Wednesday, 27 April 2011

கண்களை பாதுகாக்கும் முருங்கைப் பூ


கண்களை பாதுகாக்கும் முருங்கைப் பூ
[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஏப்ரல் 2011, 10:04.03 மு.ப GMT ]
பொதுவாக காய்களையும், கனிகளையும் உட்கொள்ளும் நாம் காய், கனி உருவாவதற்கு காரணமான பூக்களை உணவில் சேர்த்துக் கொள்வதில்லை.
அப்படி நாம் ஒதுக்கிவிட்ட பூக்களுக்கு பல மருத்துவக் குணங்கள் உள்ளன. முருங்கைப் பூவைப் பயன்படுத்தினால் கண்கள் குளிர்ச்சி பெறும். உடல் உறுப்புகள் சீரான முறையில் வளர்ச்சியடையும். அதிகமான பித்தத்தை போக்கும்.
வாழைப் பூ கை, கால் எரிச்சல், இருமல், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் போன்றவற்றை நிவர்த்தி செய்யும்.
மாதுளம் பூ பித்த வாந்தியை நிறுத்தும் தன்மை கொண்டது. இரத்த மூலம், உடல் வெப்பம் ஆகியவற்றைச் சீர் செய்யும். இது தவிர மாதுளம் பழத்தோல் சீதபேதி, வாய்ப்புண், இரத்த பேதி போன்றவற்றிற்கு மருந்தாகும்.
அகத்திப் பூ வெயில் காரணமாக ஏற்படும் பித்தத்தை அகற்றும். உடல் அழற்சியை விலக்கும். வேப்பம் பூ நீடித்த ஏப்பம், வாந்தி, குடற்பூச்சிகள் ஆகியவற்றை அகற்றும்.
புளியம் பூவைச் சமையலுக்குப் பயன்படுத்தினால் பித்தம் அகலும். நாவின் சுவையின்மை நீங்கும். வெங்காயப் பூ குன்ம நோய்களை போக்கும் மற்றும் குடல் தொடர்பான பல பிணிகளை நீக்கு

உணவில் காரத்தை குறைத்தால் எடை குறையும்


உணவில் காரத்தை குறைத்தால் எடை குறையும்
[ புதன்கிழமை, 27 ஏப்ரல் 2011, 11:26.31 மு.ப GMT ]
உணவில் சிவப்பு மிளகாய் தூளை மிதமாக சேர்த்துக் கொண்டால் பசி குறைந்து உணவின் அளவும் குறையும். அதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம் என்று இங்கிலாந்தில் நடைபெற்ற ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
பசி ஏற்பட்டால் அளவுக்கு அதிகமான அளவு உணவு சாப்பிடுவது வழக்கம். அதனால் உடல் எடை அதிகரித்து பல்வேறு நோய்கள் வந்து சேரும்.
பொதுவாக சதை போட விரும்பும் ஒல்லியானவர்கள் உணவுக்கு முன் பசியைத் தூண்டும் பானங்களை குடிப்பதுண்டு. அதற்கு நேர்மாறாக உடல் பருமனாக இருப்பவர்கள் உணவின் அளவைக் குறைக்க இயற்கையான வழி குறித்து இங்கிலாந்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
6 வாரங்கள் நடைபெற்ற இந்த ஆய்வில் சராசரி எடை கொண்ட 25 பேரில் மசாலா உணவு ரசிகர்கள், அதற்கு எதிரானவர்கள் என 2 குழுவினர் தெரிவு செய்யப்பட்டனர். மசாலா உணவு விரும்பிகளுக்கு 1.8 கிராமும், விரும்பாதவர்களுக்கு 0.3 கிராம் சிவப்பு மிளகாய் தூள் உணவுக்கு முன் தரப்பட்டது.
6 வாரங்களுக்கு பிறகு நடந்த சோதனையில் மிளகாய் தூள் குறைவாக சேர்த்தவர்களுக்கு பசி குறைந்ததும், அதிகம் சேர்த்தவர்களுக்கு பசி அதிகரித்ததும் தெரியவந்தது. பொதுவாக உடல் சூட்டை மிளகாய் தூள் அதிகரித்து அதிக கலோரிகளை இழக்கச் செய்வதால் அதிகமான அளவு பசி ஏற்படும். இதை மிளகாயில் உள்ள "கேப்சைசின்" என்ற பொருள் செய்கிறது.
மிளகாய் தூளின் அளவு குறைந்தால் பசி குறையும். அத்துடன் உடற்பயிற்சி, ஆரோக்கிய உணவு முறை ஆகியவற்றின் மூலம் உடல் பருமனை குறைக்க முடியும் என்று லண்டன் ஆய்வுக் குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்த

Monday, 25 April 2011

வர்மத்தின் மர்மங்கள் வர்ம சூட்சுமம்...


வர்மத்தின் மர்மங்கள்
வர்ம சூட்சுமம்...

              ர சுவாசத்தின் மூலம் பிராணன் உட்சென்று மூலத்தில் முழு நிலையடையும்.  இந்நிலைதான் ஆன்மீக சக்தியை பெற்றுத் தரும்.  இந்நிலையை அடைந்தவர்களே ஆன்மீகவாதிகள் என்று கடந்த இதழில் அறிந்தோம்.

சர சுவாசமே இறை சக்தி கிடைக்கும் பிரதான வழியாகும்.  சர சுவாசத்தின் மூலம் பிராண வாயுவை ஆதாரங்களுக்கு முழுமையாக செலுத்தி அதன் மூலமே ஞான நிலையை அடைந்தவர்கள் சித்தர்கள்.  தாங்கள் அடைந்த ஞான நிலையின் மூலம் கற்றுணர்ந்த சக்திகள் அனைத்தையும் கொண்டு மாபெரும் அற்புதமான மருத்துவங்கள், சோட-ஸ சாஸ்திரங்கள், அண்ட சராசரங்கள், கோள்களின் இயக்கங்கள், கிரகங்களின் மாறுதல்கள், அதனால் இந்த உலகில் ஏற்படும் சீதோஷ்ண நிலை மாற்றங்கள் பற்றி துல்லியமாக கணித்து கூறினார்கள்.  ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்கள் கணித்த அனைத்தும் இன்று நடைபெறுகிறது.

பிரபஞ்சங்களை அறிந்த சித்தர்கள் மனிதன் உட்பட அனைத்து ஜீவ ராசிகளையும் வாழ வைக்க எண்ணினர்.  ஆழ்நிலை தியானத்தில் அமர்ந்து அறிவாற்றலால் சக்திகளைப் பெற்று அறிவை அறிவால் அறிந்து அனுபவித்து உலகிற்கு சொன்னவர்கள்தான் சித்தர்கள்.

ஆன்மீக சக்தி என்பது வெறும் இறைசக்தியோடு நின்று விடுவதில்லை.  அதன் மேலும் உயிர்களின் உயிர் நாடிகள், அவற்றின் செயல் பாடுகளை துல்லியமாக அறிந்து கொள்ள வைப்பதே ஆன்மீக சக்தியாகும்.

இத்தகைய ஆன்மீக சக்தியை பெற இயலாதவர்கள்  தாங்கள் ஆன்மீக சக்தி பெற்றதாக  கூறிக் கொண்டு  பொய் வேடமிட்டு பல மூடர்கள் நாட்டில் உலாவி வருகிறார்கள்.  இவர்களைப் பற்றி அன்றே அகத்தியப் பெருமான் நாட்டு மக்களை  ஏமாற்ற பலர் இவ்வாறு காவி வேடமிட்டு திரிவார்கள், இவர்கள் பின்னாளில் மக்களால் ஒதுக்கப்பட்டு தெருவில் அலைவார்கள் என கூறியுள்ளார்.  இதைப் பற்றி சித்தர் பாடல் என்ற தலைப்பில் பல இதழ்களில் குறிப்பிட்டிருந்தோம். 
இப்படிப்பட்ட மனிதர்களால் தாங்கள் கண்ட அரிய பொக்கிஷங்கள் ஏதும் இவர்களுக்கு கிடைக்காமல் செய்யவே  மறைவில் வைத்தனர்.  அவ்வாறு மறைவில் வைத்த பொக்கிஷங்களில் வர்ம மருத்துவமும் ஒன்று.

மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்று வழி வகை சொன்னவர்கள் தான் சித்தர்கள்.  மேலும் அவர்கள்  நோயின்றி ஆரோக்கியமாக வாழ உடலின் அற்புத விஷயங்களையும், அதன் செயல்பாடுகளையும், பிரபஞ்சத்தோடு அதற்குறிய தொடர்புகளையும் தெளிவாக ஆராய்ந்து சொன்னார்கள்.  அவ்வாறு அவர்கள்  ஆராய்ந்து அறிந்து தெளிந்து சொன்னதுதான் ஆதாரங்கள் மற்றும் அதோடு தொடர்புடைய இயக்கங்கள்.  

ஆதாரங்களின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மற்றொன்றுடன் பின்னிப் பிணைந்து உடலில் பல இடங்களில் நிலை கொண்டுள்ளதை கண்டறிந்தனர்.  நரம்பு, எலும்பு சந்திப்புகளில் உயிர்நிலை ஒடுங்கியிருக்கும் சூட்சுமத்தைதான் வர்மம் என்று அழைத்தனர்.  இந்த வர்மத்தை பின்னாளில் வடமொழியில் மர்மம் என்று அழைக்கப்பட்டது.  உடலின் அனைத்து இயக்கங்களையும் சூட்சமமாக இயக்கும் சக்திதான் வர்மம் என்கிறார் அகத்தியர்.

இந்த வர்மப் புள்ளிகளில் தான் மனிதனை நோயின்றி ஆரோக்கியமாக வாழச் செய்கிறது.  இவற்றின் செயல்பாடுகள் இல்லாமல் பிராணன் செயல்பாடு நடைபெறாது.  உயிர்வாழ மிக முக்கிய புள்ளியாகவும் உயிர் முடிச்சாகவும் இருப்பது வர்மப் புள்ளிகள் தான்.

சித்தர்கள் தங்களை ஆழ்நிலை தியானத்தில் ஈடுபட்டு அதன் மூலம் மூலாதார சக்தியை தூண்டி ஆதாரங்களை தொடும் போதுதான் வர்ம புள்ளிகளின் சூட்சமம் அவர்களால் அறிய முடிந்தது.

இந்த வர்மப் புள்ளிகளை உயிர் நிலை ஒடுங்கும் இடங்கள் என சித்தர்கள் கூறினார்கள்.  உயிர் நிலை ஒடுக்கத்தை ஆராய்ந்த சித்தர்கள் அதன் செயல் பாடுகள் பாதிக்கப்பட்டால் மனிதனின் நிலை என்ன என்பதையும் முழுமையாக கணக்கிட்டனர்.

தங்கள் ஞானத்தின் பலனால் உலகின் பல பகுதிகளுக்கும்சென்று மருத்துவம், தத்துவம் என பல சேவைகள் புரிந்த சித்தர்கள் பலர் ஒரு சில புரியாத நோய்களால் தாக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் தவித்தனர்.  

இந்த நோய் எதனால் வந்தது, இதற்கு தீர்வு என்ன என்பதை அறிய முற்பட்டனர்.  அதுபோல் இன்றும் பலருக்கு புரியாத பல நோய்களின் தாக்குதல் இருந்துகொண்டு தான் இருக்கிறது.  இவை தற்போதைய விஞ்ஞான கருவிகளுக்கும் சோதனைகளுக்கும் அகப்படாத நோய்களாக உள்ளன.

இப்படி அக்காலத்திலும் புரியாத நோயாக உள்ள நோய்களுக்கு காரணம் என்ன என்பதை அறிய சித்தர்கள் பலர் குறவஞ்சி மலையில் குடிகொண்டு இருந்த அகத்தியரை நாடினர்.  சித்தர்களில் தலையாய சித்தர் அகத்தியர் அல்லவா?

இத்தகைய மர்மமான புரியாத நோய்கள் எந்த மருந்திற்கும் ஆட்கொள்ளாமல் இருப்பதையும், அதை எவ்வாறு பூரண குணமடைய செய்ய முடியும் என்பதையும் சித்தர்கள் அகத்தியரிடம் கேட்டதாக வர்ம ஏடுகள் கூறுகின்றன.

சித்தர்களின் புரியாத புதிருக்கு அகத்தியர் 
யான் இதை மறைவில் வைத்தேன்

என்றார்.  காலத்தின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு பூரண குணமடைய செய்யும் மகத்தான மருத்துவமான இந்த வர்ம பரிகார முறையை மறைவில் வைத்தேன் என்றார்.

அகத்தியர் கலம்தொட்டே வர்ம மருத்துவம் மறைமுக மருத்துவமாக இருந்துவந்துள்ளது.  பின்னாளில் அரசர்களுக்கு மட்டுமே செய்யப்படும் ராஜ வைத்தியமாக போற்றப்பட்டது.

சித்தர்கள், வர்ம மருத்துவத்தை மறைவில் வைத்த காரணத்தை வரும் இதழில் விரிவாக காண்போம்.

பார்த்தேன்... கேட்டேன்


பார்த்தேன்... கேட்டேன்...


               னித உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகளில்தான் எத்தனை வகை?

ஆனாலும், அத்தனைக்கும்  2000 ஆண்டுகளுக்கு முன்னரே விடை கண்டு, அவற்றை வழி முறைகளாகவும் எழுதி வைத்த நமது முன் னோர்களின் தீர்க்கத்தரிசனம் நம்மை பிரமிக்க வைக்கிறது.

அந்த பெண், தனது குழந்தையுடன்  என்னை வந்து சந்தித்து, நினைவிருக்கிறதா சார் என்று கேட்டபோது என்னால் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை.

காலம், நம் நினைவுப் பேழைகளில் இருந்து நம்மைக் கேட்காமலே பல சுவடுகளைக் களவாடிச் சென்று விடும் என்ற உண்மையை பலமுறை நான் உணர்ந்திருக்கிறேன்.

அந்த பெண், தன்னைக் குறித்து கேட்டபோதும், அதே சிந்தனைதான் எனக்கு வந்தது.  மிகவும் சிரமப்பட்டு என் நினைவின் அடுக்குகளைப் புரட்டிப் பார்த்த போதும் பலனில்லை, பின்னர் அவளே சொன்னபோதுதான், அந்த பெண் குறித்த சம்பவங்களின் பிளாஷ்பேக் எனக்குள் சுருள் சுருளாய் விரியத் தொடங்கின.

ஏழு அல்லது எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருச்சியில் இருந்து அந்த பெண்ணை அழைத்து வந்தனர்.  அந்த பெண்ணிற்கு 19 அல்லது 20 வயது இருக்கும்.  அவளுக்கு 13 வயதிலிருந்து இடைவிடாத விக்கல்.  பலமுறை என்னைக் கொன்றுவிடுங்கள் அம்மா.. இப்படி விக்கிக்கொண்டே எவ்வளவு காலம்தான் நான் உயிரோடு இருப்பது? என்று அவள் வேதனை பொறுக்க முடியாமல் கெஞ்சியபோது, பெற்றோரின் உயிரில் பாதி போய்விடும்.  இந்த பிரச்சனையால் அவளது படிப்பில் இருந்து  திருமணம் வரைக்கும் கேள்விக்குறியாகிவிட்டது.

வகைவகையான ஸ்கேன்கள், விதவிதமான பரிசோதனைகள், உலகத் தரம் வாய்ந்த மருத்துவ மனைகளில் சிகிச்சை என்று அவர்களின் பணம் கரைந்ததுதான் மிச்சம்.  விக்கல் நின்றபாடில்லை.  குடல் சிறுத்துவிட்டது என்றும், உணவுக் குழலில் அடைப்பு என்றும், பல விதமாகச் சொல்லி பயமுறுத்தியிருக்கிறார்கள்.  காரணமே தெரியாத இந்த விநோத நோயால் விரட்டப்பட்ட அந்த குடும்பம், வேதனையின் விளிம்புக்கே வந்து விட்டது.

எப்படியோ என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு கடைசி முயற்சியாக என்னிடம் வந்து சேர்ந்தார்கள்.  விக்கல் என்று சொன்ன உடனேயே அதற்கான காரணம் என்ன என்பதை என்னால் அறிய முடிந்தது.  நோய் நாடி, அது தணிக்கும் வாய் நாடி , என்பதுதானே நமது சித்தர்களின் வழிமுறை. அவர்கள் அறியாத நோயா ? மருந்தா?

அந்த பெண்ணின் நாடியை மட்டும் பிடித்துப் பார்த்தேன்.  அபாண வாயு சூடேறி, கூம்பு வாயுவுடன் கலக்கும்போதுதான் விக்கல் உண்டாகிறது என்று எளிமையாக சொன்னால் அவர்கள் நம்ப வேண்டுமே...  

விக்கலால் அந்த பெண் உடல் உலர்ந்து மெலிந்து போய் அந்த வயதிற்கு உரிதான இளமை தோற்றத்தில் குன்றி காணப்பட்டாள்.

மூன்று மாதம் சிகிச்சை மட்டும் எடுத்துக்கொள்ளும்படி கூறி, அதற்கான மருந்துகளைக் கொடுத்தேன்.

ஒரு மாதத்திலேயே குணம் தெரியத் தொடங்கியது.  விக்கல் போயே போச்... குடும்பமே குதூகலத்தில் துள்ளத் தொடங்கியது.  மூன்று மாதங்களில் முழுமையாக குணமடைந்தாள்.  ஆறுமாதங்களில் திருமணமும் கைகூடியது.  அழைப்பிதழுடன் அந்த குடும்பமே என்னை வந்து பார்த்த போது பெரும் மகிழ்ச்சி அடைந்தேன்.

சிகிச்சைக்குப் பிறகு அந்தப் பெண்ணின் உடல் அழகும், வயதுக்கேற்றாற்போல் வளர்ச்சியும் கொண்ட பெண்ணாக மாறினாள்.

பல ஆண்டுகள் கழித்து வந்து என்னைப் பார்த்து நினைவிருக்கிறதா என்று அதே மகிழ்ச்சியுடன் அந்த பெண் என்னைப் பார்த்துக் கேட்டபோதும், அதே பெருமிதம் என்னுள் படர்ந்தது.

எல்லாம் அந்த சித்தர்களின் சித்தம்.  என்னால் எதுவும் இல்லை.

குறிப்பு

விக்கல் என்பது குடலில் உள்ள அபான வாயு அலர்ஜி ஏற்பட்டு இரைப்பையை தாக்கி அதோடு கூம்பு வாயுவையும் சீர்குலைத்து உடலை மேல்நோக்கி தூக்குவதுதான்.
 

வர்ம பரிகார முறையில் சித்தர்களின் கூற்றுப்படி விக்கல் நோய்க்கு வர்ம மருத்துவத்தில் பல மருந்துகள் கூறப்பட்டுள்ள

உயிர்சத்து வைட்டமின் ‘D’


உயிர்சத்து வைட்டமின் ‘D’



                 டல், மன ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது உயிர்சத்துக்கள்தான்.  இவை நமது உடலில் பிற சத்துக்களுடன் சரி விகிதத்தில் சேர்வதனாலேயே நமக்கு முழுமையான ஆரோக்கியம் கிடைக்கிறது.  உடலுக்கு உயிர்சத்துக்களை நீண்டகாலம் தேக்கி வைக்கும் தன்மை கிடையாது.  

எனவே தினமும் உயிர்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், கீரைகள், பழங்கள் மற்றும் குறிப்பிட்ட சில அசைவ உணவுகளை சாப்பிடுவதாலும் மட்டுமே கிடைக்கின்றன.

இந்த உயிர்சத்துக்களான வைட்டமின்கள் பற்றி நாம் ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம்.  இந்த இதழில் உடலுக்கு மிகவும் முக்கியமான உயிர்சத்தான வைட்டமின் ‘D’ பற்றி அறிந்து கொள்வோம்.

வைட்டமின் ‘D’

மனித உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் அழகையும் கொடுக்கிறது.  எலும்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாததாகும். நோய்களைத் தடுக்கக்கூடிய ஆற்றல் இதற்குண்டு.  

வைட்டமின் ‘D’- யை நமது உடல் சூரிய ஒளியின் உதவி கொண்டு உற்பத்தி செய்து கொள்கிறது.  அதிகாலை சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் உடலின் சருமப் பகுதியில் படுகிறது. சருமத்தில் உள்ள திசுக்களால் வளர்சிதை மாற்றம் அடைந்து வைட்டமின் ‘D’ உற்பத்தி செய்யப்படுகிறது.

வைட்டமின் ‘D’ பொதுவாக இருவகைப்படும்.

வைட்டமின் ‘D2’, வைட்டமின் ‘D3’

வைட்டமின் ‘D2’ தாவரங்களின் மூலம் அதாவது காய், கனிகள், கீரைகள் மூலம் உடலுக்கு கிடைக்கிறது.

வைட்டமின் ‘D3’ சூரிய ஒளியின் மூலம் தான் உடலுக்கு கிடைக்கிறது.

வைட்டமின் ‘D3’ ஆனது உடலின் இரத்த ஓட்டத்தை சீர்செய்து உடலுக்குத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ் போன்றவற்றை உட்கிரகிக்க உதவுகிறது.

வைட்டமின் ‘D’-ன் பயன்கள்

· எலும்புகளை பலப்படுத்தும்

· உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.

· எலும்பு புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது.

· குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.

· வயதானவர்களின் எலும்பு பலவீனத்தைப் போக்குகிறது.

· தசைகளின் இளக்கத்தைத் தடுக்கிறது.

· மூட்டுகளில் உண்டாகும் வலியை தடுக்கும் குணம் இதற்குண்டு.

· நரம்பு, எலும்பு சந்திப்புகளை பலப் படுத்துகிறது.

· சருமத்தை நோயிலிருந்து பாதுகாக்கிறது.  

· ரத்தத்தில் உள்ள சர்க்கரையை எரிக்க வைட்டமின் டி மிகவும் பயன்படுகிறது.

· சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்குகிறது.  திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

வைட்டமின் ‘D’சத்து நிறைந்துள்ள உணவுகள்

பால், மீன், முட்டை, மீன் எண்ணெய், மாமிசம், வெண்ணெய், காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகள், கொட்டைகள் போன்றவற்றில் அதிகம் கிடைக்கிறது.

ஆனால் இயற்கையாக கிடைக்கும் சூரிய ஒளியின் மூலமே அதிக வைட்டமின் ‘D’ உடலுக்கு கிடைக்கிறது.

வைட்டமின் ‘D’ உடலுக்கு கிடைக்க தினமும் காலை அல்லது மாலை வெயிலின் ஒளியானது உடம்பில் படுமாறு பார்த்துக்கொள்வது நல்லது.

வைட்டமின் ‘D’ சத்து குறைந்தால்

வைட்டமின் ‘D’ குறைந்துவிட்டால், நரம்புகளில் பாதிப்புகள், முதுகெலும்பு கோளாறு, பற்கள் கோளாறு முதலியவை உண்டாகும்.  இது தவிர பித்த நீரில் கோளாறு உருவாகும்.  

பெரியவர்களுக்கு அடிக்கடி சோர்வு ஏற்படுதல், சர்க்கரையானது அடிக்கடி சிறுநீர் மூலமாக வெளித்தள்ளப்படுதல், முதுமைத்தன்மை விரைவில் ஏற்படுதல் போன்றவை ஏற்படும்.

இந்த வைட்டமின் ‘D’ சத்து குறைந்தால் ரிக்கட்ஸ் என்ற நோயின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்.
பொதுவாக வைட்டமின் ‘D3’ தான் குடலிலிருந்து கால்சியத்தை உறிஞ்ச பயன்படுகிறது.  இதனால் பாராதைராய்டு சுரப்பிகள், பாராத்தார்மோன் அதிகமாக சுரந்து, எலும்பிலுள்ள கால்சியத்தைக் கரைத்து இரத்தத்தில் அதன் அளவை குறைக்கிறது.  இதனால் எலும்புகள் பாதிக்கப்பட்டு, வளர்ச்சி குன்றி வலுவிழந்த விடுகின்றன.  இதற்கு ரிக்கட்ஸ் என்று பெயர்.

ரிக்கட்ஸ் நோயின் அறிகுறிகள்

ஒன்றரை வயதில் மூடவேண்டிய உச்சந்தலைக் குழி மூடாமல் இருத்தல்.

தலை எலும்புகளின் வளர்ச்சி குன்றி, தலையில் முன் பக்கம் பெரிதாக இருத்தல், சத்து குறைவான நிலை முக்கியமாக இரும்பு மற்றும் புரதக் குறைவு உண்டாதல்.

கை, கால் முட்டி தடித்து இருத்தல், நெஞ்சு எலும்புக் கூடாக இருத்தல்.  கூன் விழுந்த முதுகு இவை அனைத்துமே ரிக்கட்ஸின் அறி குறிகளாகும்.

நீரிழிவு உயர் இரத்த அழுத்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைட்டமின்  ‘D3’ உற்பத்தி குறைவாகவே இருக்கும்.

வைட்டமின் ‘D’ சத்துள்ள உணவுகளை உண்டு அதன் பலனை அடையலாம்.

பல் பாதுகாப்பு


பல் பாதுகாப்பு

              சென்ற இதழில் பற்குச்சி கொண்டு பல் துலக்கும் பல நல் வழி முறைகளை நாம் அலசினோம்.

இதற்கு  நீங்கள் அனைவரும் சரியான பல் துலக்கும் முறையினை அறிந்து, தெளிந்து, கடைப்பிடித்து, நற்பயனை அடைய ஆரம்பித்திருப்பீர்கள் என நம்புகின்றேன்.

சரி...

பற்குச்சி உங்கள் பற்களில் உள்ள பிளேக்சை (Plaques)  அகற்றிவிடும் என்று தப்போது நம்புகிறீர்களா?

அப்படி நீங்கள் நினைத்திருப்பீர்களேயாயின், தெரிந்துகொள்ளுங்கள்.  பற்குச்சியால் மட்டுமே பிளேக்சை முழுமையாக அகற்றிவிட முடியாது.  வெளிப்புறங்களில் உள்ள பற்குச்சுகளால் தொடக் கூடிய பிளேக்சை மட்டுமே அகற்ற அது மிக மிக சரியான வழியாகும்.  பற்களுக்கு இடையே யுள்ள (Inter dental surfaces)  இடைவெளி களிலுள்ள பிளேக்சை பற்குச்சுகளால் தொடவும் முடியாது, முழுவதுமாக அகற்றவும் முடியாது.

எனவே, இந்த இடுக்குகளில் உள்ள பிளேக்குகளை அகற்ற, சிறப்பு சாதனங்கள் உள்ளன (inter dental cleaning aids)

தற்போது பலராலும் வாங்க முடிந்த, வாங்கி உபயோகிகக்கூடிய, சாதனமான இதை, சரியாக உபயோகிக்கும் முறைகளை பற்றி பார்ப்போமா..

அத்தகைய ஓர் எளிய, சிறிய, சீரிய சாதனமே பிளாசிங் (Flossing)  எனப்படும்.  இது உலகெங்கும் பரவலாக உபயோகப்படுத்தப்பட்டு வருகின்ற ஒன்றாகும்.  இதற்கு பயன்படுத்தப் படும் பொருளை (Dental floss)டென்டல் பிளாஸ் என்பர்.

சில நாடுகளில் இம்முறையினை பற்கள் துலக்கும்போதே உபயோகிக்கப் பழகியுள்ளனர்.

இதனை உபயோகிக்க, சின்னஞ்சிறு சிறார்களை சிறு வயது முதலே பழக்கிவிடுகிறார்கள்.  அது என்ன பார்ப்போமா?

பிளாசிங் செய்யும் செம்மையான வழிகள்

மிக சிறிய நாடா போன்ற பொருளே டெண்டல் பிளாஸ் ஆகும்.  இது இன்று அனைத்து அங்காடி மற்றும் மருந்துக் கடைகளிலும் தாரளமாக கிடைக்கிறது.  இதனைக்கொண்டு எப்படி நாம் நல்ல முறையில் பிளாசிங் செய்ய ஆரம்பிக்கலாம் என்பதை அறிவோம்.

ஒரு 45 செ.மீ. அல்லது 18 இஞ்ச் நீளம் கொண்ட பிளாசை எடுத்துக்கொண்டு அதனை 10 செ.மீ. அல்லது 4 இஞ்ச் நீளத்தில் இரு முனைகளிலும் நடு விரலில்சுற்றிக் கொண்டு கடைசி மூன்று விரல்களால் மடித்துப் பிடித்துக்கொண்டு 2 இஞ்ச் நீளத்தில் பிளாசை இரு ஆள்காட்டி விரல் கொண்டு பிடித்துக்கொண்டு பற்களின் இடையே செலுத்தி பற்களிலிருந்து ஈறுகளை நோக்கி நகர்த்தி தேய்க்கவேண்டும்.  மேலும் கீழும் மெதுவாக இம்முறையில் பிளாசை ஒவ்வொரு பல்லையும் சுற்றி  மெல்ல வளைத்து  மெதுவாக தேய்த்து விடவேண்டும்.  வேகமாகவோ, பலமாகவோ தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.  இல்லையேல் அது மெல்லிய ஈறுகளை அறுத்து ஊறு விளைவிக்கும்.

பிளாசினை உபயோகித்துக் கொண்டே மெதுவாக நகர்த்தி, ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு சுற்றி சுற்றி நகர்த்ததிக் கொள்ள வேண்டும்.  இது போல் அனைத்து பற்களின் இடுக்குகளிலும் பிளாசிங் செய்ய வேண்டும்.  நன்றாக தேய்த்தப் பின் பிளாசை முன்னும் பின்னும் நகர்த்திக்கொண்டே ஈறுகளுக்கு எதிர்புறமாக நகர்த்தி வெளியே எடுத்து விடலாம்.

பிளாசிங் செய்யாவிடில் என்ன நேரிடும்

பிளாசிங் செய்யாவிடில் இரு பற்களின் இடுக்குகளிலும் பிளேக்குகள் தங்கி கெட்டிப்பட்டுவிடும்.  இந்நிலையில் பல் மருத்துவரால் மட்டுமே  அகற்ற முடியும் என்ற நிலைக்கு அதனை தள்ளியிருப்போம்.  நாளடைவில் பாக்டீரியாக்கள் இங்கு தங்கி ஈறுகளை உறுத்தி, ஊறுவிளைவித்து, பற்கள் வலுவிழந்து ஆடவும், எலும்புகள் தேயவும், வாய் நாற்றம் வீசவும் காரணமாகிவிடும்.

பற்களைத் தேய்ப்பதாலும், பிளாசிங் செய்வதாலும், பற்களுக்கு ஊறுவிளைவிக்கும் பாக்டீரியாக்களை வெளியேற்றி வாய் நாற்றம், ஈறு உபாதைகள், மற்றும் பல் இழப்பு இவைகளை தவிர்த்து, இனிய புன்னகையை வாழ்நாள் முழுதும் நமதாக்கிக்கொண்டு இன்புற்று வாழ்வோம்.

குறிப்பு

நிறைந்த முழு பயனை அடைய பற்களை முதலில் துலக்கி, பின்னர் உடனே பிளாசிங் செய்து முடித்து, அதன்பின் வாயினை நன்றாக கொப்பளித்து விடவேண்டும்.

உங்களின் வினாக்களுக்கு விடை தெரிய தொடர்பு கொள்ள வலை தள விலாசம்.

பாட்டி வைத்தியம்


பாட்டி வைத்தியம்


             கோடை  விடுமுறை தொடங்கி விட்டதால், பாட்டி படு பிஸியாகிவிட்டாள்.

ஊரிலிருந்து பேரக்குழந்தைகள் என பெரும் கூட்டமே வந்து குவிந்து விட்டதால், அவர்களைக் கவனிக்கவே பாட்டிக்கு நேரம் சரியாக இருந்தது.

மொட்டை மாடியில் பேரன் பேத்திகள் புடை சூழ வடகம் போட்டுக் கொண்டிருந்தாள் பாட்டி.  வெயில் வருவதற்கு முன் வடகத்தை போட வேண்டும் என்ற பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தாள்.  இந்த வயதிலும், அவளது விரல்கள் செயல்படும் நளினத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது மழலையர் கூட்டம்.

“என்ன பாட்டி... நீ போடுற வடகத்தின் வாசனை ஊரையே தூக்குது.  தெரு முனையில வர்ற போதே, பாட்டி வடகம் போட்டுக் கிட்டுருக்குங்குறதை அந்த வாசனையே சொல்லுதே...”  பாட்டியின் கைப்பக்குவத்தை புகழ்ந்தபடியே வந்து உட்கார்ந்த சுசீலா, பாட்டிக்கு ஒத்தாசை செய்யத் தொடங்கினாள்.  

சுசீலாவைப் பார்த்து... “வாடியம்மா” என்று வரவேற்ற பாட்டி, மேலும் பேசத் தொடங்கினாள்.

“ஆமாடியம்மா... என்ன பண்றது... ஏதோ இந்தக் கட்டை கெடக்குற வரைக்கும் புள்ளைங்க ஆசைக்கு எதையாவது செஞ்சு போட்டுக்குட்டு இருப்பேன்...  எனக்குப் பெறகு யாரு இவங்களையெல்லாம் கொண்டாடப் போறாங்க... அது கெடக்கட்டும்... நீ என்னடியம்மா காலங்காத்தால இந்த பக்கமா வந்துருக்கே...” என்று வாஞ்சையுடன் கேட்டாள்.

“ஒண்ணுமில்ல பாட்டி....” என்று சொல்லியபடியே தயக்கத்துடன் அக்கம் பக்கம் பார்த்தாள் சுசீலா.

“ஏண்டியம்மா தயங்குறே... சின்னக் குழந்தைங்க தானே இருக்குதுங்க... நீ சும்மா சொல்லு...” என்று அவள் தயக்கத்தைப் போக்கிய பாட்டி, வடகம் போடுவதை தற்காலிகமாக நிறுத்தி விட்டு சுசீலா சொல்ல வந்ததை கவனித்தாள்.

“அது இல்ல பாட்டி... எனக்குத்தான் இந்த வெயில் அதிகமானதுல இருந்தே சிறுநீர் சரியா போகல... ஒரே கடுப்பா இருக்கு... சிறுநீர் கழிச்சப்புறம் ஒரே எரிச்சல், அடிவயிறு வலி ஊசியால குத்துறமாதிரி இருக்கு... அதுக்குத்தான் ஏதாவது மருந்து கேட்டுப் போகலாம்னு வந்தேன்...” என்றாள்.

“இதுதானா, கவலைப்படாதடியம்மா... அதுக்கு நான் மருந்து சொல்றேன்.. சரியாப் போகும்..  நீர்க்கடுப்புக்கு வெயில் மட்டுமே காரணம் இல்ல.. நேரத்துக்கு சாப்பிடாம இருக்குறது.  சரியான தூக்கமில்லாம இருக்குறது... தேவையற்ற சிந்தனை, மன உளைச்சல்.. இதனாலேல்லாம் தான் நீர்க்கடுப்பு  வருது...  மொதல்ல இந்த பழக்கங்கள மாத்திக்கணும்...”

“ நீர்க்கடுப்புக்கு

சீரகம் 

சோம்பு

வெந்தயம்

சின்ன வெங்காயம்

கொத்தமல்லி விதை

இது எல்லாத்தையும் சம அளவு எடுத்து அரைச்சு மோர் அல்லது தயிர்ல கலந்து குடிக்கலாம்.    இல்லாட்டியும் இதையெல்லாம் பொடியாக்கி தேனிலும், நெய்யிலும் கலந்து சாப்பிடலாம்.  நீர்க்கடுப்பு உடனே குணமாயிடும்...”

“வேனல் காலத்துல நெறயா தண்ணி குடிக்கணும்...”

பாட்டி சொன்னதைக் கேட்ட சுசீலா..  அவளுக்கு ஒத்தாசையாக வடகத்தை வேகமாக தட்டிக் கொடுத்துவிட்டுச் சென்றாள்.

வடகத்தைத் தட்டலாம். பாட்டி சொல்லைத் தட்ட முடியு

முகம் பொலிவு பெற..


முகம் பொலிவு பெற..


                  கத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழிக்கேற்ப, உடலின் உள்ளே என்ன பாதிப்பு இருந்தாலும் அது முகத்தில் பிரதிபலிக்கும். 

சிலர் இராசாயன பூச்சுக்கள் மூலம் முகத்தை பொலிவாக்கலாம் என்று எண்ணி இவற்றை அதிக விலைக்கு வாங்கி உபயோகப்படுத்துகின்றனர்.  ஆரம்பத்தில் முகம் நன்கு பொலிவாக காணப்படும்.  ஆனால் சில நாட்கள் செல்லச்செல்ல இந்த ரசாயனமுகப்பூச்சுகள் முகத்தை பாழடித்துவிடும்.

முகப் பொலிவு இழக்க மலச்சிக்கலும் ஒரு காரணமாகும்.  மலச்சிக்கலைப் போக்கினாலே முகத்தில் உண்டாகும் முகப்பரு, கரும்படலம், கருந்திட்டுக்கள் போன்றவை ஏற்படாது.

ஆனால் முகத்தில் இதன் பாதிப்பு தெரியவந்தால் மலச்சிக்கலைப் போக்குவதுடன் இரசாயனம் கலவாத மூலிகைப் பூச்சுக்களை பயன்படுத்தி முகத்தை பொலிவுபெறச் செய்ய முடியும்.

மலச்சிக்கலைப் போக்க எளிதில் சீரணமாகக்கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.  அதிகம் நீர் அருந்த வேண்டும்.

முகத்தில் முகப்பரு, அலர்ஜி, முகச் சுருக்கம், கருமை, எண்ணெய் வடிதல் இருந்தால்

ஆவாரம் பூவை நிழலில் உலர்தி காயவைத்து பொடி செய்து எடுத்து அதனுடன் கடலை மாவு கலந்து முகத்தில் தேய்த்து அரை மணி நேரத்திற்கு  பிறகு முகத்தை இளம் வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் முகப்பரு, முகச்சுருக்கம் போன்றவை மாறி முகம் பொலிவுபெறும்.

முகச் சுருக்கம் நீங்க

சிலருக்கு முகச் சுருக்கங்கள் ஏற்பட்டு 25 வயதிலேயே முதுமையடைந்தவர் போன்ற தோற்றத்தை உண்டாக்கும்.  இவர்கள் 

நல்லெண்ணெய் - 10 மி.லி.

தண்ணீர் - 10 மி.லி.

எடுத்து ஒன்றாக கலக்கிக் கொண்டேயிருந்தால் அது வெண்மையாகி வெண்ணெய் போல் மாறும்.  இதை முகத்தில் நன்கு பூசி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி வரவேண்டும்.  இவ்வாறு தொடர்ந்து செய்துவந்தால் முகச் சுருக்கம் நீங்கும்.

பார்லி மாவு - 5 கிராம்

தேன் - 5 மி.லி

முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து ஒன்றாக்கி நன்கு கலக்கி முகத்தில் பூசி 10  நிமிடங்கள் கழித்து இளம் சூடான நீரில் கழுவி வந்தால் முகச்சுருக்கம் மறையும்.

முகப்பரு நீங்க

கஸ்தூரி மஞ்சளை நன்கு அரைத்து அதனுடன் வெண்ணெய் கலந்து நன்கு கலக்கி முகத்தில் பருவுள்ள இடங்களில் பூசி சீயக்காய் பொடியைக் கொண்டு நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.  இவ்வாறு தொடர்ந் செய்துவந்தால் முகப்பரு நீங்கும்.

முகப்பரு உள்ளவர்கள் குங்குமத்திலேபம் என்ற ஆயுர்வேத மருந்தை வாங்கி தினமும் இரவு படுக்கைக்கு செல்லும் முன் முகத்தில் தடவி வந்தால் முகப்பருக்கள் நீங்கும்.

பாதாம் எண்ணெயுடன் தேன் கலந்து பூசி வந்தால் முகம் நல்ல நிறமாகவும் பிரகாசமாகவும், அழகாகவும் தோன்றும்.

கரும்புள்ளி நீங்க

கருஞ்சீரகத்தைபொடித்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டி எடுத்து தேவையான அளவு பால் சேர்த்து நன்கு குழைத்து முகத்தில் பூசி 1 மணி நேரம் ஊறவைத்து பின் இளம் சூடான நீரில்  முகத்தை கழுவி வந்தால் கரும்புள்ளிகள் நீங்கும்.

கருந்தேமல் மறைய

கருந்தேமல் உள்ளவர்கள், இரவு படுக்கைக்குச் செல்லும் முன் கொத்தமல்லி கீரையை சாறு பிழிந்து தேமல் உள்ள இடங்களில் பூசி வந்தால் கருந்தேமல் மாறும்.

நாயுருவிச் செடியின் இலைகளை கசக்கி சாறு எடுத்து தேமலின் மேல் பூசி வந்தால் தேமல் குணமாகும்.

உள்ளங்கை சொசொரப்பு நீங்க

எலுமிச்சம் பழச்சாற்றை உள்ளங்கைகளில் தேய்த்து வந்தாலே உள்ளங்கை சொரசொரப்பு நீங்கி உள்ளங்கை மிருதுவாகும்.

ஆரஞ்சு



ஆரஞ்சு 


             ழங்கள்  இயற்கையின் அருட்கொடையாகும்.  பழங்கள்தான் மனிதர்களுக்கு சமைக்காத உணவு.  நன்கு கனிந்த பழங்களில் மனிதனுக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் நிறைந்துள்ளன.  நோயின் பிடியில் பாதிக்கப்பட்டவர்களும், நீண்ட ஆரோக்கியத்தை பெற விரும்புகிறவர்களும் கண்டிப்பாக தினமும் பழங்களை சாப்பிட வேண்டும்.

சிலர் பழங்களை சாப்பிடாமல் ஜூஸ் செய்து சாப்பிடுகின்றனர்.  இதில் பழங்களின் முழுமையான சத்துக்கள் உடலுக்கு கிடைக்காமல் போய் விடுகின்றன.  முடிந்தவரை பழங்களை நேரடியாக உண்பதே நல்லது.  பழங்கள்  ஒவ்வொன்றும் பல மருத்துவப் பயன்களை தன்னகத்தே கொண்டுள்ளது.  இந்த இதழில் நமக்கு மிகவும் பரிச்சயமான பழமும், எல்லோரும் விரும்பி சாப்பிடும் பழமுமான ஆரஞ்சு பழத்தின் பயன்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.

ஆரஞ்சு பழத்திற்கு கமலா பழம் என்ற வேறு பெயரும் உண்டு.  மஞ்சளும் சிவப்பும் கலந்து பந்து போல் அனைவரையும் கவர்ந்திழுக்கும் பழமாகும்.  அதன் மேல் தோல் நன்கு கனமாக காணப்படும்.  ஆனால் எளிதில் இதன் தோலை உரித்துவிடலாம்.

ஆரஞ்சு பழத்தின் நறுமணம் அனைவரையும் கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டது.

ஆரஞ்சு பழத்தில் உடலுக்குத் தேவையான  அனைத்து உயிர்ச்சத்துக்களும் நிறைந்துள்ளன.

100 கிராம் எடை கொண்ட பழத்தில்

நீர்ச்சத்து     - 88.0 கிராம்

புரதம்    - 0.6 கிராம்

கொழுப்பு    - 0.2 கிராம்

தாதுப் பொருள்    - 0.3 கிராம்

பாஸ்பரஸ்    - 18.0  மி.கிராம்

சுண்ணாம்புச் சத்து     - 24.0 மி.கிராம்

கரோட்டின்     - 1100 மி.கிராம்

சக்தி    - 53.0 கலோரி

இரும்புச் சத்து    - 0.2 மி.கிராம்

வைட்டமின் ஏ     - 99.0 மி.கிராம்

வைட்டமின் பி    - 40.0 மி.கிராம்

வைட்டமின் பி2    - 18.0 மி.கிராம்

வைட்டமின் சி    - 80 மி.கிராம்

ஆரஞ்சு பழத்திலுள்ள மிக முக்கிய வைட்டமின் - வைட்டமின் சி.    இது மனித உடலில் Collagen  என்ற வளர்ச்சி உண்டாக்கக்கூடிய சத்து கிடைக்கச் செய்கிறது. இந்த Collagen வளரக்கூடிய எலும்புகள் தசை நார்கள், ரத்தக் குழாயின் உட்புறச் சுவர் இவற்றின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி தவிர மிக முக்கியமாக கருதப்படுவது ஆன்டி ஆக்சிடென்ட் எனப்படும் சத்தாகும்.  இது புற்றுநோயைத் தடுக்கக்கூடிய மிக முக்கிய காரணியாகும்.  ஆரஞ்சில் மொத்தம் 170  Phytonutrients  மற்றும் 60 Limonoids உள்ளதாக அறிவியல் வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர்.   மேலும்  என்ற ரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்கக்கூடிய  மிக முக்கிய பொருள் ஆரஞ்சில் உள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

ஆரஞ்சு பழத்திற்கு உரிய நிறத்தைக் கொடுக்கக்கூடிய பொருள் Beta-cryptoxanthin இது நுரையீரல் புற்றுநோயைத் தடுக்க வல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

குழந்தை வளர்ச்சிக்கு

குழந்தைகளின் வளர்ச்சி சீராகவும் ஆரோக்கியமாகவும் இருக்க ஆரஞ்சு மிகவும் உதவுகிறது.   இப்பழத்தை குழந்தைகளுக்கு நேரடியாகவோ அல்லது சாறு எடுத்தோ கொடுத்து வந்தால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  இதனால் குழந்தைகள் எப்போதும் சுறுசுறுப்புடனும், நோயின் தாக்குதலின்றியும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

தூக்கத்தை வரவழைக்கும் மாமருந்து

சிலருக்கு படுக்கைக்கு சென்றவுடன் தான் நேற்றைய, நாளைய பிரச்சனைகள் மனதில் தலைதூக்கும்.  இதனால் குளிர் சாதன அறையில் நல்ல படுக்கையில் படுத்தாலும் கூட தூக்கம் வராமல் தவிப்பார்கள்.  அதிகளவு தூக்கம் தரக்குடிய மருந்துகளை சாப்பிட்டாலும் தூக்கமின்றி காணப்படுவார்கள்.  இவர்கள் இரவு படுக்கைக்கு செல்லும் முன் ஆரஞ்சு பழச்சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் சுகமான நித்திரை காணலாம்.

மெலிந்த உடல் பலமடைய

பலர் மாதக்கணக்கில் நோயின் தாக்குதலுக்கு ஆட்பட்டு உடல் மெலிந்து காணப்படுவார்கள்.  இவர்களுக்கு இரத்தச் சோகை உண்டாகியிருக்கும்.  இதனால் எப்போதும் சோர்ந்தே காணப்படுவார்கள்.  உடலுக்கு ஊட்டம் தரும் மருந்துகள் டானிக்குகள் என எதைச் சாப்பிட்டாலும் உடல் தேறாமலேயே இருப்பார்கள்.  இப்படிப்பட்டவர்களுக்கு மிகவும் ஏற்ற எளிய டானிக் தான் ஆரஞ்சு பழச்சாறு.

இப்பழத்தின் சாறு எடுத்து அதில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையும் பருகி வந்தால் உடல் தேறும்.  தேகம் சுறுசுறுப்படையும்.  புத்துணர்வு பெறும்.  புது இரத்தம் விருத்தியாகி நல்ல உடல் நிலைக்கு கொண்டுவரும்.

இந்த ஆரஞ்சு பழச்சாற்றினை ஒரு மண்டலம் தேன் கலந்து அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் பலமடையும்.  நரம்புகள் பலம் பெறும்.

மேனிக்கு அழகூட்ட

தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற அசுத்த நீர் வியர்வையிலும் சிறுநீரிலும் வெளியேறும்.  இதனால் சருமம் பளபளப்புடனும், நோயின் தாக்குதலின்றியும் இருக்கும்.  தோல் சுருக்கங்கள் நீங்கும்.  தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.

பெண்களுக்கு

மாதவிலக்குக் காலங்களில் அதிக உதிரப் போக்கால் சிலர் சோர்ந்து காணப்படுவார்கள்.  இதனால் அதிக மன உளைச்சல், எரிச்சல் கொள்வார்கள்.  இவர்கள் ஆரஞ்சு பழச் சாற்றில் காய்ச்சிய பால் அல்லது தேன் கலந்து அருந்தி வந்தால் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறலாம்.  ஆரஞ்சு தினமும் உண்பதால் முகத்தில் அழகு கூடும், அதிக தாகத்தைத் தணிக்கும் வாய் நாற்றத்தைப் போக்கும், உடல் வறட்சியை நீக்கும், உடல் சூட்டைத் தணிக்கும், தலைச் சுற்றல் நீங்கும்

பல் உறுதிபட

ஆரஞ்சு பழத்தின் தோலை உலர்த்தி, ஓமம், இந்துப்பு, சுக்கு சேர்த்து இடித்து பல்பொடியாக்கி தினமும் அதில் பல் தேய்த்து வந்தால் பற்கள் பளிச்சிடும். 

கற்ப மூலிகை - துளசி...



கற்ப மூலிகை - துளசி...


              ற்பம் என்பது உடலை  கல் போல ஆக்குவது. அப்படிப்பட்ட மூலிகைகள் பற்றி நாம் ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம்.  இந்த இதழில் துளசி பற்றி தெரிந்துகொள்வோம்.

துளசி (Ocimum sanctum)மூலிகைகளின் அரசியாக போற்றப் படுகிறது. துளசியை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.  பலரது வீடுகளின் கொல்லைப் புறத்தில், துளசிமாடம் அமைந்துள்ளதை இன்றுகூட நாம் காணலாம்.  

துளசியானது இடியைத் தாங்கும் சக்தி கொண்டது என அறிவியல் அறிஞர்கள் அண்மையில் கண்டறிந்துள்ளனர்.  இதனால் தானோ என்னவோ வீடுகளில் துளசி வளர்த்திருப்பார்கள் என தோன்றுகிறது.

துளசியின் மணம் உடலுக்கு உற்சாகத்தைக் கொடுக்கக் கூடியது.

இதற்கு அரி, இராமதுளசி, கிருஷ்ண துளசி, திருத்துளாய், துளவு, குல்லை, வனம், விருத்தம், துழாய், மாலலங்கர் என பல பெயர்கள் உண்டு.

துளசி இந்தியா முழுவதும் காணப்படும் செடி வகையாகும்.  இதில் நற்றுளசி, செந்துளசி, நாய்த்துளசி, நிலத்துளசி, கல்துளசி, முள்துளசி, கருந்துளசி என பல வகைகள் உள்ளன.

துளசியை பொதுவாக தெய்வீக மூலிகை என்றே அழைப்பார்கள்.  கற்ப மூலிகைகளில் இதற்கு தனிச்சிறப்பு உண்டு.  இந்து மதத்தினர்,  இலட்சுமி தேவியின் அம்சமாகவே எண்ணி இதனை வழிபடுகின்றனர்.

துளசியின் பயன்கள்

· இருதயம், ரத்த நாளங்கள், கல்லீரல், நுரையீரல் ஆகியவற்றை பலப்படுத்தும் தன்மையும் ரத்த ஓட்டத்தை சீராக்கும் தன்மையும்,  ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீர்படுத்தும் தன்மையையும் கொண்டது.

· துளசி உடல் சூட்டை சீரான நிலையில் பாதுகாக்கிறது.

· நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கிறது.  

· மன அழுத்தத்தைப் போக்கும்தன்மை கொண்டது.  

·  உடலுக்கு பலத்தைக் கொடுக்கிறது.  

· இருமல் மற்றும் சுவாச நோய்களுக்கு அரு மருந்தாக பயன்படுகிறது.

· கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொண்டது.

· ஜூரத்தைக் குறைக்கும் குணம் கொண்டது. 

· வயிற்றுப் புண், வாய்ப்புண்களை குணப் படுத்தும்.

துளசியை கற்ப முறைப்படி தினமும் சாப்பிட்டு வந்தால் நோயில்லா பெருவாழ்வு வாழலாம்.

குழந்தைகளுக்கான மார்புச்சளி நீங்க

துளசி இலையை சாறு எடுத்து அதனுடன் கற்பூரவல்லி சாறு கலந்து சூடாக்கி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு உண்டாகும் மார்புச்சளி, மூச்சு விட முடியாமை, சளியினால் மூச்சுத்திணறல் போன்றவை நீங்கும்.  மார்புச்சளி வெளியேறும்.

துளசிச் சாறுடன் எலுமிச்சை சாறு சம அளவு சேர்த்து அதனுடன் தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்வு நீங்கி உடல் புத்துணர்வடையும்.

பெண்களுக்கு

துளசியிலை, வில்வ இலை, வெற்றிலை சம அளவு எடுத்து இடித்து சாறு பிழிந்து அதனுடன் சம அளவு விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு காய்ச்சி ஆறியபின் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு,  தினமும் காலையில் 1 தேக்கரண்டி எடுத்து  அருந்தி வரவேண்டும்.  இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) அருந்தி வந்தால் பெண்களுக்கு உண்டாகும் பெரும்பாடு (இரத்தப் போக்கு) குணமாகும்.

ரத்த அழுத்தம் குறைய

இரத்த அழுத்தம் உள்ளவர்கள் துளசி இலை, முற்றிய முருங்கை இலை சம அளவு எடுத்து இடித்து 50 மி.லி அளவு சாறில் 2 சிட்டிகை சீரகப்பொடி சேர்த்து காலை, மாலை என இருவேளை உட்கொள்ள வேண்டும்.  இவ்வாறு தொடர்ந்து 1 மண்டலம் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.  இது சாப்பிடும் காலங்களில், உப்பு, காரம், புளியைக் குறைப்பது அவசியம்.

உடல் எடை குறைய

துளசி இலைச்சாறுடன் எலுமிச்சம் பழம் சேர்த்து சிறிது சூடாக்கி அதனுடன் தேன் கலந்து, உணவுக்குப்பின் உட்கொண்டால் உடல் எடை குறையும்.

குப்பைமேனி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி, தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த சூரணத்தை தினமும் இருவேளை, வேளைக்கு இரண்டு சிட்டிகை என எடுத்து நெய்யில் குழைத்து தொடர்ந்து உட்கொண்டால் மூலச்சூட்டினால் ஏற்படும் கருப்பு நிறம் மாறும்.

அம்மான் பச்சரிசியுடன், துளசி இலை சம அளவு எடுத்து நன்கு அரைத்து பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும்.

துளசி இலை    - 9  எண்ணிக்கை

கடுக்காய் தோல் - 5 கிராம்

கீழாநெல்லி    - 10 கிராம்

ஓமம்    -5 கிராம்

மிளகு    - 3 

எடுத்து மைபோல் அரைத்து மோரில் கலந்து தினமும் மூன்று வேளை கொடுத்துவந்தால், சாம்பல், மண் தின்னும் குழந்தைகள் எளிதில் அவற்றை ஒதுக்கும்.

தொண்டைக்கம்மல், வலி நீங்க

தினமும் துளசியிலையை காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக மென்று சாறு இறக்கினால், சளி, தொண்டைக்கட்டு நீங்கும்.  உடலில் உள்ள நச்சுத்தன்மையும் நீக்கும்.

10 துளசியிலை எடுத்து அதனுடன் 5 மிளகு சேர்த்து நசுக்கி 2 டம்ளர் நீர்விட்டு அரை டம்ளராக சுண்டக் காய்ச்சி கஷாயம் செய்து சூடாக அருந்தி, பிறகு சிறிது எலுமிச்சை சாறு அருந்திவிட்டு நல்ல கம்பளி கொண்டு உடல் முழுவதும் போர்த்தி விட்டால் மலேரியா காய்ச்சல் படிப்படியாக குறையும்.

சிறுநீரகக் கல் நீங்க

துளசி இலையை ஒரு செப்புப் பாத்திரத்தில் நீர்விட்டு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.  மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை எடுத்து இலையோடு சேர்த்து அருந்தி வந்தால் சிறுநீரகக் கல் படிப்படியாக கரையும்.  இவ்வாறு ஒரு மண்டலம் அருந்துவது நல்லது.  இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற வேதிப் பொருட்கள், விஷநீர்கள் சிறுநீர் வழியாக வெளியேறி ரத்தத்தை சுத்தமாக்கும்.

சிறு சிறு பூச்சிக் கடிகளின் விஷம் நீங்க

கண்ணுக்குத் தெரியாத சிறு சிறு பூச்சிக் கடிகளால் சிலருக்கு உடலில் அலர்ஜி உண்டாகி சருமம் பாதிக்கப்படும்.  அல்லது வேறு வகைகளில் பாதிப்பு ஏற்படும்.  இந்த பூச்சிகளின் விஷத்தன்மை நீங்க துளசி இலையை சாறு எடுத்து அதனுடன் சம அளவு தும்பைச் சாறு கலந்து ஒரு வாரம் அருந்தி வந்தால் விஷம் எளிதில் இறங்கும்.

வாய்ப்புண் , வாய் நாற்றம் நீங்க

வயிற்றில் புண்கள் இருந்தால் வாயிலும் புண்கள் உண்டாகும்.  இதனால் வாய் நாற்றம் வீசும்.  வாய்ப்புண் ஆற துளசி இலையை பறித்து நீர்விட்டு அலசி, வாயில் வைத்து மென்று மெல்ல மெல்ல சாறினை உள்ளிறக்கினால், வாய்ப்புண் வயிற்றுப்புண் ஆறும்.  வாய் நாற்றமும் நீங்கும்.

மன அழுத்தம் நீங்க 

மன அழுத்தத்தைப் போக்கும் குணம் துளசிக்கு உண்டு.  துளசி இலையை நன்கு மைபோல் அரைத்து அதனுடன் வில்வ இலை சாறு சேர்த்து லேசாக சூடாக்கி அருந்தினால் மன அழுத்தம் நீங்கும்.

பற்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் தீர

துளசி இலை, புதினா இரண்டையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் கிராம்புப் பொடி சேர்த்து தினமும் பல் துலக்கி வந்தால், பற்களின் சொத்தை, பல் ஈறு வீக்கம் மேலும் பற்கள் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும்.  

தலைவலி தீர

ஒரு கைப்பிடி துளசி இலை மூன்று மிளகு, 1 துண்டு இஞ்சி எடுத்து நன்கு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி நீங்கும்.

கண்நோய்கள் தீர

துளசி இலை ஊறிய நீரை 1 மண்டலம் அருந்தி வந்தால் முக்குற்றங்களில் ஒன்றான பித்த அதிகரிப்பு குறையும்.  இதனால் கண் நரம்புகளின் சூடு குறைந்து நரம்புகள் பலப்படும்.  கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாது.  

சரும நோய்கள் நீங்க 

தேமல்,  படை உள்ள இடங்களில் துளசியும் உப்பும் சேர்த்து அரைத்து பூசி வந்தால் சரும நோய்கள் நீங்கும்.

துளசி இலைக்கு உள்ளத்தைத் தூய்மையாக்கும் குணமும் உண்டு.

நலம் தரும் காய்கறிகள்...



நலம் தரும் காய்கறிகள்...



“உணவே மருந்து, 
மருந்தே உணவு” 

என்ற சித்தர்களின் கூற்றை கடைப்பிடித்தாலே நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.

நம் முன்னோர்கள் தாங்கள் மேற்கொண்ட உணவு பழக்கங்களின் மூலம் எந்தவகையான நோயின் தாக்குதலுமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.  

இன்றைய நிலையை சற்று எண்ணிப் பார்ப்போமானால்,

10 நபரில் 4 பேர் நீரிழிவு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும், 3 பேர் இருதய சம்பந்தப்பட்ட நோயாளியாகவும், மீதம் 3 பேர் ஏதேனும் வேறு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும் இருப்பார்கள்.

நம் மக்கள் தொகையில் 50 வயதுக்குமேல் உள்ளவர்களில் எந்த நோயும் இல்லாமல் இருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

இன்று மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை என்பது மிகவும் சாதாரணமான விஷயமாகிவிட்டது.  நகரங்களில்  10 அடிக்கு ஒரு மருந்தகம்.

இதில் இன்னும் கொடுமையான விஷயம், நோயை சரிசெய்துகொள்ள மருத்துவமனைக்குச் சென்றால், அங்கு காலாவதியான மருந்துகள், போலி மருந்துகள்,  என கள்ளச்சந்தை பொருட்கள் நோயாளிகளின் உயிர்களை பறிக்கின்றன.  

இதற்கெல்லாம் மூலகாரணம் யாரென்று சிந்திப்போமேயானால் கண்டிப்பாக அது நாம்தான்..

உடலை சீராக பேணுவதை தவிர்த்து பொருள் தேடும் நோக்கில் தன்னை மறந்து அலைந்ததன் விளைவுதான் இது..

இடையிடையே களைப்பு ஏற்பட்டால், செயற்கை குளிர்பானங்கள், அவசரகதி உணவு வகைகள், பதப்படுத்தப்பட்ட பொருட்கள் என கண்டவற்றையும் வாங்கி உண்கிறோம்.  மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்கிறோம் என்ற பெயரில் மது, புகை  போதை வஸ்து என ஆரம்பித்து அதற்கு அடிமையாகிறோம்.

இப்படியாக நோய்களை நாம் காசுகொடுத்து வாங்கி, உடலையும் நோயையும்  இணைபிரியா நண்பர்களாக்கி நமக்குள் வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் நம் முன்னோர்களின் உணவு பெரும்பாலும் இயற்கையைச் சார்ந்தே இருந்து வந்தது.  உதாரணமாக அரிசியை எடுத்துக் கொண்டால் கைக்குத்தல் அரிசி, அதாவது உமி நீக்கி தவிடு நீக்கப்படாத அரிசி.  இந்த தவிடு நீக்கப்படாத அரிசியில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் வைட்டமின் பி1 நிறைந்துள்ளது. இது இருதயத்திற்கும், நரம்பு மண்டலத்திற்கும் ஊட்டமளிக்கக்கூடியது. 

மேலும் தானிய வகைகள், இயற்கையாய் விளையும் காய்கறிகள் என உண்டுவந்துள்ளனர்.  அதனால் அவர்கள்  நோயின்றி வாழ்ந்தனர்.

ஆனால் இன்று அனைவருமே வெள்ளை வெளேரென்று பூப்போன்ற சாப்பாட்டைத்தான் விரும்புகின்றனர். நாகரீகம் என்ற பெயரிலும், அந்நிய பொருள் மோகத்திலும் இயற்கையை மறந்து செயற்கையையே உண்மையென நம்பி அதற்குள் ஊறிவிட்டனர்.  

இந்த நிலை மாறுவதென்பது சற்று சிரமம்தான்.  இருப்பினும் அதோடு, உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள், கனிகள், தானியங்களை உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் தொந்தரவுகள் மேலும் அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.

அவற்றில் சிலவற்றை பார்ப்போம்

வாழைப்பூ

இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி,சி  சத்துக்கள் நிறைந்துள்ளன.  இரத்தச் சோகையை வராமல் தடுத்து உடலுக்கு தெம்பையும் புத்துணர்வையும் தரவல்லது.

வாழைத்தண்டு

இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி  நிறைந்துள்ளது.  இரத்தத்தை சுத்தப்படுத்தும்.  இரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்த நீரை பிரித்தெடுக்கும்.  சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்கி சிறுநீரக கல் அடைப்பை தடுக்கும்.

வாழைக்காய்

இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள் அதிகம் உள்ளது.  வாயுவைத் தூண்டும் குணமுள்ளதால் இதை சமைக்கும்போது அதிகளவில் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது.  மலச்சிக்கல் தீர்க்கும்.

பாகற்காய்

வைட்டமின் ஏ, பி,சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது.  நன்கு பசியைத் தூண்டும்.  உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

சேப்பங்கிழங்கு

கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது.  இவை எலும்புகளையும், பற்களையும் உறுதிப்படுத்தும்.

பீட்ரூட்

கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன.  மலச்சிக்கலைப் போக்கும், இரத்த சோகையை சரிபடுத்தும்.

வெண்டைக்காய்

போலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன.  மூளை வளர்ச்சியைத் தூண்டும்.  நன்கு பசியை உண்டாக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.

கோவைக்காய்

வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்தள்ளன.  வயிற்றுப்புண், வாய்ப்புண், மூல நோயின் தாக்குதல் போன்றவற்றை நீக்கும்.

முருங்கைக் காய்

வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.  பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண்டாகும் அதிக உதிரப்போக்கைத் தடுக்கும்.  விந்து உற்பத்தியைப் பெருக்கும்.

சுண்டைக்காய்

புரதம், கால்சியம், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது.  உணவில் சுண்டைக்காய் சேர்த்து வந்தால் வயிற்றுப் புழுக்களை கொல்லும்.  உடல் வளர்ச்சியைத் தூண்டும்.

சுரைக்காய்

புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, நிறைந்துள்ளது.  இவை உடல் சோர்வை நீக்கி, உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

குடைமிளகாய்

வைட்டமின் ஏ, பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது.  அஜீரணக் கோளாறை நீக்கி செரிமான சக்தியை தூண்டும்.

சவ்சவ்

கால்சியம், வைட்டமின் சி, சத்துக்கள் உள்ளன.  எலும்பு, பற்களுக்கு உறுதியைக் கொடுக்கும்.

அவரைக்காய்

புரதம், நார்ச்சத்து மிகுந்துள்ளது.  இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தேகத்தை பலப்படுத்துகிறது.  மலச்சிக்கலைப் போக்குகிறது.

காரட்

உடலுக்கு உறுதியைக் கொடுக்கும்.  இரத்தத்தை சுத்தப்படுத்தும். 

கொத்தவரங்காய்

இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது.  நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்.  இரத்தத்தை சுத்தப் படுத்தும்.

கத்தரி பிஞ்சு

கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்துள்ளது.  செரிமான சக்தியை தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.

உடலுக்கு சத்தான உணவையும் அதோடு மருத்துவத்தையும் கலந்து கொடுக்கும் கீரைகள், பழங்கள், பயறு வகைகள் பற்றி வரும் இதழில் விரிவாக அறிவோம்.

சிறுநீரகம்...


சிறுநீரகம்...


              யற்கையின் படைப்புகள் அனைத்தும் வியக்கத் தக்கவை.  உயிரினங்களில் ஒரு செல் உயிரி முதல் மனிதன் வரை உள்ள அனைத்து படைப்புகளிலும் பல அற்புதங்கள் புதைந்துள்ளன. இதில் மனித உடலானது ஒரு மாபெரும் படைப்பாகும்.

மனித உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் இன்றியமையாதவை.  இவற்றில் சில உறுப்புகளின் செயல்பாடுகள் விரைவில் குன்றிவிடும் என்பதற்காக இரண்டு உறுப்புகளை இயற்கை வடிவமைத்துள்ளது.  எடுத்துக்காட்டாக கண், காது, மூக்கு துவாரம், நுரையீரல், சிறுநீரகம் இவைகள் இரண்டு உறுப்புகளாக உள்ளன.  இப்படி மனித உடலின் இயக்கத்திற்கு உதவும் சிறுநீரகம் பற்றி இந்த இதழில் தெரிந்துகொள்வோம்.

சிறுநீரகம்

மனித உடலின் மிக முக்கிய உறுப்பாக செயல்பட்டு, சிறுநீரை பிரித்து வெளியேற்றி, உடலின் தட்ப வெப்பத்தை சீராக வைத்திருப்பதுதான்  சிறுநீரகத்தின் வேலை. அவரை விதை வடிவில் இரண்டு சிறுநீரகங்கள் ஒவ்வொரு மனித உடம்பிலும் உள்ளன.    இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சுத்திகரிக்கும் மிக நுண்ணிய சுத்திகரிப்பு உபகரணம்தான் சிறுநீரகம் இந்த சிறுநீரகம் கருவின் நான்காவது மாதத்திலிருந்து அதனுடைய இயக்கத்தை தொடங்கி  மனிதனின் மரணம் வரை இடைவிடாது  இயங்குகிறது. வயிற்றின் பின் பகுதியில் விலா எலும்பிற்குக் கீழே, பக்கத்திற்கு ஒன்றாக சற்று மேலும் கீழும் இறங்கி காணப்படுகிறது. சிறுநீரகம் சீராக இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டால் சில மணி நேரங்களில் உயிரழப்பு கூட நேரிட வாய்ப்புண்டு.

சிறுநீரகத்தின் செயல்பாடுகள்

இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் இரத்தத்தில் நான்கில் ஒரு பங்கு சிறுநீரகத்திற்கு சுத்திகரிக்க அனுப்பப்படுகிறது.  நாள் ஒன்றுக்கு 150 லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு அதில் 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரை சிறுநீராக வெளியேறுகிறது.  மீதி அனைத்தும் மீண்டும் இரத்தத்தில் கலந்து விடுகிறது. 

இதனால் உடலிலுள்ள அனைத்து கழிவுகளும் வெளியேற்றப்படுகின்றன. இரத்தம் சுத்தமடைகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்துதல் மட்டும் சிறுநீரகத்தின் வேலையல்ல.  மற்ற உறுப்புகளின் செயல்பாடுகளை தூண்டுவதும் சிறுநீரகத்தின் வேலைதான்.

உடலின் திரவ நிலையை சம நிலையில் பராமரிக்கிறது.  இரத்த அழுத்தத்தை சம நிலைப்படுத்துகிறது.

இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்குத் தேவையான சுரப்பினை சுரக்கச் செய்கிறது. எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ் போன்றவற்றை சமப்படுத்தும் தன்மை சிறுநீரகத்திற்கு உண்டு.

அமில, காரத்தன்மைகளையும், சோடியம் பொட்டாசியம், அம்மோனியம் போன்றவற்றை சரிவிகிதத்தில் சமன்செய்யும் பணியையும் சிறுநீரகம் சிறப்பாக செயல்படுத்துகிறது.

நெப்ரான்

இதுவே சிறுநீரகத்தின் முக்கிய வடிகட்டி. இது இரத்தத்தில் உள்ள வேதியல் பொருட்களில், தேவையுள்ள, தேவையில்லாதவற்றை பிரித் தெடுக்கிறது.   சிறுநீரகத்தில் இந்த நெப்ரான்கள் பல கோடிகள் உள்ளன.  மால்பிஜியன் குழாயின் மூலம் வடிகட்டி மீண்டும் உறிஞ்சி இரத்தத்துடன் கலக்க வைப்பதும், மீதத்தை சிறுநீர் குழாய் வழியாகவும் வெளியேற்றுகிறது.

சிறுநீரகம் சீராக செயல்படவில்லை யென்றால்.

· இரத்தம் அசுத்தமாகும்

· இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி பாதிக்கப் படும்.

· தண்ணீர், யூரியா, சோடியம் மற்றும் வேதிப் பொருட்களின் சமநிலை பாதிக்கப்பட்டு, உடலின் அக, புற அமைப்பில் மாற்றங்கள் உண்டாகும்.

· மூச்சுத் திணறல், நினைவிழத்தல் இரத்தக் கொதிப்பு ஆகியவை உண்டாகும்.

சிறுநீரகம் சரியாக செயல்படாததால் ஏற்படும் அறிகுறிகள்

யூரியா மற்றும் வேதிப் பொருட்கள் அதிகளவில் இரத்தத்தில் கலந்துவிடுவதால் சிறுநீர் சரியாக பிரியாது.  சிறுநீர் சரிவர பிரியாததால் மூச்சுத் திணறல், அதிக இருமல், நெஞ்சுவலி, சளியில் இரத்தம் வருதல், விக்கல், பசியின்மை, இரத்த வாந்தி, நினைவிழத்தல், குழப்பம், கை நடுக்கம், நரம்பு தளர்ச்சி, தோல் வறண்டு அரிப்பு ஏற்படுதல் போன்ற ஒருசில அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

சிறுநீரகம் யாருக்கு அதிகம் பாதிப்படையும்

சிலருக்கு பிறக்கும்போதே சிறுநீரகம் சிறுத்து காணப்படும்.  பரம்பரையாகவும், பாதிக்கப் படலாம்.  இரத்தக் கொதிப்பு, பாம்புக்கடி, கதண்டு வண்டுக்கடி, மலேரியா, உயிர்க்கொல்லி மருந்து உட்கொண்டவர்கள், வயிற்றுப் போக்கு அடிக்கடி உள்ளவர்கள், பிரசவ காலங்களில் உண்டாகும் இரத்தப்போக்கு, அடிக்கடி கருக்கலைப்பு செய்பவர்களுக்கும், நீர் அதிகம் அருந்தாதவர் களுக்கும், மது போதை பொருட்கள் உட் கொள்பவர்களுக்கும், அடிக்கடி வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்துபவர்களுக்கும், உடல் பயிற்சியில்லாதவர்களுக்கும் சிறுநீரகம் பாதிக்க வாய்ப்புண்டு.

சிறுநீரகத்தைக் காக்க

· உடல் பருமன் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

· புகைப் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.  மது, போதை பழக்கம் இருக்கக் கூடாது.

· அடிக்கடி வலிநிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.  

· எளிதில் சீரணமாகும் உணவுகளை உட் கொள்வது நல்லது.  சிறுநீரை அடக்குதல் கூடாது.

· தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது நல்லது. 

· வாழைத்தண்டு, முள்ளங்கி போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பொதுவாக வாழைத்தண்டு, 3  விரலளவு  எடுத்து அதனுடன் சின்ன வெங்காயம் 4, சீரகம் 1 தேக்கரண்டி, சோம்பு 1 தேக்கரண்டி, நல்ல மிளகு 4, பூண்டு பல் 4, கொத்துமல்லி இலை தேவையான அளவு, கறிவேப்பிலை 20 இலை, இலவங்கப்பட்டை 2 கிராம் எடுத்து 3 குவளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து 1 குவளை அளவு வந்தபின் எடுத்து காலை மாலை இருவேளை என வாரத்தில் 2 நாட்கள் அருந்தி வந்தால் சிறுநீரகக் கோளாறுகளை தவிர்க்கலாம்.  இது பக்க விளைவில்லாத மருந்தாகும்.

கழிவு நீக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் சிறுநீரகங்களை பாதுகாக்க மேற்கண்ட நடை முறைகளை பின்பற்றுவது நல்லது.

கழுத்து வலி...



                ண்  சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பது சித்தர்களின் முதுமொழியாகும்.  மனிதனின் இயக்கங்கள் அனைத்திற்கும் உள்ள சூட்சும பகுதிதான் சிரசு.    பஞ்ச பூதங்களின் செயல்பாடுகள், பிரபஞ்ச சக்தியை உணரும் தன்மை அனைத்தும்  சிரசின் வழியே தான் நடை பெறுகிறது.  இத்தகைய சக்திகள் அனைத்தையும் தன்னுள் அடக்கி பல கோடிக் கணக்கான அணுக்களைக் கொண்ட  பந்து போல தோற்றமளிக்கும் சிரசை தாங்கி நிற்பது கழுத்துப் பகுதிதான்.  கழுத்து உடலின் முக்கிய உறுப்பாகும்.  கழுத்தில்தான் முக்கிய நாடி நரம்புகள் நெருக்கமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கும். உடலுக்கும் சிரசுக்கும் இரத்தம் மற்றும் நரம்புகள் பிரயாணம் செய்கின்றன.  கழுத்தின் மையமாக தண்டுவட எலும்புகள் உள்ளன.  இதில் ஏழு எலும்புகள் உள்ளன.  அந்த எலும்பு சட்டத்தைச் சுற்றி தசைகளும், தசை நார்களும் உறுதி கொடுக்கின்றன.   இந்த கழுத்து எலும்பிலிருந்து தான் கைகளுக்கு போகும் நரம்புகள் வெளிவருகின்றன.

மேலும் உணவுக்குழாய், மூச்சுக்குழாய் உள்ளன.  மூளைக்கும் இருதயத்திற்கும் இடையேயான இரத்த ஓட்டம் கழுத்தின் வழியேதான் நிகழ்கிறது.  

முதுமைப் பருவத்தில் கழுத்து எலும்புகளின் இணைப்புகளில் (Posterior interrertebral joints) ஏற்படும் தேய்மானத்தைத்தான் செர்விகல் ஸ்பாண்டிலோஸிஸ் (Cervical spondylosis) என்று அழைக்கின்றனர்.  இதை தமிழில் தோள்பட்டை வாதம் என்கின்றனர்.  இது பொதுவாக நடுத்தர வயதுடையோரிடமும், முதியோரிடமும் குறிப்பாக ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து  வேலை செய்வோரிடமும் காணப்படுகிறது.

குடல், வயிறு இவற்றின் மூலப் பகுதிகளில் உஷ்ணம் அதிகமானால் வயிற்றுப் பகுதியில் உள்ள அபான வாயுவின் அழற்சி காரணமாக குடல் மேலும் உஷ்ணப்பட்டு உடலில் உள்ள நீரானது அபான வாயுவால் மேல்நோக்கி தள்ளப்படுகிறது.  இதனால் உடலில் உள்ள நீர் தலைப்பகுதிக்கு  வந்து கோர்த்துக்கொள்ளும்.  

பின்பு கழுத்து நரம்பு வழியாக முதுகுப் பக்கம் (பின்பகுதி) நீர் இறங்கும்.  இவ்வாறு இறங்கும் நீரானது கழுத்துப் பகுதிக்கு வரும்போது அதன் தன்மை  மாறி பசை போல் கடினமாகிறது.  பின்பு அது இறுகித் தடித்து கடினமானது போல் ஆகிவிடும்.  இதுதான் தோள்பட்டை வாதம்.  உதாரணமாக கடலில் உள்ள நீரானது அதிக வெப்பத்தால் ஆவியாவி மேல்சென்று மேகமாக மாறி பின் மழை நீராக பொழிவது போல் குடலில் உள்ள நீர் உஷ்ணமாகி ஆவியாக மாறி மேல்நோக்கி சிரசுக்கு சென்று அங்கு நீராக மாறி பிறகு கழுத்துப் பகுதிக்கு இறங்குகிறது.  இதைத்தான் சித்தர்கள் அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்கின்றனர்.

அறிகுறிகள்

கழுத்துப் பகுதியில் வலி ஏற்படும்.  கைகள் மரத்துப் போகும்.  சுண்டுவிரல் செயலிழுந்து போகும்.  மன எரிச்சல் உண்டாகும்.  தூக்கமின்மை ஏற்படும்.  எப்போதும் கோபம் கொள்ளும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.  கண் எரிச்சல், உண்டாகும்.  எழுதும்போது கை விரல்களில் வலி ஏற்படும். படிக்கும்போது கழுத்து வலி உண்டாகும்.  மேலும் குனியும் போதும், நிமிரும்போதும் தலை சுற்றி கண்ணில் மின்னல் போல் தோன்றி உடல் அதிரும்.  நரம்புகள் இறுகும்.  ஒருசிலருக்கு நடக்கும்போது தலை சுற்றல் உண்டாகும்.  

கழுத்து கடுத்து, தடித்து காணப்படும்.  மன நிம்மதியின்றி காணப்படுவார்கள்.  பித்த உடற்கூறு கொண்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் உண்டாகும்.  வாத உடலமைப்பு கொண்டவர்களுக்கு கழுத்து இறுகி திருப்ப முடியாத நிலை ஏற்படும்.  கப உடலமைப்பு கொண்டவர்களுக்கு கழுத்து பகுதி தடித்து உப்பு நீர் கலந்து கருத்துப்போய் பட்டை பட்டையாக தடித்து காணப்படும்.

அதிக வியர்வை  உண்டாகும்.  கழுத்துப் பகுதியில் எரிச்சல் தோன்றும்.  ஒரு சிலருக்கு இடது பக்கமாக கழுத்துப் பகுதியிலிருந்து நீர் கீழிறங்கி தோள்பட்டையில் வலியை உண்டாக்கும்.  இது நெஞ்சு வலியைப் போன்று தோன்றும்.  நெஞ்சு வலிக்கும் தோள்பட்டை வலிக்கும் வித்தியாசம் கண்டறிவது கடினம்.   

தொடர்ந்து பல நாட்களாக கழுத்து வலி காணப்படும் அந்த வலியானது தோள்வரை பரவும், கழுத்துப் பகுதியில் கை பட்டவுடன் வலி தோன்றும்.  

கழுத்து வலி வரக் காரணம்

மலச்சிக்கல், குடலில் வாய்வுக் கோளாறு, மூலச்சூடு, தலையில் நீர் கோர்த்தல், மன அழுத்தம்  போன்ற காரணங்களால் தோள்பட்டை வலி உண்டாகிறது.   

கழுத்துவலியை தவிர்க்கும் முறை

மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எளிதில் சீரணமாகக்கூடிய உணவுகளை உண்ண வேண்டும்.  வாயுவை உண்டாக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.  வாகனங்களில் செல்லும்போது தாகம் ஏற்பட்டால் குளிரூட்டப்பட்ட நீரோ, குளிர்பானங்களோ அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது.

வாகனங்களை மிதமான வேகத்தில் ஓட்ட வேண்டும்.    அடிக்கடி பிரேக் போடுவதை தவிர்க்க வேண்டும்.  முடிந்தவரை சிறு சிறு தூரங்களுக்கு நடந்து  செல்வது நல்லது.  ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்திருப்பதை தவிர்க்க வேண்டும்.

கழுத்து வலிக்கு இந்திய மருத்துவ முறையில் நிறைய மருந்துகள் உள்ளன.  குறிப்பாக வர்ம பரிகார முறையில் உள் மருந்துகள் சில கொடுத்து  கழுத்துப் பகுதி தோள்பட்டைப் பகுதியில் எண்ணெய் தடவி சீராக கழுத்தை நீவிவிட்டு வந்தால் நாளடைவில் இரத்த ஓட்டம் சீராகும்.  தோள்பட்டை வலியும் நீங்கும்.   

வர்ம பரிகார முறையில் இதை எளிதாக குணப்படுத்தலாம். அறுவை சிகிச்சை தேவையில்லை.

இதுபோல் சித்த மருத்துவ முறையில் சீர்கேடடைந்த உறுப்புகளுக்கு பலம் கொடுக்க கிழி ஒற்றடம், பிழிச்சல் முதலியன செய்வார்கள்.  இவ்வாறு செய்து வந்தால் நோயிலிருந்து விடுபட்டு உறுப்புகளில் உள்ள வலி, குத்தல், குடைதல், இசிவு, பிடிப்பு, வீக்கம் முதலியன மெல்ல மெல்லக் குறைந்து அவற்றின் தளர்ச்சி, செயலின்மை போன்றவை நீங்கி உடல் பலம் பெறும்.  

இந்த முறையில் சிகிச்சை செய்வதின் மூலம்   கழுத்து வலிக்கு அறுவை சிகிச்சை செய்வதை தவிர்க்கலாம்.

உணவு 

பொதுவாக வாயுவின் சீற்றத்தை அதிகரிக்கக்கூடிய உணவுகளைக் குறைத்து எளிதில் சீரணமாகக் கூடிய சத்துள்ள பொருட்களை உண்பது நல்லது.    கீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  

ஒதுக்க வேண்டிய உணவுகள்

மொச்சை, உருளை, தக்காளி, வாயுவை உண்டாக்கு உணவுகளை தவிர்க்க வேண்டும்.

படுக்கை

தலையைணை இல்லாமல் தூங்குவது நல்லது.   மேடுபள்ளம் இல்லாத சமமான படுக்கையே நல்லது. அதிக குளிர்காற்று உடலில் படும்படியாக படுக்கக்கூடாது.  

இத்தகைய நடைமுறைகளை கடைப்பிடித்தால் தோள்பட்டைவாதம் என்ற கழுத்து வலியிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம்.