Monday, 25 April 2011

உயிர்சத்து வைட்டமின் ‘D’


உயிர்சத்து வைட்டமின் ‘D’



                 டல், மன ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது உயிர்சத்துக்கள்தான்.  இவை நமது உடலில் பிற சத்துக்களுடன் சரி விகிதத்தில் சேர்வதனாலேயே நமக்கு முழுமையான ஆரோக்கியம் கிடைக்கிறது.  உடலுக்கு உயிர்சத்துக்களை நீண்டகாலம் தேக்கி வைக்கும் தன்மை கிடையாது.  

எனவே தினமும் உயிர்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், கீரைகள், பழங்கள் மற்றும் குறிப்பிட்ட சில அசைவ உணவுகளை சாப்பிடுவதாலும் மட்டுமே கிடைக்கின்றன.

இந்த உயிர்சத்துக்களான வைட்டமின்கள் பற்றி நாம் ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம்.  இந்த இதழில் உடலுக்கு மிகவும் முக்கியமான உயிர்சத்தான வைட்டமின் ‘D’ பற்றி அறிந்து கொள்வோம்.

வைட்டமின் ‘D’

மனித உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் அழகையும் கொடுக்கிறது.  எலும்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாததாகும். நோய்களைத் தடுக்கக்கூடிய ஆற்றல் இதற்குண்டு.  

வைட்டமின் ‘D’- யை நமது உடல் சூரிய ஒளியின் உதவி கொண்டு உற்பத்தி செய்து கொள்கிறது.  அதிகாலை சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் உடலின் சருமப் பகுதியில் படுகிறது. சருமத்தில் உள்ள திசுக்களால் வளர்சிதை மாற்றம் அடைந்து வைட்டமின் ‘D’ உற்பத்தி செய்யப்படுகிறது.

வைட்டமின் ‘D’ பொதுவாக இருவகைப்படும்.

வைட்டமின் ‘D2’, வைட்டமின் ‘D3’

வைட்டமின் ‘D2’ தாவரங்களின் மூலம் அதாவது காய், கனிகள், கீரைகள் மூலம் உடலுக்கு கிடைக்கிறது.

வைட்டமின் ‘D3’ சூரிய ஒளியின் மூலம் தான் உடலுக்கு கிடைக்கிறது.

வைட்டமின் ‘D3’ ஆனது உடலின் இரத்த ஓட்டத்தை சீர்செய்து உடலுக்குத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ் போன்றவற்றை உட்கிரகிக்க உதவுகிறது.

வைட்டமின் ‘D’-ன் பயன்கள்

· எலும்புகளை பலப்படுத்தும்

· உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.

· எலும்பு புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது.

· குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.

· வயதானவர்களின் எலும்பு பலவீனத்தைப் போக்குகிறது.

· தசைகளின் இளக்கத்தைத் தடுக்கிறது.

· மூட்டுகளில் உண்டாகும் வலியை தடுக்கும் குணம் இதற்குண்டு.

· நரம்பு, எலும்பு சந்திப்புகளை பலப் படுத்துகிறது.

· சருமத்தை நோயிலிருந்து பாதுகாக்கிறது.  

· ரத்தத்தில் உள்ள சர்க்கரையை எரிக்க வைட்டமின் டி மிகவும் பயன்படுகிறது.

· சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்குகிறது.  திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

வைட்டமின் ‘D’சத்து நிறைந்துள்ள உணவுகள்

பால், மீன், முட்டை, மீன் எண்ணெய், மாமிசம், வெண்ணெய், காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகள், கொட்டைகள் போன்றவற்றில் அதிகம் கிடைக்கிறது.

ஆனால் இயற்கையாக கிடைக்கும் சூரிய ஒளியின் மூலமே அதிக வைட்டமின் ‘D’ உடலுக்கு கிடைக்கிறது.

வைட்டமின் ‘D’ உடலுக்கு கிடைக்க தினமும் காலை அல்லது மாலை வெயிலின் ஒளியானது உடம்பில் படுமாறு பார்த்துக்கொள்வது நல்லது.

வைட்டமின் ‘D’ சத்து குறைந்தால்

வைட்டமின் ‘D’ குறைந்துவிட்டால், நரம்புகளில் பாதிப்புகள், முதுகெலும்பு கோளாறு, பற்கள் கோளாறு முதலியவை உண்டாகும்.  இது தவிர பித்த நீரில் கோளாறு உருவாகும்.  

பெரியவர்களுக்கு அடிக்கடி சோர்வு ஏற்படுதல், சர்க்கரையானது அடிக்கடி சிறுநீர் மூலமாக வெளித்தள்ளப்படுதல், முதுமைத்தன்மை விரைவில் ஏற்படுதல் போன்றவை ஏற்படும்.

இந்த வைட்டமின் ‘D’ சத்து குறைந்தால் ரிக்கட்ஸ் என்ற நோயின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்.
பொதுவாக வைட்டமின் ‘D3’ தான் குடலிலிருந்து கால்சியத்தை உறிஞ்ச பயன்படுகிறது.  இதனால் பாராதைராய்டு சுரப்பிகள், பாராத்தார்மோன் அதிகமாக சுரந்து, எலும்பிலுள்ள கால்சியத்தைக் கரைத்து இரத்தத்தில் அதன் அளவை குறைக்கிறது.  இதனால் எலும்புகள் பாதிக்கப்பட்டு, வளர்ச்சி குன்றி வலுவிழந்த விடுகின்றன.  இதற்கு ரிக்கட்ஸ் என்று பெயர்.

ரிக்கட்ஸ் நோயின் அறிகுறிகள்

ஒன்றரை வயதில் மூடவேண்டிய உச்சந்தலைக் குழி மூடாமல் இருத்தல்.

தலை எலும்புகளின் வளர்ச்சி குன்றி, தலையில் முன் பக்கம் பெரிதாக இருத்தல், சத்து குறைவான நிலை முக்கியமாக இரும்பு மற்றும் புரதக் குறைவு உண்டாதல்.

கை, கால் முட்டி தடித்து இருத்தல், நெஞ்சு எலும்புக் கூடாக இருத்தல்.  கூன் விழுந்த முதுகு இவை அனைத்துமே ரிக்கட்ஸின் அறி குறிகளாகும்.

நீரிழிவு உயர் இரத்த அழுத்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைட்டமின்  ‘D3’ உற்பத்தி குறைவாகவே இருக்கும்.

வைட்டமின் ‘D’ சத்துள்ள உணவுகளை உண்டு அதன் பலனை அடையலாம்.

No comments:

Post a Comment