Monday, 25 April 2011

வர்மத்தின் மர்மங்கள் வர்ம சூட்சுமம்...


வர்மத்தின் மர்மங்கள்
வர்ம சூட்சுமம்...

              ர சுவாசத்தின் மூலம் பிராணன் உட்சென்று மூலத்தில் முழு நிலையடையும்.  இந்நிலைதான் ஆன்மீக சக்தியை பெற்றுத் தரும்.  இந்நிலையை அடைந்தவர்களே ஆன்மீகவாதிகள் என்று கடந்த இதழில் அறிந்தோம்.

சர சுவாசமே இறை சக்தி கிடைக்கும் பிரதான வழியாகும்.  சர சுவாசத்தின் மூலம் பிராண வாயுவை ஆதாரங்களுக்கு முழுமையாக செலுத்தி அதன் மூலமே ஞான நிலையை அடைந்தவர்கள் சித்தர்கள்.  தாங்கள் அடைந்த ஞான நிலையின் மூலம் கற்றுணர்ந்த சக்திகள் அனைத்தையும் கொண்டு மாபெரும் அற்புதமான மருத்துவங்கள், சோட-ஸ சாஸ்திரங்கள், அண்ட சராசரங்கள், கோள்களின் இயக்கங்கள், கிரகங்களின் மாறுதல்கள், அதனால் இந்த உலகில் ஏற்படும் சீதோஷ்ண நிலை மாற்றங்கள் பற்றி துல்லியமாக கணித்து கூறினார்கள்.  ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்கள் கணித்த அனைத்தும் இன்று நடைபெறுகிறது.

பிரபஞ்சங்களை அறிந்த சித்தர்கள் மனிதன் உட்பட அனைத்து ஜீவ ராசிகளையும் வாழ வைக்க எண்ணினர்.  ஆழ்நிலை தியானத்தில் அமர்ந்து அறிவாற்றலால் சக்திகளைப் பெற்று அறிவை அறிவால் அறிந்து அனுபவித்து உலகிற்கு சொன்னவர்கள்தான் சித்தர்கள்.

ஆன்மீக சக்தி என்பது வெறும் இறைசக்தியோடு நின்று விடுவதில்லை.  அதன் மேலும் உயிர்களின் உயிர் நாடிகள், அவற்றின் செயல் பாடுகளை துல்லியமாக அறிந்து கொள்ள வைப்பதே ஆன்மீக சக்தியாகும்.

இத்தகைய ஆன்மீக சக்தியை பெற இயலாதவர்கள்  தாங்கள் ஆன்மீக சக்தி பெற்றதாக  கூறிக் கொண்டு  பொய் வேடமிட்டு பல மூடர்கள் நாட்டில் உலாவி வருகிறார்கள்.  இவர்களைப் பற்றி அன்றே அகத்தியப் பெருமான் நாட்டு மக்களை  ஏமாற்ற பலர் இவ்வாறு காவி வேடமிட்டு திரிவார்கள், இவர்கள் பின்னாளில் மக்களால் ஒதுக்கப்பட்டு தெருவில் அலைவார்கள் என கூறியுள்ளார்.  இதைப் பற்றி சித்தர் பாடல் என்ற தலைப்பில் பல இதழ்களில் குறிப்பிட்டிருந்தோம். 
இப்படிப்பட்ட மனிதர்களால் தாங்கள் கண்ட அரிய பொக்கிஷங்கள் ஏதும் இவர்களுக்கு கிடைக்காமல் செய்யவே  மறைவில் வைத்தனர்.  அவ்வாறு மறைவில் வைத்த பொக்கிஷங்களில் வர்ம மருத்துவமும் ஒன்று.

மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்று வழி வகை சொன்னவர்கள் தான் சித்தர்கள்.  மேலும் அவர்கள்  நோயின்றி ஆரோக்கியமாக வாழ உடலின் அற்புத விஷயங்களையும், அதன் செயல்பாடுகளையும், பிரபஞ்சத்தோடு அதற்குறிய தொடர்புகளையும் தெளிவாக ஆராய்ந்து சொன்னார்கள்.  அவ்வாறு அவர்கள்  ஆராய்ந்து அறிந்து தெளிந்து சொன்னதுதான் ஆதாரங்கள் மற்றும் அதோடு தொடர்புடைய இயக்கங்கள்.  

ஆதாரங்களின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மற்றொன்றுடன் பின்னிப் பிணைந்து உடலில் பல இடங்களில் நிலை கொண்டுள்ளதை கண்டறிந்தனர்.  நரம்பு, எலும்பு சந்திப்புகளில் உயிர்நிலை ஒடுங்கியிருக்கும் சூட்சுமத்தைதான் வர்மம் என்று அழைத்தனர்.  இந்த வர்மத்தை பின்னாளில் வடமொழியில் மர்மம் என்று அழைக்கப்பட்டது.  உடலின் அனைத்து இயக்கங்களையும் சூட்சமமாக இயக்கும் சக்திதான் வர்மம் என்கிறார் அகத்தியர்.

இந்த வர்மப் புள்ளிகளில் தான் மனிதனை நோயின்றி ஆரோக்கியமாக வாழச் செய்கிறது.  இவற்றின் செயல்பாடுகள் இல்லாமல் பிராணன் செயல்பாடு நடைபெறாது.  உயிர்வாழ மிக முக்கிய புள்ளியாகவும் உயிர் முடிச்சாகவும் இருப்பது வர்மப் புள்ளிகள் தான்.

சித்தர்கள் தங்களை ஆழ்நிலை தியானத்தில் ஈடுபட்டு அதன் மூலம் மூலாதார சக்தியை தூண்டி ஆதாரங்களை தொடும் போதுதான் வர்ம புள்ளிகளின் சூட்சமம் அவர்களால் அறிய முடிந்தது.

இந்த வர்மப் புள்ளிகளை உயிர் நிலை ஒடுங்கும் இடங்கள் என சித்தர்கள் கூறினார்கள்.  உயிர் நிலை ஒடுக்கத்தை ஆராய்ந்த சித்தர்கள் அதன் செயல் பாடுகள் பாதிக்கப்பட்டால் மனிதனின் நிலை என்ன என்பதையும் முழுமையாக கணக்கிட்டனர்.

தங்கள் ஞானத்தின் பலனால் உலகின் பல பகுதிகளுக்கும்சென்று மருத்துவம், தத்துவம் என பல சேவைகள் புரிந்த சித்தர்கள் பலர் ஒரு சில புரியாத நோய்களால் தாக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் தவித்தனர்.  

இந்த நோய் எதனால் வந்தது, இதற்கு தீர்வு என்ன என்பதை அறிய முற்பட்டனர்.  அதுபோல் இன்றும் பலருக்கு புரியாத பல நோய்களின் தாக்குதல் இருந்துகொண்டு தான் இருக்கிறது.  இவை தற்போதைய விஞ்ஞான கருவிகளுக்கும் சோதனைகளுக்கும் அகப்படாத நோய்களாக உள்ளன.

இப்படி அக்காலத்திலும் புரியாத நோயாக உள்ள நோய்களுக்கு காரணம் என்ன என்பதை அறிய சித்தர்கள் பலர் குறவஞ்சி மலையில் குடிகொண்டு இருந்த அகத்தியரை நாடினர்.  சித்தர்களில் தலையாய சித்தர் அகத்தியர் அல்லவா?

இத்தகைய மர்மமான புரியாத நோய்கள் எந்த மருந்திற்கும் ஆட்கொள்ளாமல் இருப்பதையும், அதை எவ்வாறு பூரண குணமடைய செய்ய முடியும் என்பதையும் சித்தர்கள் அகத்தியரிடம் கேட்டதாக வர்ம ஏடுகள் கூறுகின்றன.

சித்தர்களின் புரியாத புதிருக்கு அகத்தியர் 
யான் இதை மறைவில் வைத்தேன்

என்றார்.  காலத்தின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு பூரண குணமடைய செய்யும் மகத்தான மருத்துவமான இந்த வர்ம பரிகார முறையை மறைவில் வைத்தேன் என்றார்.

அகத்தியர் கலம்தொட்டே வர்ம மருத்துவம் மறைமுக மருத்துவமாக இருந்துவந்துள்ளது.  பின்னாளில் அரசர்களுக்கு மட்டுமே செய்யப்படும் ராஜ வைத்தியமாக போற்றப்பட்டது.

சித்தர்கள், வர்ம மருத்துவத்தை மறைவில் வைத்த காரணத்தை வரும் இதழில் விரிவாக காண்போம்.

1 comment:

  1. this super I like this information. Dear sir i want varma and acupuncture how can use and how can select acu-points. please send to my e-mail ID : jeeva.v.selvam@gmail.com

    By Yours

    V. Selvam

    ReplyDelete