உடல் எடை அதிகரிப்பு பல்வேறு நோய்களுக்கு வாயிலாக அமைகிறது. நமது உணவு முறைக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத மேற்கத்திய உணவு முறைக்கு அடிமையாகி பலர் தங்கள் உடலை பெருக்க வைக்கிறார்கள். உடல் உழைப்பு, உடற்பயிற்சி பழக்கம் பலருக்கு இருப்பதில்லை. இதனாலும் உடல் எடை அதிகரிக்கிறது. இதை கண்டு கொள்ளமல் விடும் போது மலச்சிக்கலில் ஆரம்பித்து பல நோய்களை கொண்டு வந்து விடுகிறது. அதிக எடை, குடல் இறக்கம் ஏற்படவும் முக்கிய காரணமாகிறது. குடல் இறக்கம் பிரச்னையை தீர்க்க மருத்துவர்கள் விளக்கம் அளிக்கின்றனர். குடல் இறக்கம் என்பது வயிற்றில் உள்ள குடல் சவ்வுப் படலம் சிறிய துவாரங்கள் வழியே வெளி வருதல் ஆகும். பொதுவாக நமது வயிற்றுப் பகுதியில் இயற்கையாக சில துவாரங்கள் உண்டு. அவை தொப்புள், அடிவயிற்றில் இருந்து தொடைக்கு செல்லும் நரம்பு மற்றும் ரத்தக் குழாய்க்கான இங்குனல் பகுதி போன்றவை. இந்த துவாரங்கள் வயிற்றின் உள் பகுதியில் இருந்து மேல் வரை இணைக்கும் இந்த துவாரங்களின் வாய்ப்பகுதியில் எலாஸ்டிக் போன்று இருக்கும். இந்த எலாஸ்டிக் விரிவடைவதால் வயிற்றில் உள்ள குடல் மற்றும் குடல் சவ்வுப் படலம் போன்றவை வெளியில் வந்து விடுகிறது. துவக்கத்தில் அழுத்தம் வரும் போது மட்டும் வெளியில் வந்து அழுத்தம் குறைந்த உடன் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விடும் தன்மை கொண்டதாக இருக்கும். அவ்வப்போது இந்தப் பிரச்னை தோன்றும். பிறகு குடல் பகுதிகள் நிரந்தரமாகத் தங்கி தொல்லை தர ஆரம்பிக்கும். அதுமட்டுமில்லாமல் வயிறு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு தையல் விலகி ஓட்டைகள் ஏற்படலாம். இந்த துவாரங்களின் வழியே குடல் வெளியில் வந்து அப்படியே தங்கிவிடும். இதனையே குடல் இறக்கம் என்கிறோம். உடல் எடை அதிகம் உள்ளவர்கள் குறிப்பாக தொப்பை உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்னை வர வாய்ப்புகள் அதிகம். பெண்களின் கர்ப்பகாலம், தொடர்ச்சியான மலச்சிக்கல், தொடர் இருமல் மற்றும் தும்மலால் அவதிப்படுபவர்கள், அதிக பாரம் தூக்குபவர்கள், வயிற்றில் அதிக அழுத்தம் கொடுப்பவர்கள், வயிறு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் முறையான ஓய்வு எடுக்காதவர்கள், சிசேரியன் மூலம் குழந்தை பெற்றவர்கள் போன்றவர்களுக்கு குடல் இறக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இவர்கள் குடல் இறக்கம் ஏற்படாமல் இருக்க கவனமாக இருப்பதுடன் பிரச்னையின் துவக்கத்திலேயே டாக்டரின் ஆலோசனையுடன் சிகிச்சை பெறலாம். குடல் இறக்கத்துக்கான அறிகுறிகளை உணர்ந்து உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் சரிசெய்து கொள்ள முடியும். பாதுகாப்பு முறை: குடல் இறக்கம் பிரச்னை வராமல் இருக்க முதலில் செய்ய வேண்டியது உடல் எடையைக் குறைப்பது தான். அவரவர் உயரத்துக்கு ஏற்ற எடை உள்ளதா என்பதைத் தெரிந்து கொண்டு உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். அதிக கலோரி உள்ள உணவுகளை தவிர்ப்பது முக்கியம். மாமிச உணவுகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது. நார்ச்சத்து உள்ள உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதுடன் சரியான உணவு முறையை பின்பற்றுவதன் மூலம் நோயை விரட்ட முடியும். இருமல் மற்றும் தும்மலுக்கு முறையான சிகிச்சை எடுத்து சரி செய்து கொள்ள வேண்டும். குடல் இறக்கப் பிரச்னையை சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அடி வயிற்றில் அல்லது தொப்புள் பகுதியில் லேசான அழுத்தத்துடன் கூடிய வலி இருக்கும். திடீரென வீக்கம் ஏற்படும், அடுத்த நாள் அல்லது படுத்தால் வீக்கம் காணாமல் போய்விடும். வயிற்றுப் பகுதியில் மந்தமான வலி தொடர்ந்து தொல்லை தரும். இது போன்ற அறிகுறிகள் தென்பட்ட உடனே டாக்டரை அணுக வேண்டும். அப்போது உடனடியாக பிரச்னைக்கு தீர்வு காண முடியும். உணவு முறை மாற்றம் மற்றும் எளிய பயிற்சிகள் போதுமானதாக இருக்கும். பிரச்னை முற்றிய பின்னர் மருத்துவரை அணுகினால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும். குடல் இறக்கப் பிரச்னை வந்த பின்னர் வீக்கம் உள்ள இடத்தில் அழுத்தம் இருக்கும்படி பட்டையான பெல்ட் அணிய வேண்டும். கீழே உள்ள பொருட்களை நேரடியாக குனியாமல் உட்கார்ந்தபடி எடுக்க வேண்டும். ஸ்கிப்பிங் மற்றும் வெயிட் லிப்டிங் உள்ளிட்ட பயிற்சிகள் செய்யக் கூடாது. அதிக வெயிட் உள்ள பொருட்களைத் தூக்குவதைத் தவிர்க்கவும். வந்த பின்னர் நொந்து கொள்வதை விட குடல் இறக்கம் பிரச்னை வராமல் காக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். |
No comments:
Post a Comment