப்படும்.  இலைகள் தடித்து காணப்படும்.  கொய்யாக்கனி அதிக மருத்துவக் குணம் கொண்டது.

கொய்யா, முக்கனியான மா, பலா, வாழை இவற்றிற்கு இணையாக வர்ணிக்கப்படும் பழமாகும்.  மிகக் குறைந்த விலையில் அதிக சத்துக்களைத் தன்னகத்தே கொண்ட பழம் இது..

கொய்யாப்பழம் கோடைக்காலங்களில்தான் அபரிமிதமாக விளையும்.  தற்போது உயிரி தொழில் நுட்ப முறையில் வருடம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது.
கொய்யாவில் பலவகைகள் உள்ளன.  இதன் பழங்கள் சிலவகை  தடித்த தோலுடனும், சிலவகை மெல்லிய தோலுடனும் காணப்படும்.

தற்போது விற்பனைக்கு வரும் பழங்களில் உள் சதைப் பகுதி வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் உள்ளன. ஒருசில வகை கொய்யாவின் சதைப்பகுதி ரோஸ் நிறத்தில் காணப்படும்.  இவை அனைத்தின் மருத்துவப் பயனும் ஒன்றுதான்.


கொய்யாக்கனியின் சுவையைப் போல் அதன் மணமும் ரம்மியமாக இருக்கும்.  இதில் அதிகளவு வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.  குறிப்பாக நெல்லிக் கனிக்கு அடுத்த நிலையில் வைட்டமின் சி சத்து கொண்ட பழம் கொய்யா தான்.


மருத்துவப் பயன்கள்


மலச்சிக்கல் தீர


மலச்சிக்கல்தான் நோயின் ஆரம்பம்.  அனைத்து நோய்களின் தாக்கமும் மலச்சிக்கலில் இருந்துதான் ஆரம்பிக்கும்.  மலச்சிக்கலைப் போக்கினாலே நோயில்லா நல்வாழ்வு வாழலாம் என்பது சித்தர்களின் கூற்று.  நன்கு கனிந்த கொய்யாப் பழத்தை இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.  குடலின் செரிமான சக்தி அதிகரிக்கும்.

வயிற்றுப்புண் ஆற


இன்றைய உணவுகளில் அதிகம் வேதிப் பொருட்கள் கலந்திருப்பதால் அவை அஜீரணத்தை உண்டாக்கி வயிற்றுப் புண்ணை ஏற்படுத்துகிறது.  இதனைப் போக்க உணவுக்குப்பின் கொய்யாப்பழம் சாப்பிடுவது நல்லது.  மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் இப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் மூலநோயிலிருந்து விடுபடலாம்.


கல்லீரல் பலப்பட


உடலின் சேமிப்புக் கிடங்கான கல்லீரல் பாதிக்கப்பட்டால், உடலின் பித்தத்தின் தன்மை மாறுபடும்.  இதனால் உடல் பல பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும்.  இதைத் தவிர்த்து கல்லீரலைப் பலப்படுத்த கொய்யாப்பழத்தை அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.


நீரிழிவு நோயாளிகளுக்கு


நீரிழிவு நோயின் தாக்கம் கண்டாலே அதைச் சாப்பிடக் கூடாது இதைச் சாப்பிடக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் பாடாய் படுத்தும்.  ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்க கொய்யாப்பழம் உகந்தது. மேலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் தன்மையும் இதற்குண்டு.  


இரத்தச்சோகை மாற


இரத்தத்தில் இரும்புச் சத்துக் குறைவதால் இரத்தச்சோகை உண்டாகிறது.  இன்று இந்தியக் குழந்தைகளில் அதுவும் பெண் குழந்தைகளில் 63.8 சதவீதம் குழந்தைகள் இரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.  இக்குறையை பழங்களும் கீரைகளும் நிவர்த்தி செய்யும்.   இதில் குறிப்பாக கொய்யாப்பழம் இரத்தச் சோகையை மாற்றும் தன்மை கொண்டது.  


இதயப் படபடப்பு நீங்க


ஒரு சிலருக்கு சிறிது வேலை செய்தால் கூட இதயப் படபடப்பு உண்டாகிவிடும்.  உடலில் வியர்வை அதிகம் தோன்றும்.  இது இதய நோயின் அறிகுறியாகக்கூட அமையலாம்.  இந்த படபடப்பைக் குறைக்க கொய்யாப்பழம் மிகவும் உகந்தது.  இதய படபடப்பு உள்ளவர்கள் தினம் ஒரு கொய்யாப்பழம் உண்பது நல்லது.


குழந்தைகளின் வளர்ச்சிக்கு


குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் சி சத்து கொய்யாப்பழத்தில் அதிகம் உள்ளது.  குழந்தைகளுக்கு அளவோடு கொய்யாப் பழத்தைக் கொடுத்து வந்தால் குழந்தைகளின் எலும்புகள் பலப்படும்.  பற்கள் பலமடையும்.  நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்.


* குழந்தைகளுக்கு அறிவுத்திறன் அதிகரிக்கும்


* சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொய்யாவுக்கு உண்டு.

* நரம்புகளைப் பலப்படுத்தும்.  உடலின் உஷ்ணத்தைக் குறைக்கும்.

கொழுப்பைக் குறைக்க


அதிக இரத்த அழுத்தம், அதிக கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொய்யாவுக்கு உண்டு.  தினமும் இரண்டு கொய்யாப்பழம்  உண்டு வந்தால்   அஈஃ எனப்படும் கொலஸ்டிரால் குறையும் என இந்திய இருதய ஆராய்ச்சி நிறுவனம் (Heart researd Laboratary of India) ஆராய்ச்சி செய்து தெரிவித்துள்ளது.

Tuesday, 2 August 2011

ரத்தத்தை சுத்தப்படுத்தும் அவரைக்காய்


ரத்தத்தை சுத்தப்படுத்தும் அவரைக்காய்
[ செவ்வாய்க்கிழமை, 02 ஓகஸ்ட் 2011, 03:49.24 பி.ப GMT ]
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் பருவ கால சூழ்நிலைக்கேற்ப எந்த வகையான உணவுகளை சாப்பிட வேண்டும், அதை எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர்.
வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் அவரைக்காய் அரிய வகை மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் உணவாகச் சேர்க்கப்படுகிறது.
நல்ல சுவையைக் கொண்டது. எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும்.
உடலுக்கு வலிமை: அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் வலுப்பெறும்.
நோய்க்கு மருந்துண்ணும் காலங்களிலும், விரதம் இருக்கும் காலங்களிலும் அவரைக்காயை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். இது உடலுக்கு வலுவைக் கொடுப்பதுடன் விரத மன அமைதியைப் பெருக்கவும் உதவும். சிந்தனையைத் தெளிவுபடுத்தும்.
பித்தத்தினால் உண்டாகும் கண்சூடு, கண்பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்புகளுக்கு அவரைக்காய் சிறந்த மருந்தாகும். அவரைப்பிஞ்சினை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து கண் நரம்புகள் குளிர்ச்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும்.
ரத்தத்தை சுத்தமாக்கும்: அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
அதீத சிந்தனை, கோபம், எரிச்சல், இவற்றைப் போக்கும். உடலுக்கும், மனதிற்கும் சாந்தத்தைக் கொடுக்க வல்லது.
நீரிழிவை குணமாக்கும்: சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக் கொண்டால், நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை கட்டுப்படும்.
மலச்சிக்கலைப் போக்கும், வயிற்றுப் பொருமலை நீக்கும். மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. சிறுநீரைப் பெருக்கும். சளி, இருமலைப் போக்கும்.
சரும நோய்களை குணமாக்கும்: முதுமையில் உண்டாகும் நோயின் தன்மையை அவரைப் பிஞ்சு மாற்றும். தசை நார்களை வலுப்படுத்தும். உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும். இரவு உணவில் அவரைக்காய் சேர்த்துக் கொண்டால் சுகமான நித்திரை கிடைக்கும்.
முற்றிய அவரைக்காயை உணவாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக முற்றிய அவரைக்காய், முற்றிய வெண்டைக்காய் போன்றவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால் உடல் பலமடையும். ஆண்மை சக்தி அதிகரிக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.

Monday, 1 August 2011

இளமைக்கு வழிவகுக்கும் திராட்சை


இளமைக்கு வழிவகுக்கும் திராட்சை
[ திங்கட்கிழமை, 01 ஓகஸ்ட் 2011, 02:06.52 பி.ப GMT ]
திராட்சைப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தோல் புற்றுநோயை தவிர்க்கலாம். அது மட்டுமல்லாமல் முன் கூட்டிய வயோதிகத்தை தடுக்கவும் திராட்சை உதவுகிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
திராட்சையில் உள்ள கூட்டுப் பொருள்கள் சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களின் கதிர்வீச்சில் இருந்து செல்களை பாதுகாக்க உதவுகிறது. புற ஊதா கதிர்கள் தோல் புற்றுநோயை ஏற்படுத்த காரணமாக உள்ளது.
பார்சிலோனா பல்கலைகழகம் மற்றும் ஸ்பானிஷ் தேசிய ஆராய்ச்சி கொவுன்சில் மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. புற ஊதா கதிர்வீச்சு பாதிப்பை தவிர்க்க திராட்சையில் உள் ப்ளேவனாய்ட் உதவுகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆய்வின் இயக்குனரும் பார்சிலோனா பல்கலைகழக உயிரி வேதியியல் நிபுணருமான மார்டா காஸ்கன்டே கூறுகையில்,"சூரிய ஒளியின் மூலம் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க முடியும் என இந்த புதிய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது" என்றார்.
அழகு சாதனப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றில் திராட்சை கூட்டுப் பொருள்கள் ஏற்கனவே உள்ளன. இருப்பினும் அவை தோல் செல்களை பாதுகாப்பதில் உரிய முறையில் செயல்படவில்லை. சூரிய கதிர்வீச்சால் தோலுக்கு ஏற்படும் சேதத்தை தவிர்ப்பதற்கு தற்போதைய ஆய்வு உதவும் என அவர் தெரிவித்தார்.

தவிர்க்க கூடாத பத்து உணவு வகைகள்


தவிர்க்க கூடாத பத்து உணவு வகைகள்
[ திங்கட்கிழமை, 01 ஓகஸ்ட் 2011, 03:53.50 பி.ப GMT ]
உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் சுத்தமான மனிதர்களால் கூடத் தடுக்க முடியாது.
நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள் நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்து விடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்.
வெள்ளைப் பூண்டு: பண்டைய எகிப்திலும், பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது. குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது.
உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.
வெங்காயம்: வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது.
நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.
காரட்: நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்.
ஆரஞ்சு: வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி.
காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.
பருப்பு வகைகள்: பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.
கோதுமை: நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன்(கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின் (B4) என்ற வைட்டமின் உதவுகிறது.
இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இறால், மீன் மற்றும் நண்டு: அழிந்து போன செல்களால் நோயும், நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும்.
தேநீர்: தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.
பாலாடைக்கட்டி: சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.
முட்டைக்கோஸ்: குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.
முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. மேற்கண்ட உணவுப்பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருத்துவச் செலவு குறைந்துவிடும்.