Sunday, 31 July 2011

இஞ்சி, பூண்டின் மருத்துவ குணங்கள்


மருத்துவ செய்தி
இஞ்சி, பூண்டின் மருத்துவ குணங்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 31 யூலை 2011, 02:48.04 பி.ப GMT ]
இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. நம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகிறது.
இஞ்சிக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம் அதிகமுண்டு. மேலும் குடலில் சேரும் கிருமிகளை அழித்துவிடும். கல்லீரலை சுத்தப்படுத்துகிறது.
மலச்சிக்கல், வயிற்றுவலி ஏற்பட்டால் இஞ்சிச்சாறில் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும். பசி எடுக்காதவர்கள் இஞ்சியுடன் கொத்தமல்லி துவையல் அறைத்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.
ஜலதோஷம் பிடித்தால் இஞ்சி கஷாயம் போட்டு குடித்தால் குணமாகும். தொண்டை வலி, ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு அருமருந்தாகும். பித்தம் அதிகமாகி தலைசுற்றல், விரக்தி ஏற்படுவதுண்டு. சுக்குத் தூளை தேனில் கலந்து சாப்பிட்டால் குணமாகும்.
இவ்வாறு மருத்துவ மகத்துவம் கொண்ட இஞ்சியை தினமும் உணவில் சட்னி, பொங்கல், பொரியலில் சேர்த்து பயன் பெறலாம். அப்படி செய்வதன் மூலம் உணவே மருந்தாகிவிடும்.
வெள்ளைப்பூண்டின் மருத்துவ பயன்கள்:
உடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும். இதய அடைப்பை நீக்கும். இரத்த அழுத்தம் வராமல் காக்கும்.
இரத்த அழுத்தம் வந்த பின் கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பூண்டு விளங்குகிறது. நாள்பட்ட சளித்தொல்லையை நீக்கும். தொண்டை சதையை நீக்கும். மலேரியா, யானைக்கால், காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.
வெள்ளைப் பூண்டை பாலில் வேகவைத்து மஞ்சள் தூள் கலந்து சாப்பிட்டால் சளித் தொல்லைகள் நீங்கும். பூண்டு, சிறிது புளி, மிளகாய் வத்தல் ஆகியவற்றை எண்ணெயில் விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிடலாம்.
மிளகாய் வத்தல் தேங்காய்த் துருவல் இரண்டையும் ஒரு நாள் முழுவதும் வெயிலில் காயவைத்த பின் அவற்றுடன் தோல் உரிக்காத பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து பொடி செய்து இட்லி தோசைக்குச் சாப்பிடலாம்.
நல்லெண்ணெயில் ஒரு துண்டு வெள்ளைப்பூண்டு போட்டுக் காய்ச்சி பொறுக்கக் கூடிய அளவு சூட்டில் இரண்டு சொட்டுக் காதில் விட்டால் காது வலி நீங்கும்
பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியது. அதிகளவில் பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உண்டாகும். தினமும் இரண்டு பல் துண்டு பூண்டு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

Saturday, 23 July 2011

நினைவுத்திறனை அதிகரிக்கும் மிளகு


நினைவுத்திறனை அதிகரிக்கும் மிளகு
[ சனிக்கிழமை, 23 யூலை 2011, 02:16.22 பி.ப GMT ]
பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது பழமொழி. மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது.
மிளகானது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம், இரும்பு, பொஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் காணப்படுகின்றன.
இவை அனைத்தும் நரம்புத் தளர்ச்சி, நரம்புக் கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத் தொடர்ந்து செய்து முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: மிளகில் எளிதில் ஆவியாகும் எண்ணெய், ஆல்கலாய்டு, புரதம், கனிமங்கள் உள்ளன. பிபிரைன், பெருபிரைன், பிபிரோனால், கேம்பினி, அஸ்கோர்பிக் அமிலம், கரோட்டின் ஆகியவை பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.
காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளாறு உடனே குணமாகிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது. காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது.
தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும்.
ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம். சாதாரண ஜலதோசத்திற்கு காய்ச்சலுக்கும் நன்கு காய்ச்சிய பாலில் ஒரு சிட்டிகை மிளகுப் பொடியும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் கலந்து இரவில் ஒரு வேளை அருந்தி வர நல்ல பலன் தரும்.
சோம்பலாகவும், மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும்.
மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும். ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.
உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது. அடிபட்ட வீக்கங்கள், கீல் வாதம் முதலியவைகளுக்கு மிளகிலை, தழுதாழை இலை, நொச்சியிலை இவை ஒவ்வொன்றையும் சம அளவாக எடுத்து தண்ணீரில் இட்டு அடுப்பேற்றி நன்கு காய்ச்சி அந்த சூடான நீரில் நல்ல துணியை நனைத்து ஒத்தடமிட நல்ல பலன் கிடைக்கும்
பல்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும்.
மிளகு எல்லாவித விஷங்களுக்கும் ஒரு சிறந்த முறிவாகப் பயன்படுகிறது. ஒரு கைப்பிடி அறுகம் புல்லையும், பத்து மிளகையும் இடித்து கசாயமிட்டு குடித்து வர சகல விஷக்கடிகளும் முறியும். மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில் கொதிக்க வைத்து வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால், உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.
சிலருக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும்.
மிளகு இரசமும், மிளகு சேர்ந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும்

Sunday, 17 July 2011

தோலுக்கு மினு மினுப்பை தரும் சைவ உணவுகள்!

தோலுக்கு மினு மினுப்பை தரும் சைவ உணவுகள்!

சைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தரும் விளக்கம் இங்கே:

நச்சுக்களை அகற்றுபவை:
நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவ வகைகளில் மிக முக்கியமானவை. உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு. அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரதச்சத்து இருக்கும் அளவுக்கு நார்ச்சத்து இருப்பதில்லை.
எலும்புகளை வலுவாக்குபவை:
இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது. மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்த செய்வதோடு, எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சி விடுகிறது. அதே சமயம் சைவ உணவில் இந்த பிரச்சினை இல்லை.
கார்போஹைட்ரேட் பற்றாக்குறை:
அசைவ உணவு அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கு கார்போஹைட்ரேட் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உண்டு. இதனால் உடல் தனது இயக்கத்திற்கு தேவையான சக்தியை கார்போஹைட்ரேட்டிலிருந்து பெறுவதற்கு பதிலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளும் கீட்டோனியம் என்ற நிலை ஏற்படும்.
எளிதில் ஜீரணம்:
சைவ உணவுகள் மூலமாக கிடைக்கும் ஹார்போஹைட்ரேட் படிப்படியாக ஜீரணமாக உடலுக்கு தேவையான குளுகோஸ் சத்தை சீராக அளிக்கும். அதே சமயம் கொழுப்பும், புரதமும் அதிகம் நிறைந்த இறைச்சி உணவு ஜீரணமாகவே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சில சிமயங்களில் சிலருக்கு அது சிரமமாக கூட ஆகிவிடும்.
ஆரோக்கியமான மேனி:
பீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பதோடு, தோலுக்கு மினு மினுப்பையும் கொடுக்கிறது. அத்துடன் கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் மேனிக்கு மினுமினுப்பை கூட்டும்.

அழகு.. ஆண்மை.. வெண்டைக்காய்…

அழகு.. ஆண்மை.. வெண்டைக்காய்…

வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதியோரத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு வந்து, இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளது. அடிமை வியாபாரத்தைத் தொடங்கிய காலகட்டத்தில், ஆப்பிரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.
ஆப்பிரிக்கர்கள் `கம்போ’ என்று ஒருவகை சூப் தயாரித்தனர். இந்த சூப் கெட்டியாவதற்காக வெண்டைக்காயை உபயோகித்து வந்தனர். இதைப் பொடி செய்து சூப்பில் சேர்ப்பார்கள். ஆப்பிரிக்க பாஷைகளில் ஒன்றான ஸ்வாஹிலியில் கம்போ என்றால் வெண்டைக்காய் என்று அர்த்தம். இளசாக இருக்கும் வெண்டை மென்மையாகவும், நீளமாகவும், நுனி கூர்மையாகவும் இருப்பதால், ஆங்கிலத்தில் இதை `லேடீஸ் பிங்கர்’ என்று அழைக்கின்றனர்.

பழங்காலத்தில் உள்ள மக்களுக்கு இதை எப்படி சமைப்பது என்று தெரிய வில்லை. அதனால் அந்த காலத்தில் விவசாயிகளும் இதை செடியில் இருந்து பறிக்காமல் இருந்து விட்டனர். முற்றிய வெண்டைக்காயை பறித்த சிலர், அதன் ருசி பிடிக்காமல் வெறுத்தனர். பிற்காலத்தில் தான் இதை எப்போது பறிக்கப்பட வேண்டும்? எப்படி சுவைக்க வேண்டும் என்று அறிந்திருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் வெண்டைக்காயை பொடியாக நறுக்கி, தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றுடன் சேர்த்து சாலட்டாக சாப்பிடுகிறார்கள். வங்காளத்தில் முற்றிய வெண்டையை உரித்து கொட்டையை சாப்பிடுகிறார்கள்.
அமெரிக்காவில், இளசான வெண்டைக்காயை நறுக்கி, முட்டையில் தோய்த்து, ரொட்டித் தூள் அல்லது சோளமாவில் புரட்டி, எண்ணெயிலிட்டு பொரித்து சாப்பிடுகிறார்கள். அதேபோல், முற்றிய வெண்டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர்.
வெண்டைக்காய் இளம்பச்சை, கரும்பச்சை, சிவப்பு ஆகிய நிறங்களில் இருக்கும். நீளம், குட்டை, உருண்டை ஆகிய வடிவங்களும் உண்டு.
வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றன. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன.
இளசாக இருக்கும்போதே வெண்டைக்காயை பறித்து விட வேண்டும். பயிரிடுவோர் தினமும் அறுவடை செய்ய வேண்டும். பறித்த பிறகுகூட முற்றிவிடும். அதனால், வாங்கிய உடனே சமைத்து விட வேண்டும். வெண்டைக்காயினுள் புழு இருக்கலாம். அதனால், காம்புக்கு அருகில் ஓட்டை உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும்.
வெண்டைக்காயை பிரிஜில் வைக்கும்போது ஈரம் இல்லாமல், கழுவாமல் பிளாஸ்டிக் பையில் போட்டு காய்கறி வைக்கும் டிரேயில் வைக்க வேண்டும். ஈரம் இருந்தால் அழுகி விடும். சமைப்பதற்கு முன் நன்றாக கழுவி விட வேண்டும். சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழுகொழு போன்ற திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும். வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது.

புற்று நோய்க்கு மருந்தாகும் தக்காளி

புற்று நோய்க்கு மருந்தாகும் தக்காளி
[ ஞாயிற்றுக்கிழமை, 17 யூலை 2011, 01:50.52 பி.ப GMT ]
சமையலுக்கு உபயோகப்படுத்தும் சாதாரண தக்காளியில் செலினியம் என்ற சக்தி வாய்ந்த ஆண்டி ஆக்ஸிடன்ட் உள்ளது. இந்த பொருள் புற்றுநோயை தடுக்க உதவுகிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிரேசில் பருப்பு, மீனில் தாதுக்கள் உள்ளன. இவை தைராய்டு சுரப்பிக்கு மிக முக்கியமானதாக உள்ளது. தற்போது பிரிட்டன் சந்தைக்கு வந்த சூப்பர் தக்காளி 300 கிராம் 1.99 பவுண்ட்டிற்கு விற்கப்படுகிறது.
பிரிட்டன் உணவுகளில் இல்லாத கூடுதல் செலினிய தாது சத்துக்கள் இந்த புதிய தக்காளியில் உள்ளன. ஊட்டச்சத்து அமைப்பின் மருத்துவர் கரினா நோரிஸ் கூறியதாவது: செலினியம் நோய் எதிர்ப்புச் சக்தியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
உணவில் போதிய அளவு செலினியம் இருக்கும் போது புற்றுநோய் அபாயத்தை தவிர்க்கலாம். இந்த சூப்பர் தக்காளிகள் மூலம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை பெறுவதற்கு சரியான வழியாக உள்ளது என்றார். பிரிட்டனில் பத்தில் நான்கு பேருக்கு புற்று நோய் அபாயம் உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் 30 சதவீதம் பேருக்கு இந்த புற்று நோய் அபாயம் அதிகரித்து உள்ளது. தினமும் பிரிட்டன் பெண்கள் 60 மில்லி கிராம் அளவிலும், 75 மைக்ரோ கிராம் அளவிலும் செலினிய தாதுக்கள் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அதற்கும் குறைவான அளவிலேயே பிரிட்டனில் இந்த தாது உணவை எடுத்துக் கொள்கிறார்கள்.
புதிய வகை சூப்பர் தக்காளியை மார்க்ஸ் அண்ட் ஸ்பென்ட்சர் நிறுவனம் உருவாக்கி உள்ளது.

உருளைக்கிழங்கின் மருத்துவ குணங்கள்

உருளைக்கிழங்கின் மருத்துவ குணங்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 17 யூலை 2011, 04:33.33 பி.ப GMT ]
மண்ணில் விளையும் கிழங்கு வகைகளில் உருளைக்கிழக்கு ஏராளமான சத்துக்களையும் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.
அதிக சத்துள்ளதும் எளிதில் சமைக்கக்கூடியதுமாகிய உருளைக்கிழங்கில் அதிக அளவு கலோரிகள் கிடைக்கின்றன. எளிதில் ஜீரணமாகக்கூடிய இந்த காய்கறியில் வைட்டமின்கள், தாது உப்புகள் அதிகம் காணப்படுகின்றன. இந்த காய் அதிக நார்ச்சத்தும் கொண்டுள்ளது.
வாழைப்பழத்தில் உள்ளதைப் போன்ற அதிக பொட்டாசியம் சத்து உருளைக்கிழங்கில் அதிகம் உள்ளது. நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாப்பதில் உருளைக்கிழங்குக்கு முக்கிய பங்குண்டு.
1. யூரிக் அமிலத்தையும் புளித்த நீரையும் கரைத்து வெளியேற்றி விடுகிறது. அத்துடன் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில் நட்புணர்வுடன் செயல்படும் பக்டீரியாக்களையும் அதிகம் வளர்த்து விடுகிறது. பச்சை உருளைக்கிழங்கு வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு சாறு வரப்பிரசாதமாகும்.
2. இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள உருளைக்கிழங்குகளை பச்சயைாக மிக்ஸிசியில் அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாக இந்தச் சாற்றில் அரை கப் அருந்தினால் இரைப்பைக் கோளறுகள் குணமடையும்.
3. இரு பச்சையான உருளைக்கிழங்குகளைத் தோலுடன் மிக்ஸியில் அரைத்துச் சிறிது தண்ணீர்விட்டு இரு தேக்கரண்டி வீதம் உணவு சாப்பிடுவதற்கு முன்பு அருந்த வேண்டும். இப்படி அருந்திய சாறு உடலில் வாதநோயைத் தோற்றுவிக்கும் அமிலத்தை வெளியேற்றிவிடுகிறது. தொடர்ந்து உட்கொண்டால் வாதநோய் முற்றிலும் குணமாகும்.
4. உருளைக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து, அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது. உடலில் எலும்பு இணைப்புகள் மற்றும் தசைப்பகுதிகளில் வீக்கம் முதலிய கோளாறுகளுக்கும், வாத நோய்களுக்கும் வெளிப்பூச்சாகத் தேய்க்க நிவாரணம் கிடைக்கும்.
5. உருளைக்கிழங்கு சாற்றை அடுப்பில் வைத்து மூன்றில் ஒரு பங்காக வற்றச் செய்து அதில் கிளிசரின் சேர்த்து பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். வீக்கம், வலி ஆகியன உள்ள இடங்களில் இரண்டு அல்லது மூன்ற மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த தைலத்தை அழுத்தித் தேய்த்தால் ஒரே நாளில் வீக்கம் குறையும், வலியும் நீங்கும்.
6. அவித்த உருளைக்கிழங்குகளின் தோல்களைச் சேகரித்து சுத்தம் செய்து ஒரு டம்ளர் தண்ணீரில் பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கவும். பிறகு இந்தக் கஷாயத்தை அருந்தினாலும் கீல் வாதம் குணமாகும்.
இந்த முறையில் தினமும் மும்முறை தயாரித்து அருந்த வேண்டும். உருளைக்கிழங்கு வைத்தியம் தினசரி உணவில் உருளைக்கிழங்கை அவித்தோ, வேகவைத்தோ, பொரித்தோ, சூப்வைத்தோ சேர்த்துக் கொள்வது தான் உருளைக் கிழங்கு வைத்தியம்.
7. சோறு, சப்பாத்தி போன்றவற்றைக் குறைத்துக் கொண்டு உருளைக்கிழங்குடன் கீரைவகைகளை, குறிப்பாக லெட்டூஸ், பசலைக்கீரை, தக்காளி, செலரி, வெள்ளரிக்காய், பிட்ரூட் கிழங்கு, டர்னிப்கிழங்கு போன்றவற்றையும் சேர்த்துச் சாப்பிடவேண்டும்.
கெட்டுப்போன இரத்தம், குடல்பாதையின் நச்சுத்தன்மை உள்ள அமிலம், சிறுநீரில் உள்ள புளிப்பு அமிலம் தொடர்பாக ஏற்படும் நோய்கள் உள்ளோர், நீண்ட நாள் மலச்சிக்ககால் அவதிப்படுவோர் ஆகியோர் உருளைக்கிழங்கு வைத்தியத்தை குறைந்தது ஆறுமாதங்கள் பின்பற்றினால் மேற்கண்ட நோய்களிலிருந்து பூரண நலம் பெறலாம்.
8. இரவு தூங்கப்போகும் முன்னர் பச்சை உருளைக்கிழங்கை நசுக்கி முகத்திலும் மற்ற பகுதிகளிலும் தேய்த்துக்கொண்டு உறங்கினால் அதிகாலை எழும் போது முகம் புத்துணர்வுடன் காணப்படும். அமெரிக்காவில் இந்த முறையில் இயற்கையாக முதுமையால் ஏற்படும் தோல் சுருக்கங்களை நீக்கிக்கொள்கின்றனர்.

Sunday, 10 July 2011

கடுக்காயின் மருத்துவ குணங்கள்

கடுக்காயின் மருத்துவ குணங்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 10 யூலை 2011, 02:56.08 பி.ப GMT ]
நோயற்ற வாழ்வு வாழவும், உடலினை உறுதி செய்யவும் இயற்கை நமக்கு பல்வேறு வளங்களை வழங்கியுள்ளது. நமது உடலை வலிமையுறச் செய்வதில் கடுக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.
கடுக்காய் மரம் 4000 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இதில் செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன.
கடுக்காயில் டேனின், ஆன்த்ரோ குயினான்கள், செபுலிக் அமிலம், ரெசின் மற்றும் எண்ணெய் ஆகியவை காணப்படுகின்றன. டேனின் தோல் பதனிடும் தொழிலில் பயன்படுகிறது. துணிகளுக்குச் சாயமேற்ற, சிமெண்ட் தயாரிப்பு, சிலேட் கற்களுக்கு நிறமூட்ட, நிலக்கரியைச் சுத்தம் செய்ய டேனின் உதவுகிறது.
எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளதாலேயே கடுக்காய் மருத்துவரின் காதலி எனப்படுகிறது. தான்றிக்காய், நெல்லிக்காயுடன் கடுக்காய் சேர்த்து திரிபாலா எனப்படும் கூட்டு மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது. தினமும் திரிபலா சூரணத்தை தண்ணீரில் கலந்து குடித்து வர உடல்பலம் ஏற்படும், வயிற்றுக் கோளாறு மாறும்.
கடுக்காய் தசை இருக்கும் தன்மை கொண்டது. வயிற்றுவலி, அஜீரணம் மற்றும் வயிற்று அமிலத்தன்மை ஆகியவற்றை நீக்க இந்திய மருத்துவத்தில் தரப்படுகிறது. கனிகளின் கசாயம் வாய் கொப்பளிப்பாக பயன்படுகிறது.
இதன் வலிமை காரணமாகவே முந்தைய காலங்களில் கட்டடம் கட்டும் பணியில் கடுக்காய் அரைத்து பயன்படுத்தப்பட்டது. இது வலிமையூட்டி, நீர்ப்பெருக்கி, புண்கள், கண்நோய், இருமல், காமாலை, கைகால் நமைச்சல், தலைநோய், இரைப்பு, தொண்டை வலி, நாவறட்சி, மார்பு நோய், மூலம், மேகம், வயிற்றுப் பொருமல், விக்கல் போன்றவைகளைக் குணப்படுத்தும்.
கடுக்காய் ஓட்டைத் தூளாக்கி தினமும் இரவு உணவு உண்டவுடன் அரை தேக்கரண்டி குடித்து வர வாதம் குணமாகும். உடல் வலுவடையும். ஈரல் நோய், வயிற்றுவலி, குஷ்டம், இரைப்பு, தொண்டைநோய், வயிற்றுப் புண், காமாலை போன்ற நோய்களைக் குணப்படுத்தும் தன்மையும் கடுக்காய்க்கு உண்டு.
மூக்கில் இருந்து இரத்தம் வந்தால், சிறிதளவு கடுக்காய் தூளை எடுத்து மூக்கால் உறிய இரத்தம் வருவது நின்றுவிடும்.

நரம்புகளை வலுப்படுத்தும் புளியங்கொட்டை

நரம்புகளை வலுப்படுத்தும் புளியங்கொட்டை
[ ஞாயிற்றுக்கிழமை, 10 யூலை 2011, 04:46.30 பி.ப GMT ]
மூளை, முதுகெலும்பு ஆகியவற்றில் உள்ள நரம்புகள் சேதம் அடைந்து இருந்தால் அவற்றை குணப்படுத்தி மீண்டும் வளர உதவும் மருந்து ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தமருந்து புளியங்கொட்டையில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. பர்க்கின்சன் போன்ற நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்துவதற்கான சிகிச்சையில் இந்த மருந்து ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மருந்தை சர்வதேச விஞ்ஞானிகள் குழு பரிசோதித்து பார்த்து இது சேதம் அடைந்த நரம்பு செல்களை குணப்படுத்துவதில் மிகப்பெரிய பங்காற்றும் என்று தெரிவித்துள்ளது.
இந்த மருந்தை காயம்பட்ட இடத்தில் திரவமாக ஊசி மூலம் செலுத்த முடியும் என்றும் அந்தக் குழு தெரிவித்தது.

Saturday, 9 July 2011

முள்ளங்கியின் மருத்துவ குணங்கள்

முள்ளங்கியின் மருத்துவ குணங்கள்
[ சனிக்கிழமை, 09 யூலை 2011, 04:16.22 பி.ப GMT ]
நாம் உண்ணும் உணவே சில சமயம் மருந்தாக செயல்படுகிறது. காய் வகைகளில் ஒன்றான முள்ளங்கியில் பல்வேறு பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.
கோடை காலத்தில் உடலுக்கு உஷ்ணம் அதிகம் அதிகம் ஏற்படாமல் பாதுகாப்பதில் முள்ளங்கிக்கு முக்கிய பங்குண்டு. அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட முள்ளங்கியில் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களும் தாது உப்புக்களும் உள்ளன.
முள்ளங்கியில் சிவப்பு முள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி என இரண்டு வகை உண்டு. இதில் வெள்ளை முள்ளங்கி மட்டுமே மருந்தாகப் பயன்படுகின்றது. சிவப்பு முள்ளங்கி சுவைக்கு மட்டுமே ஏற்றது.
முள்ளங்கியின் நறுமணம்: முள்ளங்கியை சமைக்கும் போதும் உண்ணும் போது ஒரு வித வாசனை ஏற்படும். சாப்பிட்ட பின்பும் நாம் விடும் மூச்சிலும், வியர்வையிலும் கூட இந்த வாசனை இருக்கும் அதற்குக் காரணம் அதில் கந்தகமும், பாஸ்பரசும் அதிகம் காணப்படுவதால் தான். முள்ளங்கியின் கிழங்கு, இலை, விதை ஆகிய மூன்றுமே மருத்துவ குணம் கொண்டது.
குழந்தைகளின் ஜலதோஷம் போக்கும்: பச்சிளம் குழந்தைகளைத் தாக்கும் ஜலதோஷம், வயிற்றுப் பிரச்சினைகளுக்கு, முள்ளங்கிப் பிஞ்சு சாறு நிவாரணம் தரும். இட்லி வேகவைப்பது போல முள்ளங்கிப்பிஞ்சை ஆவியில் வேக வைத்து அதில் இருந்து சாறு எடுத்து பாலாடையில் வைத்து குழந்தைகளுக்கு ஊட்டலாம்.
முள்ளங்கி சாறுடன் கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுத்தால் மலச்சிக்கல், சளித் தொந்தரவு போன்ற பிரச்சினைகள் தீரும்.
சிறுநீர் பிரச்சினை தீரும்: உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி. சிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருப்பது, சிறுநீர்ப் பாதையில பிரச்சினை உள்ள பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்கலாம்.
முள்ளங்கிக்கீரையை எண்ணை விட்டு நன்கு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும்.முள்ளங்கியை அடிக்கடி சாப்பிட்டால் வயிற்றில் பொருமல், எரிச்சல் போன்ற பிரச்சினைகள் வரும். எனவே அளவாக சாப்பிடுவது நல்லது.

Monday, 4 July 2011

கொய்யாக் கனியின் மருத்துவ குணங்கள்


கொய்யாக் கனியின் மருத்துவ குணங்கள்
[ திங்கட்கிழமை, 04 யூலை 2011, 07:25.10 மு.ப GMT ]
கொய்யாக் கனியின் சுவையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கொய்யா வீட்டுத் தோட்டங்களிலும், வயல் வரப்புகளிலும் வளர்க்கப்படும் மரவகையாகும்.
இது இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது. இதற்கு ஜாம்பலா, கோவா, பலாம்பர் என்ற பெயர்களும் உண்டு. கொய்யாக்கனி அதிக மருத்துவக் குணம் கொண்டது.
கொய்யா முக்கனியான மா, பலா, வாழை இவற்றிற்கு இணையாக வர்ணிக்கப்படும் பழமாகும். மிகக் குறைந்த விலையில் அதிக சத்துக்களைத் தன்னகத்தே கொண்ட பழம் இது.
கொய்யாப்பழம் கோடைக்காலங்களில் தான் அபரிமிதமாக விளையும். தற்போது உயிரி தொழில்நுட்ப முறையில் வருடம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது.
இதில் அதிகளவு வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக நெல்லிக் கனிக்கு அடுத்த நிலையில் வைட்டமின் சி சத்து கொண்ட பழம் கொய்யா தான்.
வயிற்றுப்புண் ஆற: இன்றைய உணவுகளில் அதிகம் வேதிப் பொருட்கள் கலந்திருப்பதால் அவை அஜீரணத்தை உண்டாக்கி வயிற்றுப் புண்ணை ஏற்படுத்துகிறது. இதனைப் போக்க உணவுக்குப்பின் கொய்யாப்பழம் சாப்பிடுவது நல்லது. மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் இப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் மூலநோயிலிருந்து விடுபடலாம்.
கல்லீரல் பலப்பட: உடலின் சேமிப்புக் கிடங்கான கல்லீரல் பாதிக்கப்பட்டால் உடலின் பித்தத்தின் தன்மை மாறுபடும். இதனால் உடல் பல பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும். இதைத் தவிர்த்து கல்லீரலைப் பலப்படுத்த கொய்யாப்பழத்தை அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.
நீரிழிவு நோயாளிகளுக்கு: நீரிழிவு நோயின் தாக்கம் கண்டாலே அதைச் சாப்பிடக் கூடாது இதைச் சாப்பிடக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் பாடாய்படுத்தும். ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்க கொய்யாப்பழம் உகந்தது. மேலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் தன்மையும் இதற்குண்டு.
இரத்தச்சோகை மாற: இரத்தத்தில் இரும்புச் சத்துக் குறைவதால் இரத்தச்சோகை உண்டாகிறது. இன்று இந்தியக் குழந்தைகளில் அதுவும் பெண் குழந்தைகளில் 63.8 சதவீதம் குழந்தைகள் இரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இக்குறையை பழங்களும் கீரைகளும் நிவர்த்தி செய்யும். இதில் குறிப்பாக கொய்யாப்பழம் இரத்தச் சோகையை மாற்றும் தன்மை கொண்டது.
இதயப் படபடப்பு நீங்க: ஒரு சிலருக்கு சிறிது வேலை செய்தால் கூட இதயப் படபடப்பு உண்டாகிவிடும். உடலில் வியர்வை அதிகம் தோன்றும். இது இதய நோயின் அறிகுறியாகக்கூட அமையலாம். இந்த படபடப்பைக் குறைக்க கொய்யாப்பழம் மிகவும் உகந்தது. இதய படபடப்பு உள்ளவர்கள் தினம் ஒரு கொய்யாப்பழம் உண்பது நல்லது.
குழந்தைகளின் வளர்ச்சிக்கு: குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் சி சத்து கொய்யாப்பழத்தில் அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கு அளவோடு கொய்யாப் பழத்தைக் கொடுத்து வந்தால் குழந்தைகளின் எலும்புகள் பலப்படும். பற்கள் பலமடையும். நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்.
குழந்தைகளுக்கு அறிவுத்திறன் அதிகரிக்கும். சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொய்யாவுக்கு உண்டு. நரம்புகளைப் பலப்படுத்தும். உடலின் உஷ்ணத்தைக் குறைக்கும்.
கொழுப்பைக் குறைக்க: அதிக இரத்த அழுத்தம், அதிக கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொய்யாவுக்கு உண்டு. தினமும் இரண்டு கொய்யாப்பழம் உண்டு வந்தால் கொலஸ்டிரால் குறையும் என இந்திய இருதய ஆராய்ச்சி நிறுவனம்(Heart researd Laboratary of India) ஆராய்ச்சி செய்து தெரிவித்துள்ளது.

Sunday, 3 July 2011

வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் பீட்ரூட் ஜுஸ்


வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் பீட்ரூட் ஜுஸ்
[ ஞாயிற்றுக்கிழமை, 03 யூலை 2011, 06:43.14 மு.ப GMT ]
சைக்கிள் வீரர்களின் சக்தியை பீட்ரூட் ஜுஸ் அதிகரிக்கும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
அண்மையில் எக்சீடர் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் பீட்ரூட் ஜுஸ் குடிக்கும் சைக்கிள் வீரர்களுக்கு சக்தி அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இயற்கையாக பீட்ரூட்டில் அதிக அளவு நைட்ரேட் உள்ளது. இது தடகள வீரர்களின் திறமையை பாதிக்கும் என கருதப்பட்டது. இதுகுறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது பீட்ரூட் ஜுஸ் குடித்தால் சக்தி அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது.
சைக்கிள் ஓட்டும் வீரர்களுக்கு இந்த ஜுஸ் கொடுக்கப்பட்டது. அப்போது அவர்கள் வழக்கத்தை விட அதிக தூரம் கடந்து சாதனை படைத்தனர். பீட்ரூட் ஜுஸ் தசைகளுக்கும், இருதய நாளங்களுக்கும் அதிக சக்தி கொடுப்பதும் தெரியவந்தது.

Friday, 1 July 2011

இளநீரின் மருத்துவ குணங்கள்


இளநீரின் மருத்துவ குணங்கள்
[ வியாழக்கிழமை, 30 யூன் 2011, 01:57.21 பி.ப GMT ]
இளநீர் என்பது இயற்கையிலேயே உருவான உடலியல் இயக்கங்களுக்கு இன்றியமையாத பல தாது உப்புகள் அதிகமாக உள்ள ஒரு பானம்(Isotonic Drink).
இளநீர் உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது. இளநீர் இயற்கை அளித்த இனிய பானம் மட்டுமன்று பல பிணிகளைத் தீர்க்கும் மாமருந்தாகவும் உள்ளது.
இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும் இரத்த நாளங்களில் உஷ்ணம் ஆதிக்கம் அடையாமல் இருக்க உறுதுணையாகிறது. மயக்கம், அசதி ஏற்படும் போது மருத்துவரிடம் செல்வதற்கு முன் இரண்டு குவளை இளநீர் அருந்துவது என்பது ஒரு பாட்டில் சலைன் ஏற்றுவதற்குச் சமமாகும்.
கடும் நீரிழப்பின் போது(severe dehydration) சரியான மாற்றுக் கிடைக்காத போது இளநீரையே நேரடியாக இரத்த நாளங்களில் ஏற்ற முடியும். மே, ஜூன் ஆகிய இரு மாதங்களிலும் வெயில் தகிக்கும்.
அப்போது உடலிலிருந்து வியர்வை ஏராளமாக வெளியேறுவதால் நீர்க்கடுப்பு ஏற்படலாம். அப்போது இரண்டு குவளை இளநீர் பருகுவது நல்லது.
பேதி சீதபேதி, ரத்த பேதி ஆகும் போது மற்றெல்லா உணவுகளையும் தவிர்த்து விட்டு உடனடியாக இளநீர் பருகி வர உடல் அசதி, மயக்கம் வராது. சிறுநீரகக்கல், சிறுநீர்க்குழாய் பாதிப்பு(Urinary Infection), போன்ற கோளாறுகள் வந்துவிட்டால் முதல் மருந்தே இளநீர் தான்.
டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை நோய்கள் போன்றவற்றால் பாதிக்கப்படும் போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும். அறுவை சிகிச்சைகளுக்குப் பின் திரவ உணவு மட்டுமே சாப்பிட வேண்டிய சமயங்களில் இளநீருக்கு முன்னுரிமை வழங்கி உபயோகித்தால் அறுவை சிகிக்சைப் புண் (Surgical Sore) விரைவில் குணமடையும்.
உணவு எளிதில் ஜீரணமாவதற்கு இளநீரில் உள்ள தாதுக்கள் பயன்படுவதால் செரிமான உறுப்புக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு வாந்தி வரும் போது இளநீர் கொடுத்தால் வாந்தி கட்டுப்படும். நாக்கு வறட்சி நீங்கும்.
கோடைக்காலம் மட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் அருந்தக் கூடிய இனிப்பும் குளிர்ச்சியும் கொண்ட இளநீரை அருந்தி வந்தால் உடல் வளமை பெற்று நோயற்று ஆரோக்கியத்துடன் வாழலாம்.
உடலுக்குக் கேடு தரும் பல்வேறு வேதிப்பொருட்களை உள்ளடக்கிய கார்பானிக் குளிர்பானங்கள்(Carbonated Drinks), பனிக்கூழ்(Ice cream) ஆகியவற்றை விட உடலுக்குப் பல மடங்கு நலம் தரும் இயற்கை பானமான இளநீரைப் பயன்படுத்துவதே ஆரோக்கியமான வழி.
மேலும் தோல் பளபளப்பாக சிவப்பாக மாற 24 மில்லி கிராம் ஸல்ஃபர் உப்பு தேவைப்படுகிறது. இந்த ஸல்ஃபர் உப்பு இரத்தம் சுத்தம் அடையவும் கல்லீரல் நன்றாக இயங்கவும் உதவுகிறது. இத்துடன் தோல் முடி நகங்கள் ஆரோக்கியமாக வளரவும் உதவுகின்றன. இந்த உப்பு இளநீரில் அதிகம் காணப்படுகிறது.