Sunday, 17 July 2011

அழகு.. ஆண்மை.. வெண்டைக்காய்…

அழகு.. ஆண்மை.. வெண்டைக்காய்…

வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதியோரத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு வந்து, இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளது. அடிமை வியாபாரத்தைத் தொடங்கிய காலகட்டத்தில், ஆப்பிரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.
ஆப்பிரிக்கர்கள் `கம்போ’ என்று ஒருவகை சூப் தயாரித்தனர். இந்த சூப் கெட்டியாவதற்காக வெண்டைக்காயை உபயோகித்து வந்தனர். இதைப் பொடி செய்து சூப்பில் சேர்ப்பார்கள். ஆப்பிரிக்க பாஷைகளில் ஒன்றான ஸ்வாஹிலியில் கம்போ என்றால் வெண்டைக்காய் என்று அர்த்தம். இளசாக இருக்கும் வெண்டை மென்மையாகவும், நீளமாகவும், நுனி கூர்மையாகவும் இருப்பதால், ஆங்கிலத்தில் இதை `லேடீஸ் பிங்கர்’ என்று அழைக்கின்றனர்.

பழங்காலத்தில் உள்ள மக்களுக்கு இதை எப்படி சமைப்பது என்று தெரிய வில்லை. அதனால் அந்த காலத்தில் விவசாயிகளும் இதை செடியில் இருந்து பறிக்காமல் இருந்து விட்டனர். முற்றிய வெண்டைக்காயை பறித்த சிலர், அதன் ருசி பிடிக்காமல் வெறுத்தனர். பிற்காலத்தில் தான் இதை எப்போது பறிக்கப்பட வேண்டும்? எப்படி சுவைக்க வேண்டும் என்று அறிந்திருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் வெண்டைக்காயை பொடியாக நறுக்கி, தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றுடன் சேர்த்து சாலட்டாக சாப்பிடுகிறார்கள். வங்காளத்தில் முற்றிய வெண்டையை உரித்து கொட்டையை சாப்பிடுகிறார்கள்.
அமெரிக்காவில், இளசான வெண்டைக்காயை நறுக்கி, முட்டையில் தோய்த்து, ரொட்டித் தூள் அல்லது சோளமாவில் புரட்டி, எண்ணெயிலிட்டு பொரித்து சாப்பிடுகிறார்கள். அதேபோல், முற்றிய வெண்டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர்.
வெண்டைக்காய் இளம்பச்சை, கரும்பச்சை, சிவப்பு ஆகிய நிறங்களில் இருக்கும். நீளம், குட்டை, உருண்டை ஆகிய வடிவங்களும் உண்டு.
வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றன. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன.
இளசாக இருக்கும்போதே வெண்டைக்காயை பறித்து விட வேண்டும். பயிரிடுவோர் தினமும் அறுவடை செய்ய வேண்டும். பறித்த பிறகுகூட முற்றிவிடும். அதனால், வாங்கிய உடனே சமைத்து விட வேண்டும். வெண்டைக்காயினுள் புழு இருக்கலாம். அதனால், காம்புக்கு அருகில் ஓட்டை உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும்.
வெண்டைக்காயை பிரிஜில் வைக்கும்போது ஈரம் இல்லாமல், கழுவாமல் பிளாஸ்டிக் பையில் போட்டு காய்கறி வைக்கும் டிரேயில் வைக்க வேண்டும். ஈரம் இருந்தால் அழுகி விடும். சமைப்பதற்கு முன் நன்றாக கழுவி விட வேண்டும். சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழுகொழு போன்ற திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும். வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது.

No comments:

Post a Comment