அசிடிட்டிக்கு ஏற்ற உணவுகள் |
[ ஞாயிற்றுக்கிழமை, 09 செப்ரெம்பர் 2012, 02:32.46 மு.ப GMT ] |
அசிடிட்டி பிரச்சினை இன்றைக்கு பெரும்பாலனவர்களை பாதிக்கிறது. வயிற்றில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாயில் திரும்பி வருவதால், வயிறு அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.
இதனால் வயிற்றில் வலி, வயிற்றில் உப்புசம் கூட ஏற்படும். சரியான உணவுப்பழக்கத்தை கொள்வதன் மூலம் அசிடிட்டி பிரச்சினையை நீக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
சில நேரங்களில் உணர்ச்சிவசப்படுவதாலும் அசிடிட்டி உருவாகிறது. மன அழுத்தத்தின் போது, அந்த சூழ்நிலையை எதிர்கொள்ள ரத்தத்தின் மூலமாக தசைகளுக்கு ஆற்றல் அனுப்பப்படுகிறது.
இதனால் செரிமான உறுப்புகளுக்கு போதிய ரத்த ஓட்டம் இருக்காது. இதனால் செரிமான நிகழ்வு குறைந்து, வயிற்றில் நீண்ட நேரம் உணவு தங்குவதால், அமிலம் பின்னோக்கி திரும்பும் வாய்ப்பு உள்ளது.
எனவே மன அழுத்தத்தை எதிர்த்து சமாளிக்க, உடற்பயிற்சி செய்யலாம். மனதை லேசாக்கும் வகையில் இசையை கேட்பதன் மூலம் அசிடிட்டி பிரச்சினையை போக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
பப்பாளி மற்றும் அன்னாசி போன்ற பழங்களில் உணவு செரிமானத்திற்கு உதவும் பாப்பெயின் மற்றும் புரோமிலெய்ன் ஆகிய என்சைம்கள் அதிகளவில் உள்ளன. எனவே இப்பழங்களை அதிகளவில் சாப்பிடலாம்.
முட்டைகோசு சாறு நெஞ்செரிச்சலுக்கு மிகவும் நல்லது. செரிமானப் பாதைக்கு மிகவும் பயன்படும் குளூட்டாமின் எனும் அமினோ அமிலம் முட்டைகோசில் அதிகளவில் காணப்படுகிறது. முட்டைகோசு சாறை தனியே சாப்பிட முடியாவிட்டால் மற்ற காய்கறிகளின் சாறுடன் கலந்து சாப்பிடலாம்.
சீரகம், புதினா, சோம்பு ஆகியவற்றுக்கு ஜீரண சக்தியை அதிகரித்தல், வாயு தொல்லை மற்றும் வயிற்றுவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் தன்மை உண்டு. எனவே இவற்றை தினசரி சமையலில் சேர்த்துக் கொள்வது நல்லது.
முட்டையின் வெள்ளைக்கரு அசிடிட்டி பிரச்சினையை தீர்க்கும் சரியான உணவாக உள்ளது. அதேபோல் மீன், சிக்கன் அதிக காரமில்லாமல் சேர்த்து சாப்பிடலாம்.
குறைந்த கொழுப்பு சத்துள்ள சீஸ் அசிடிட்டி பிரச்சினையை தீர்க்கும். அதேபோல் கொழுப்புச் சத்து குறைவான பாலும் ஏற்றது. மேலும் அசிடிட்டி உள்ளவர்கள் அதனைப் போக்க தானிய உணவுகள், கோதுமை, ப்ரௌவுன் அரிசி போன்றவைகளை சேர்த்து கொள்ளலாம்.
சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் இஞ்சி டீ குடிக்கலாம். இவை செரிமானத்திற்கு தேவையான சுரப்பிகளின் செயல்பாடுகளை தூண்டி விடுகிறது.
எதை சாப்பிடக்கூடாது?
அடிசிட்டியினால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் மசாலா கலந்த கார உணவுகளை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். இதை தவிர்க்க முடியவில்லை என்றால் வாரத்திற்கு 1-2 முறை மட்டும் சாப்பிடலாம்.
அசிடிட்டி உடையவர்கள், அமிலத்தன்மை நிறைந்தவைகளான சிட்ரஸ் பழங்கள் மற்றும் தக்காளி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் செரிமான அமைப்பிற்கும் அதிக பளுவை உண்டாக்குகிறது. எனவே அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
காபி, டீ போன்ற உணவுகளை கண்டிப்பாக கட் செய்ய வேண்டும். அதற்கு மாறாக கிரீன் டீ சாப்பிடலாம்.
காபின் நிறைந்த சொக்லேட் போன்ற உணவுப் பொருட்கள் இயற்கையிலேயே அமிலத் தன்மை நிறைந்தவை என்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது.
அசிடிட்டி உள்ளவர்கள் ஆல்கஹால் அறவே தொடக்கூடாது குறிப்பாக ஒயின் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரை.
|
முகப்பு |
No comments:
Post a Comment