Wednesday, 28 September 2011

கீரைகளை உணவில் சேர்ப்பதனால் ஏற்படும் நன்மைகள்


கீரைகளை உணவில் சேர்ப்பதனால் ஏற்படும் நன்மைகள்
[ புதன்கிழமை, 28 செப்ரெம்பர் 2011, 10:58.53 மு.ப GMT ]
தேவையான வைட்டமின் சத்துக்களையும், தாதுப் பொருட்களையும் பெற ஒருவர் தினசரி 125 கிராம் கீரைகளையும், 75 கிராம் காய்களையும், பருப்பையும் சாப்பிட வேண்டும்.
முக்கியமான வைட்டமின் சத்துக்களையும் தாதுப்புக்களையும் நாம் கீரையிலிருந்துதான் எளிதாகப் பெற முடியும்.
1. கீரைகள் விலை மலிவாகயிருப்பதனால் அவைகளில் சத்து இல்லை என்றோ, அதிக விலை கொடுத்து வாங்கும் பழங்களில் தான் சத்து என்றோ நினைத்துவிடக் கூடாது. உதாரணமாக ஒரு கிலோ அரைக் கீரையிலுள்ள இரும்புச்சத்தைப் பெறுவதற்கு 12 கிலோ அன்னாசிப் பழம் சாப்பிட வேண்டும்.
2. இதுபோல் ஒப்புநோக்க முடியாத அளவுக்கு பழங்களைவிட அதிகச் சத்துக்கள் கொண்டவை கீரைகள். இதிலிருந்தே கீரைகளை நாம் உணவில் தினசரி சேர்த்துக் கொள்ள வேண்டியதின் அவசியம் விளங்கும்.
3. வைட்டமின் ஏ நமது கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்குத் தேவைப்படுகிறது. வைட்டமின் ஏ குறைவினால் கண்கள் பார்வை குறைத்து விடும்.
4. வைட்டமின் ஏ, முட்டை, பால் மீன்எண்ணெய் முதலியவைகளிலிருந்தாலும் இவைகள் விலைகள் அதிகமானவை. மலிவான கீரைகளிலிருந்து ஏ வைட்டமினைப் பெறுவதுதான் எளிது. ஏ வைட்டமின் சமைக்கும் போது அதிகமாகப் பாதிக்கப்படுவதில்லை.
5. அகத்தி, முளைக்கீரை, தண்டுக்கீரை, முருங்கைக்கீரை, பாலக் அல்லது பீட்ரூட்கிரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை முதலிய கீரைகளில் வைட்டமின் ஏ அதிகமாகவுள்ளது.
6. வைட்டமின் பி அகத்திக் கீரை, முளைக்கீரை, கறிவேப்பிலை, புளிச்சக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை ஆகியவற்றில் அதிகமாக இருக்கிறது.
7. வைட்டமின் சி சத்துக் குறைவினால் ஸ்கர்வி என்ற நோய் ஏற்படுகின்றது. வைட்டமின் சி அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, புண்ணாக்குக் கீரை, முளைக்கீரை, முட்டைகோஸ் கொத்தமல்லி முதலிய கீரைகளில் அதிகமாக இருக்கிறது.
8. வைட்டமின் சி சத்து கீரைகளை வேக வைக்கும் போது அழித்துவிடுகிறது. சமைக்கும்போது அதிக நேரம் வேக வைக்காமலும், வேவைத்த நீரை இறுத்து விடாமலும் இருக்க வேண்டும். சமைக்காமல் சாப்பிடக்கூடிய பல கீரைகளையும் பச்சையாகக் சாப்பிடக் கற்றுக் கொள்ள வேண்டும்.
9. நமது இருதயம் சரியாகச் சுருங்கி விரிவதற்கும் சுண்ணாம்புச் சத்து அவசியம். சுண்ணாம்புச் சத்து வளரும் குழந்தைகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் மிக மிக அதிகமாகத் தேவைப்படுகின்றது.
10. சுண்ணாம்புச் சத்து அகத்தி, முருங்கை, தண்டுக்கீரை, அரைக் கீரை, வேளைக்கீரை, கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளிக் கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, பாலக்கீரை முதலியவற்றில் அபரிமிதமாகக் கிடைக்கின்றது.
11. இரும்புச் சத்து நம் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இரும்புச் சத்துக் குறைவினால் இரத்த சோகை உண்டாகிறது கர்ப்பிணிகளுக்கு இரும்புச் சத்து நிறைய தேவைப்படும்.
12. இரும்புச் சத்து முளைக்கீரை, அரைக்கீரை, கொத்தமல்லி, மணத்தக்காளிக்கீரை, குப்பைக் கீரை, நச்சுக் கொட்டைக்கீரை, பசலைக்கீரை, வல்லாரைக் கீரை, புண்ணாக்குக் கீரை, வேளைக் கீரை முதலிய கீரைகளில் நிறைய கிடைக்கிறது.
13. மேற்கூறிய கீரைகளைவிட எல்லா வைட்டமின் சத்துக்களும் தாதுப்புக்களும் ஒருங்கே கொண்ட கீரை தவசிக்கீரையாகும். இக்கீரையைச் சமைக்காமல் பச்சையாகவும் சாப்பிடலாம்.
14. ஒரு முறை நட்டு விட்டால் பல ஆண்டுகளுக்கு கீரைகளைப் பறிக்கலாம். ஒவ்வொரு தோட்டத்திலும் அவசியம் வளர்க்கப்பட வேண்டிய கீரை தவசிக்கீரையாகும்.
15. வைட்டமின்கள் மட்டுமின்றி நம் உடல் வளர்ச்சிக்குத் தேவையான பாஸ்பரஸ், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம் போன்ற தனிமங்களும் கீரை வகைகளில போதிய அளவில் கிடைக்கின்றன.
ஆகவே எளிதில் மலிவாகக் கிடைக்கக்கூடிய கீரைகளை நாள்தோறும் நமது உணவில் சேர்த்து ஆரோக்கிய வாழ்வு பெறுவோம்.

No comments:

Post a Comment