Sunday, 19 June 2011

இயற்கை உணவுகள்’

hive for the ‘

காலையில் ஒரு கடன் தொல்லை இரேவல் சின்னி

ஜூன் 7, 20111 மறுமொழி
திட வடிவ கழிவுகளை மலமாகவும், திரவ வடிவ கழிவுகளை சிறுநீர் மற்றும் வியர்வையாகவும் வெளியேற்றுவது நமது உடலின் இயற்கை. காலையில் மலம் கழிப்பதன் மூலம், வயிறு மற்றும் குடல் சார்ந்த உறுப்புகள் புத்துணர்ச்சி பெறுகின்றன. அதேபோல் சிறுநீர் கழித்தல் மூலம் சிறுநீரகங்களும், குளிப்பதன் மூலம் தோலும், பல் துலக்குவதன் மூலம் வாய் மற்றும் பற்களும் சுத்தமடைகின்றன.
இவற்றை அன்றாடம் சுத்தம் செய்யாவிடில் பல நோய்களுக்கு முன்னோடியாகவும், பல நோய்கள் இருப்பது போன்ற பயத்தையும் ஏற்படுத்திவிடுகின்றன. காலை கடமைகளை காலை கடன்கள் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. “மும்மலம்; அறுநீர்’ என்பது சித்தர்களின் வாக்கு. இயற்கை உணவுகளையே உட்கொண்ட, சித்தர் காலத்தில் மூன்று முறை மலம் கழித்தலும், ஆறு முறை சிறுநீர் கழித்தலும் வழக்கமாக இருந்தது.
ஆனால் வேகவைத்த, கொழுப்பான உணவுகளை அதிகம் உட்கொள்ளும் இந்த காலகட்டத்தில், ஒரு முறை மலம் செய்வதற்கே படாதபாடு பட வேண்டியுள்ளது. மாறிவரும் உணவு பழக்க வழக்கம், போதிய உடல் உழைப்பின்மை, சாயம் சார்ந்த துரித உணவுகள், காலந்தவறி உண்பது, நார்ச்சத்து நிறைந்த கீரை, காய்கறி, பழங்களை தவிர்ப்பது, வேதிப்பொருட்கள் சார்ந்த மருந்துகளை அதிகம் உட்கொள்வது, சர்க்கரை நோய், இருதய நோய்,
ரத்தக்கொதிப்பு, தோல்நோய் போன்றவற்றாலும் உணவுப்பாதையில் வறட்சி ஏற்பட்டு, செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு, மலச்சிக்கல் உண்டாகிறது.
மலச்சிக்கலினால் புத்துணர்ச்சி குறைவதுடன், அன்றாட பணிகளிலும் சிக்கல் உண்டாகிறது. மலம் கழித்தலை
“பவ்வீ’ என்றும் மலத்தை அடக்கினாலோ அல்லது மலம் சரியாக வெளியேறாவிட்டாலோ கடுமையான முழங்கால் வலி, சிறுநீர் பாதையில் தொற்று, அடிக்கடி சளி ஆகியன உண்டாகும் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. உடலின் சூடு அதிகரித்து தலைவலி, மிக சத்தமான துர்நாற்றத்துடன் அபான வாயு பிரிதல், உடல் பலம் குன்றி, எடை அதிகமானது போன்ற உணர்வு ஆகியன உண்டாகும்.
மேலும் மலச்சிக்கலினால் அடிக்கடி கொட்டாவி, உண்ட உணவு செரிக்காமல் வயிறு ஊதியது போன்ற உணர்வு, தொப்புளுக்கு கீழ்ப்பட்ட பகுதிகள் மற்றும் தொடையில் வீங்கியது போன்ற அதைப்பு, காம இச்சை குறைதல், பசியின்மை, கண்களைச் சுற்றி கருவளையங்கள், ரத்த அழுத்தம் கூடுதல், சிறுநீரை கட்டுப்படுத்த இயலாமை, மூலம், பவுத்திரம், ஆசனவாயில் அரிப்பு, வெடிப்பு, காலையில் எழும்பொழுதே இடுப்பு மற்றும் முதுகு பகுதிகளில் வலி ஆகியன மலச்சிக்கலால் நமது உடலில் ஏற்படும் பலவித உபாதைகளாகும்.
எப்படிப்பட்ட மலச்சிக்கலாக இருந்தாலும் அதை நீக்கி, குடலில் மலம் தங்கவிடாமல் தடுத்து, காலையில் சுகமாக மலத்தை கழிக்கச் செய்யும் மூலிகை இரேவல்சின்னி.
ரீயம் எமோடி என்ற தாவரவியல் பெயர்கொண்ட பாலிகோனேசியே குடும்பத்தைச் சார்ந்த இரேவல்சின்னி செடிகளின் வேர் கிழங்குகளே மருத்துவத்தில் பயன்படுகின்றன. இந்தியன் ரூபார்ப் என்றும் நாட்டு இரேவல்சின்னி என்றும் அழைக்கப்படும் இதன் வேர் கிழங்குகளிலுள்ள ஆந்த்ரா குயினோன் கிளைக் கோ சைடுகள், கிறஸ்சோபேனின், ரேம்னோஸ், சென்னாசைடு ஏ மற்றும் பி, எமோடின் போன்ற பொருட்கள் மலக்குடலை தூண்டி, தேங்கிய மலத்தை இலகுவாக வெளியேற்றுகின்றன.
இரே வல்சின் னி – 5 கிராம், இசப்புகோல்-50 கிராம், நிலவாரை-30 கிராம், கடுக்காய்-15 கிராம் என்ற அளவில் எடுத்து, இடித்து, பொடித்து, சலித்து ஒன்று அல்லது இரண்டு கிராம் தினமும் இரவில் இளஞ்சூடான நீரில் கலந்து, குடித்துவர அதி காலையில் மலம் எளிதாக வெளியேறும். நாட்பட்ட மலச்சிக்கலும் நீங்கும். கடுமையான மலச்சிக்கல் உடையவர்கள் அரை கிராம் இரேவல் சின்னி பொடியை சூடான நீரில் கலந்து குடிக்க, மலம் கழிச்சலாக வெளியேறும். சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும் ரோஸ்லோ என்னும் பொடியில் இரேவல்சின்னி சேர்க்கப்படுகிறது.
இதனை 3 முதல் 5 கிராமளவு நீரில் கலந்து குடித்துவந்தாலும் மலச்சிக்கல் தீரும்.

போகட்டும் புழுத்தொல்லை: யானை திப்பிலி

குடலில் புழுக்கள் தங்கி, குடலுறிஞ்சிகளில் ரத்தத்தை உறிஞ்சி, இனப்பெருக்கம் செய்து வருகின்றன. இவை நமது உணவை மலமாக மாறுவதற்கு உதவி புரிகின்றன. இவ்வாறு புழுக்கள் நமது செரிமான மண்டலத்திற்கும், உணவு கழிவு மண்டலத்திற்கும் பேருதவி புரிந்தாலும், அளவுக்கு மீறும் பொழுது, இந்த புழுக்கள் உடலில் பலவித உபாதைகளை ஏற்படுத்துகின்றன. வட்டப்புழுக்கள், உருண்டை புழுக்கள், தட்டைப்புழுக்கள், நாடாப்புழுக்கள் என பலவகையான புழுக்கள் நமது குடலில் வசிக்கின்றன. இவை குறிப்பிட்ட கால இடைவெளியில் இனப்பெருக்கம் செய்து, ஒருவித நிலைத்தன்மையை ஏற்படுத்துகின்றன. ஆனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்பொழுதும், இனிப்பு சார்ந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளும்போதும், வேறு சில புழுக்கள் மற்றும் கிருமிகள் சுகாதாரமற்ற நீர் மற்றும் கெட்டுப்போன உணவுகள் மூலமாக உடலில் நுழையும்பொழுதும், தங்களை காத்துக்கொள்வதற்காக குடல் புழுக்களும் பெருகுகின்றன.
இதனால் உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. தோலில் தடிப்பு, அரிப்பு, மலவாயில் எரிச்சல் மற்றும் வெடிப்பு, மலச்சிக்கல் அல்லது கழிச்சல், தலையில் பொடுகு, வாயில் புண்கள் மூக்குத்துளை ஓரங்களில் அரிப்பு, முகம் மற்றும் கன்னப்பகுதிகளில் ஒரு வித வெளுப்பு, வாயில் துர்நாற்றம், மலம் கழிக்கும்பொழுதும், அபானவாயு பிரியும்பொழுதும் துர்நாற்றம், புழுக்கள் இனப்பெருக்க பாதையில் தொற்றை ஏற்படுத்தி வெள்ளைப்படுதல், மாதவிலக்கு திரவம் மற்றும் வெள்ளையில் சிறுசிறு புழுக்கள் வெளியேறுதல், சிறுநீர்ப்பாதையில் அரிப்பு, மலவாயைச் சுற்றி துளைகள் ஏற்பட்டு பவுத்திரம், மூலம் உண்டாதல், சில நேரங்களில் அந்த துளைகளிலும் புழுக்கள் வெளியேறுதல் மற்றும் ஆசனவாய் வெடிப்பு ஆகியன புழுக்களால் உண்டாகின்றன. அது மட்டுமின்றி தொடை இடுக்கு மற்றும் வயிற்றுப்பகுதிகளில் நெறி கட்டுதல், சிறு சுரம், அடிக்கடி குமட்டல், வாந்தி போன்ற சில தொல்லைகளுக்கும் வயிற்றுப்புழுக்கள்தான் காரணம்.
அவசியமற்ற குடற்புழுக்களை நீக்கி, வலிமையையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும் மூலிகைதான் யானை திப்பிலி. பைப்பர் சாபா என்ற தாவரவியல் பெயர் கொண்ட, பைபரேசியே குடும்பத்தைச் சார்ந்த கொடிகளின் உலர்ந்த பூ தண்டுகளே, யானை திப்பிலி என்று வழங்கப்படுகின்றன. நாட்டு மருந்துக்கடைகளில் யானை திப்பிலி விற்பனை செய்யப்படுகின்றன. இதன் தண்டுகளில் பைப்பரின், பைப்பலார்டின், பைப்பலோரின்ஸ் மற்றும் பலவித ஒத்த பியூட்டைல் அமைடுகள் காணப்படுகின்றன. இவை குடல் பகுதியிலுள்ள மென்மையான சளிச்சவ்வு படலத்தை தூண்டி, குடற்புழுக்களை வெளியேற்றுகின்றன. அது மட்டுமல்லாமல் குடற்பாதையில் உறுத்தலை ஏற்படுத்தும் பாக்டீரியா, வைரஸ் போ ன்ற நுண்கிருமிகளையும் நீக்குகின்றன. யானை திப்பிலி, அரிசி திப்பிலி, வேப்பிலை, சுக்கு, சீந்தில் தண்டு, நிலவேம்பு, சுண்டை வற்றல் ஆகியவற்றை நன்கு உலர்த்தி, சுத்தம் செய்து, சம அளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து, பின் ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
10 கிராம் பொடியை 500 மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து 100 மிலியாக சுண்டியபின் வடிகட்டி, அதிகாலை வெறும் வயிற்றில் 7 நாட்கள் குடித்துவர, வயிற்றுப்புழுக்கள் வெளியேறும். புழுத்தொல்லையினால் ஏற்பட்ட தோல் தடிப்பு, வெள்ளை நிற மாவு படிதல், மலவாய் அரிப்பு, பலவிதமான வயிற்று உபாதைகள் நீங்க யானைத்திப்பிலியை இளவறுப்பாக வறுத்து, பொடித்து 1 கிராம் அளவு எடுத்து தேனுடன் குழப்பி, 3 முதல் 7 நாட்கள் சாப்பிட்டுவர வயிற்றுப்புழுக்கள் மலத்துடன் வெளியேறும்.

மரம் – கருங்காலி

மரங்கள்  மனிதனுக்கு ஆதார மானவையாகத் திகழ்கின்றன.  மரங்கள்தான் மனித இனத்தை வாழ வைக்கும் சக்திகளாக விளங்குகின்றன.  இதனால் தான் நம் முன்னோர்கள் கோவில்களில் தல விருட்சமாக மரங்களை வளர்த்து வணங்கினர்.
ஆனால் இன்று காடுகளில் உள்ள மரங்களை அழித்து கான்கிரீட் காடுகளாக மாற்றிக்கொண்டு வருகிறோம்.   இதனால் எதிர்கால சந்ததியினருக்கு நாம் கொடுப்பது பலமற்ற உடலையும், நோயும்தான்.
மரங்களின் மருத்துவப் பயன்கள் அளவற்றவை.  எதிர்விளைவு களை ஏற்படுத் தாதவை.  இத்தகைய சிறப்பு வாய்ந்த மரங்களில் கருங்காலி மரமும் ஒன்று.
பொதுவாக கருங்காலி மரம் இந்தியா முழுமைக்கும், மியான்மர், மலேசியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் அதிகம் காணப்படுகிறது. இதன் பட்டை, பிசின், வேர் அதிக மருத்துவப் பயன் கொண்டவை.  துவர்ப்புத் தன்மை மிக்கது.
கருங்காலியைப் பற்றி பழந்தமிழ் பாடலில் ஔவையார்
கருங்காலி கட்டைக்குக் கோணாத கோடாலி
என்று பாடியுள்ளார்.   இதிலிருந்து கருங்காலி கட்டையின் தன்மை நமக்கு விளங்கும்.
அகத்தியர் பெருமான் கருங்காலி மரத்தை ஆராய்ந்து  அதன் குணத்தை பாடலாகத் தந்துள்ளார்.
குட்டங் கயலோகங் குன்மம் பெருவயிறு
நெட்டைப் புழுதிமிரு நீரிழிவும்-விட்டே
யடுங்கான கத்தேக முஞ்சுகமே நல்ல
கருங்காலி நீரதனைக் கண்டு
-அகத்தியர் குணவாகடம்.
நீரிழிவு நோய், பெருவயிறு, வயிற்றுப்புழு நோய் குருதிக்குறைவால் உருவாகும் திமிர் வாதம், பெருநோய், அழல் குன்மம் போன்றவை நீங்கும்.
கருங்காலி வேர்
கருங்காலி வேரை எடுத்து சுத்தப்படுத்தி நீரில் ஊறவைக்க வேண்டும்.  பின்பு அந்த நீரைக் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் வயிற்றுப்புண் ஆறும். வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்கும்.
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இருவேளை இதைக் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.
இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும்.  பித்தத்தைக் குறைக்கும்.
வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும் கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.
கருங்காலி மரப்பட்டை
கருங்காலி மரப்பட்டை அல்லது மரக்கட்டை 1 பங்கு எடுத்து 8 பங்கு நீர் சேர்த்து நன்றாகக் காய்ச்சி அதனுடன் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்த்து மீண்டும் காய்ச்சி வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால், ஈளை, இருமல் நீங்கும்.  சுவாச காச நோய்கள் அகலும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.  உடலில் உள்ள தேவையற்ற விஷ நீரை வெளியேற்றும்.
பெண்களுக்கு கருப்பையை வலுப்படுத்தும்.  மலட்டுத் தன்மையைப் போக்கும்.  பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலைக் குறைக்கும்.  நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோயாளிகள் இதைஅருந்துவது நல்லது.
வாய்ப்புண்ணை அகற்றி வாய் நாற்றத்தைப் போக்கும்.
இதுபோல் கருங்காலிப்பட்டை, வேப்பம் பட்டை, நாவல்பட்டை இம்மூன்றையும் ஓர் எடை எடுத்து இடித்து நாள்பட்ட புண்களின் மீது தடவி வந்தால் புண்கள் ஆறும்.
கருங்காலி மரப்பிசின்
கருங்காலி மரத்தின் பிசினை எடுத்து  காயவைத்து பொடிசெய்து அதை பாலுடன் கலந்து அருந்தி வந்தால்  உடல் பலமடையும்.  நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும்.  அதிக இரத்தப்போக்குள்ள பெண்களுக்கு சிறந்த மருந்தாகும்.  நரம்புத் தளர்ச்சியைப் போக்கி புத்துணர்வு கொடுக்கும்.
கரப்பான் நோயினை போக்கவல்லது.  பால்வினை நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது.
கருங்காலிக் கட்டையை தண்ணீரில் ஊறவைத்தால் அந்நீரின் நிறம் மாறும். அந்த நீரைக் கொண்டு குளித்து வந்தால், உடலில் உண்டாகும் அனைத்து வலிகளும் நீங்கும்.

பித்தம் தணிக்கும் கொத்தமல்லி

உலகில் முதன் முதலாக உணரப்பட்ட மருத்துவப் பொருள் மூலிகைகளே.  நாம் அன்றாடம் பயன்படுத்தும் கீரை, காய்கள், கனிகள் அனைத்துமே ஒவ்வொரு வகையில் மருத்துவப் பயன் கொண்டவையாகும்.
மக்கள் பிணி நீங்கி  நீண்ட ஆரோக்கிய வாழ்வு வாழ்வதற்கும், இந்த மூலிகைகள் நமக்கு உதவு கின்றன.  இதனையே நாம் கற்ப மூலிகைகள் என்று அழைக்கிறோம்.  மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம், கொத்தமல்லி போன்றவற்றை தினமும் மசாலாவாக அரைத்து குழம்பு செய்து உண்ணும் வழக்கம் தென்னிந்தியாவிற்கே உரிய சிறந்த பழக்கமாகும்.
கறிவேப்பிலை போல் கொத்தமல்லியும் நம் சமையலில் அதிகம் இடம்பெறும் ஒரு மூலிகைப் பொருள் ஆகும்.  இது வாசனைக்காக மட்டுமே சேர்க்கப்படுவது என நம்மில் பலர் நினைப்பதுண்டு. ஆனால் வாசனையோடு அதன் மருத்துவக் குணங்களும் சேர்க்கப் படுகிறது என்பதை அறிந்திருக்க மாட்டோம்.
நம் முன்னோர்கள் உணவின் மூலமே நோயற்ற வாழ்வு வாழ்ந்தார்கள் என்பதற்கு கொத்தமல்லி, கறிவேப்பிலை போன்றவை சாட்சிகள்.
கடையில் காய் வாங்கினால் ஏதோ கொசுறாக கொத்தமல்லித் தழையைக் கொடுப்பார்கள்.  அதை நாமும் வாங்கி பயன்படுத்துவோம்.  ஆனால் அதிலுள்ள மருத்துவப் பயனைஅறிந்ததில்லை.
பசுமையான, மணமுள்ள இலைகளையும் சிறிய வெண்ணிற மலர்களையும் உருண்டையான விதைகளையும் உடைய சிறு செடி கொத்தமல்லி.  இதன் விதைகளுக்கு தனியா என்று பெயர்.  இது பலசரக்குக் கடைகளில் கிடைக்கும்.
நஞ்சை, புஞ்சை காடுகளிலும் இதனைப் பயிரிட்டு வளர்க்கின்றனர்.  இதன் விதை மிகவும் மருத்துவப் பயன் கொண்டது.   இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் உடையவை.  இது இந்தியா முழுவதும் பணப்பயிராகப் பயிரிடப் படுகிறது.
இது கார்ப்புச் சுவை கொண்டது.  குளிர்ச்சித் தன்மையுடையது.  சிறுநீர் பெருக்கல், உடல் வெப்பம் சமன்படுத்தல், வயிற்று வாயுவகற்றல், செரிமானம் மிகுத்தல் ஆகிய மருத்துவப் பயன்களைக் கொண்டது.
கொத்துமல்லிக் கீரையுண்ணில் கோரவ ரோசகம்போம்
பித்தமெல்லாம் வேருடனே பேருங்காண்- சத்துவமாம்
வெச்செனவே போகம் விளையுஞ் சுரந்தீருங்
கச்சுமுலை மாதே! நீ காண்
-அகத்தியர் குணவாகடம்
பொருள் -
சுவையின்மை, சுரம் நீங்கவும், உடலை வன்மையாக்கவும், விந்துவைப் பெருக்கவும் உதவும்.
கொத்தமல்லியின் பயன்கள்
· சுவையின்மை நீங்கும்.
· வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும்.
· செரிமான சக்தியைத் தூண்டி, உண்ட உணவை நன்கு சீரணிக்கச் செய்யும்.
· வயிற்றுப் பொருமல், வாயுக் கோளாறுகளைப் போக்கும்.  மலச்சிக்கல் நீங்கும்.   இதில் உள்ள நார்ச்சத்து மலக்குடலில் உள்ள தேவையற்ற அசடுகளை வெளியேற்றும்.  மூலநோயாளிகளுக்கு இது சிறந்த மருந்தாகும்.
· புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல் போன்றவை மாறும்.
· கண் நரம்புகளில் உள்ள வறட்சியைப் போக்கி கண்ணை பலமடையச் செய்யும்  கண் சூடு குறையும்.
· சுவாசம் சம்பந்தப்பட்ட கோளாறுகளைப் போக்கும்.  மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், தொண்டைக்கட்டு, வறட்டு இருமல் நீங்கும்.
· உடலுக்குத் தேவையான சக்திகளைச் சேமித்து வைத்து தேவைப்படும்போது கொடுக்கும் உறுப்புதான் கல்லீரல்.  இது வீக்கமோ, சுருக்கமோ அடைந்து பாதிக்கப்பட்டால், உடலானது பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்.  இதனால் கல்லீரலைப் பலப்படுத்த கொத்தமல்லி சிறந்த நிவாரணியாகும்.
· நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.  மன அமைதியைக் கொடுக்கும்.
· உடலுக்கு வலுவைக் கொடுக்கும்.  விந்துவைப் பெருக்கும் குணம் இதற்குண்டு.
· நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் மயக்கம், தலைச்சுற்றல் போன்றவற்றை நீக்கும்.  இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையைக் குறைக்கும்.  இரத்த அழுத்த நோயாளிகளும் இதனை உணவில் சேர்த்துக்கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
· வாய் நாற்றத்தைப் போக்கும்.  பல்வலி, ஈறுவீக்கம் குறையும்.
சிறுநீர், வியர்வையைப் பெருக்கும்.
கொத்தமல்லி இலை     – 1 கைப்பிடி
சின்ன வெங்காயம்    – 5
மிளகு        – 10
சீரகம்        – 2 தேக்கரண்டி
பூண்டு        – 5 பல்
மஞ்சள் தூள்        – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை    – 1 கொத்து
உப்பு         -  தேவையான அளவு
எடுத்து நீர் விட்டு சூப் செய்து காலை, மாலை, டீ, காபிக்கு பதிலாக இதனை அருந்தி வந்தால் உடல் களைப்பு நீங்கி மேற்கண்ட பாதிப்புகள் குறையும்.
கொத்தமல்லி இலையுடன் கறிவேப்பிலை, புதினா, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, தேங்காய் சேர்த்து துவையல் செய்து உண்டு வந்தால் உடல் சூடு தணிவதுடன், பித்த அதிகரிப்பினால் உண்டாகும் பித்தச்சூடும் தணியும்.
5 கிராம் கொத்தமல்லி விதையை இடித்து அரைலிட்டர் நீரில் விட்டு 100 மி.லியாகக் காய்ச்சி வடிகட்டி பால், சர்க்கரை கலந்து காலை, மாலை சாப்பிட இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், செரியாமையால் ஏற்படும் வயிற்றுப்போக்கு ஆகியவை நீங்கும்.
கொத்தமல்லி சூரணம்
கொத்தமல்லி     – 300 கிராம்
சீரகம்        – 50 கிராம்
அதிமதுரம்        – 50 கிராம்
கிராம்பு        – 50 கிராம்
கருஞ்சீரகம்        – 50 கிராம்
சன்னலவங்கப்பட்டை 50 கிராம்
சதகுப்பை        – 50 கிராம்
இவை அனைத்தையும்  இளவறுப்பாய் வறுத்து பொடி செய்து சலித்து 600 கிராம் வெள்ளை கற்கண்டு பொடியுடன் கலந்து வைக்கவும்.  இந்த சூரணத்தை காலை, மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டால் உடல் சூடு, செரியாமை, வாந்தி, விக்கல், நாவறட்சி, ஏப்பம், தாது இழப்பு, நெஞ்செரிப்பு போன்றவை குணமாகும்.
கொத்தமல்லி கீரைக்கும், விதைக்கும் கண்பார்வையைத் தூண்டும் குணம் உண்டு.
காய்ச்சலாலும், குடல் அலர்ஜியாலும் பித்தம் அதிகரித்து வயிற்றில் சளி ஏற்பட்டு அதனால் நாவில் சுவையின்மை ஏற்படும்.  இது பொதுவாக பித்த அதிகரிப்பினால் வருவது.
இதற்கு, கொத்தமல்லி இலை, சீரகம், சேர்த்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து கஷாயம் செய்து அருந்தினால்  சுவையின்மை நீங்கி, பித்த கிறு கிறுப்பு நீங்கும்.

காய்கள் – அவரைக்காய்

இயற்கையுடன் இணைந்து வாழும் மனிதன் தன் இருப்பிடத்தைச் சுற்றி அதாவது வீட்டைச் சுற்றி தோட்டம் அமைத்தான். அதில் தமக்குத் தேவையான செடி, கொடி, மரங்களை நட்டு வைத்தான். அதிலிருந்து கிடைக்கும் பூ, இலை, காய், கனி அனைத்தையும் உண்டான். தன்னை வளர்த்து ஆளாக்கிய மனிதன் என்ற எஜமானுக்கு இவை நீண்ட ஆயுளை நன்றிக்கடனாக கொடுத்து வந்தன.
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் பருவ கால சூழ்நிலைக்கேற்ப எந்த வகையான உணவுகளை சாப்பிடவேண்டும், அதை எப்படிச் சாப்பிடவேண்டும் என்பதை தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். அதன்படி வீட்டைச் சுற்றி மனிதனுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் தரும் கீரைகள், மரங்களை நட்டு வளர்த்தனர். ஆனால் இன்று வீடுகளைச் சுற்றி காங்கிரீட் தளங்கள், குரோட்டன்ஸ் என்று சொல்லப்படும் எதற்கும் உதவாத நச்சுச் செடிகள், அல்லது பிளாஸ்டிக் அலங்காரப் பொருட்கள்தான் உள்ளன. இதனால் வீட்டுத் தோட்டக் காய்கள் எதுவென்று நம் எதிர்கால சந்ததியினர்களுக்குத் தெரியாமல் போகும் நிலை உள்ளது.
இன்று காய்கறிகள், கனிகள் கீரைகள் எல்லாம் இரசாயன உரமிட்டு வளர்க்கப்பட்டு சந்தைகளில் விற்கப்படுகிறது. அவை சில நேரங்களில் உடலில் நச்சுத்தன்மையை உண்டாக்குகிறது.
ஆனால் இவைகளை நம் ஒவ்வொரு வீட்டிலும் வீட்டுக் கழிவுகளை உரமாக இட்டு வளர்த்தால் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.
அந்த வகையில் வீடுகளில் எளிதாக வளர்க்கப்படும் அவரைக்காய் பற்றி தெரிந்து கொள்வோம்.
அவரை கொடி வகையைச் சேர்ந்தது. குறிப்பாக தென்னிந்தியாவில் வீடுகள்தோறும் பயிரிடப்படும் செடியாகும். இன்றும் கிராமப்புறங்களில் வீட்டின் கொல்லைப் புறத்தில் அவரை பயிரிடப் படுவதைக் காணலாம். ஆடி மாதம் விதை விதைத்தால் அதன் பயன் தை மாதத்தில்தான் கிடைக்கும். இது கொடியாக வளர்ந்து காய் காய்ப்பதற்கு ஆறு-மாத காலமாகும். இந்த அவரைக் கொடிக்கு அழகான பந்தல் போடுவார்கள். அந்த பந்தலின் மேல் இந்த கொடி படர்ந்து காணப்படும். அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் உணவாகச் சேர்க்கப்படுகிறது. நல்ல சுவையைக் கொண்டது.
அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும். எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும்.
நோய்க்கு மருந்துண்ணும் காலங்களிலும், விரதம் இருக்கும் காலங்களிலும் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். இது உடலுக்கு வலுவைக் கொடுப்பதுடன் விரத மன அமைதியைப் பெருக்கவும் உதவும். சிந்தனையைத் தெளிவுபடுத்தும்.
காமச்சிந்தனை, அதீத சிந்தனை, கோபம், எரிச்சல், இவற்றைப் போக்கும். உடலுக்கும், மனதிற்கும் சாந்தத்தைக் கொடுக்க வல்லது.
சங்குலுண விற்குங் கற்கும் உறைகளுக்கும்
பொங்குதிரி தோடத்தோர் புண்சுரத்தோர்-தங்களுக்குங்
கண்முதிரைப் பில்லநோய்க் காரருக்குங் காழுறையா
வெண்முதிரைப் பிஞ்சாம் விதி
-தேரையர் குணபாடம்.
பித்தத்தினால் உண்டாகும் கண்சூடு, கண்பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்புகளுக்கு அவரைக்காய் பிஞ்சு வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து கண் நரம்புகள் குளிர்ச்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும்.
அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.
அதுபோல் சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை மட்டுப்படும்.
· மலச்சிக்கலைப் போக்கும், வயிற்றுப் பொருமலை நீக்கும்.
· மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.
· சிறுநீரைப் பெருக்கும்
· சளி, இருமலைப் போக்கும்
· உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்
· சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும்
· இரவு உணவில் அவரைக்காய் சேர்த்துக் கொண்டால் சுகமான நித்திரை கிடைக்கும்.
முற்றிய அவரைக்காயை உணவாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக முற்றிய அவரைக்காய், முற்றிய வெண்டைக்காய் போன்றவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால் உடல் பலமடையும். ஆண்மை சக்தி அதிகரிக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.
முதுமையில் உண்டாகும் நோயின் தன்மையை அவரைப் பிஞ்சு மாற்றும். தசை நார்களை வலுப்படுத்தும்.

வேப்ப இலை மகத்துவம்

* வேப்ப எண்ணையுடன் தூய தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் எண்ணையை 1:4 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்தால், பூச்சிகள் மற்றும் கொசுக்கடியில் இருந்து தப்பிக்கலாம். மேலும், இந்த கலவை தோல் எரிச்சல், சிறு வெட்டுக்காயங்கள், தீக்காயங்கள் ஆகியவற்றையும் குணப்படுத்துகிறது.
* வேப்ப இலைகளால் தயாரிக்கப்பட்ட தேனீரைப் பருகும்போது, தோலுக்கு பாதுகாப்பும், உறுதியும் கிடைக்கும்.
* வேப்ப எண்ணையுடன், தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் ஆயிலை கலந்து தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் ஊறவைத்தபின்னர் குளிக்கவும். தொடர்ந்து 3 வாரங்களுக்கு இப்படி தேய்த்துக் குளித்து வர, நீண்ட நாட்களாக இருந்து வந்த ஈறு, பொடுகு மற்றும் பேன் தொல்லைகள் நீங்கி, ஆரோக்கியமான பளபளப்பான தலைமுடியை பெறலாம்.
* 300 மில்லி நீருடன் 2 முதல் 3 வேப்ப இலைகளை சேர்த்து, கொதிக்க வைத்து ஆறவிடவும். இந்த வேப்ப இலை கஷாயத்துடன், சிறிதளவு தேன் கலந்து பருகி வர, தொண்டைப் புண் குணமாகும்.

* வேப்ப இலையை உலரவைத்து பொடியாக்கி, சிறிதளவு நீர் கலந்து பசையாக்கி முகத்தில் தடவி வர, பருக்கள் மற்றும் கொப்புளங்கள் நீங்கி முகம் பளிச்சிடும்.
* வேப்ப எண்ணையை, காலை, மாலை இருவேளைகளிலும் 2 துளிகள் மூக்கில் இட்டு வர சைனஸ் தொல்லை விலகும்.
* கொசு உற்பத்தியாகும் இடங்களில் வேப்ப விதை மற்றும் வேப்ப எண்ணையை தெளித்து வர, கொசுத்தொல்லை நீங்கி சுகாதாரமாக இருக்கலாம்.
* 250 மில்லி அளவுள்ளநீரில், 40 முதல் 50 வேப்ப இலைகளைப் போட்டு 20 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பிறகு ஆறவைத்து வடிகட்டி குடிக்க, உடலில் உள்ள தசைகள் மற்றும் திசுக்கள் பலம்பெறுகின்றன.
* 2 அல்லது 3 வேப்ப இலைகளை தினமும் மென்று வர, ரத்தம் சுத்திகரிக்கப்படுவதுடன், அஜீரணக்கோளாறும் சரியாகும்.
* வலி நிவாரணியாகவும், உடல் சூட்டை தணிக்கும் சிறந்த மருந்தாகவும் இது பயன்படுகிறது.
***

அற்புதக் கொய்யா

* குறைந்த விலையில் நிறைந்த தரம் என்றால் அதற்கு எடுத்துக்காட்டு கொய்யாப்பழம். அதன் சத்துக்களும், மருத்துவக்குணங்களும் வியப்பானவை.
* ஆரஞ்சை விட அதிக அளவில் வைட்டமின் `சி’ உள்ள பழம் கொய்யா. இந்த பழத்தில் வைட்டமின் ஏ, பி ஆகிய சத்துக்களும் அதிகமாக காணப்படுகின்றன. வாழைப்பழத்தில் உள்ளதை விட கூடுதலாக பொட்டாசியம் சத்தும் உள்ளது.

* கொய்யாக்காய் உடலுக்கு உறுதியையும், தோலுக்கு பாதுகாப்பையும் தருகிறது.
* தோல் நோய்களை நீக்கி, மென்மையான சருமத்தைப் பெறவும், சருமம் பளிச்சிடவும் கொய்யா உதவுகிறது.
* தோலில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி, இழந்த இளமைப் பொலிவை மீட்டுத்தருகிறது.
* அதிக உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மலச்சிக்கலைத் தீர்க்கிறது

வெந்தயத்தின் மகிமை

உணவாகவும், மருந்தாகவும் சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளாக மனித குலத்துக்கு வெந்தயம் பயன்படுது. இதன் கீரை, விதை இரண்டுமே மருத் துவக்குணம் கொண்டவை. ரொம்ப நேரம் உட்கார்ந்து வேலை பார்க்குறவங்க, வெந்தயக்கீரையை தேங்காய்த் துருவலோட நெய்யில வதக்கிச் சாப்பிட்டா இடுப்பு வலி குறையும். ரத்தத்துல குளுக்கோசோட அளவை கட்டுப்படுத்தி, சர்க்கரை நோயாளிகளுக்கு உதவுது. குடல் புண்களை குணப்படுத்தும் ஆற்றலும் இதற்கு இருக்கு.
`டையோஸ்ஜெனின்’ என்கிற பைடோ- ஈஸ்ட்ரோஜன் கூட்டுப்பொருள் வெந்தயத்துல இருக்கு. ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைப் போலவே இது செயல்படுறதால, பெண்கள் சாப்பிட உகந்தது. ரத்தம் மற்றும் தாய்ப்பால் உற்பத்தியைப் பெருக்கும் ஆற்றல் இருக்குறதால, பிரசவித்த தாய்மார்களுக்கு வெந்தய உணவுகளைக் கொடுப்பாங்க. ஒரு பங்கு வெந்தயம், எட்டு பங்கு கோதுமை இரண்டையும் காயவைத்து, வறுத்து அரைத்து, அதோட போதுமான சர்க்கரை சேர்த்து லட்டு மாதிரி உருட்டி தினமும் சாப்பிட்டு வந்தா, நல்லா பசியெடுக்கும். தலையில பொடுகுத்தொல்லை இருக்குறவங்க, வெந்தயத்தை அரைச்சு, தலையில தேய்த்து ஊறவைத்து குளித்தால் பொடுகுத்தொல்லை நீங்கும். இப்படிப் பல்வேறு நோய்களுக்கும் மருந்தாக வெந்தயம் பயன்படுது.

என்ன இல்லை சோற்றுக்கற்றாழையில்!

சோற்றுக் கற்றாழைக்கு சித்த மருத்துவர்கள் கொடுத்திருக்கும் மதிப்பே தனிதான். மூலிகைகள் உலகத்தில் ராஜ மரியாதையுடன் வலம் வரும் இந்த சோற்றுக்கற்றாழை அதற்கு முற்றிலும் தகுதி உடையதுதான். எளிதாக கிடைக்கக்கூடிய இந்த மூலிகை ஏராளமான மருத்துவக்குணங்களை கொண்டது.
தீய சக்திகள், கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படுகிற அல்ல கட்டித் தொங்க விடப்படுகிற இந்த செடி மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணி பற்றாமலிருப்பதற்காகவும் தொங்க விடப்படுவது உண்டு.
கற்றாழையின் சோற்றைத் தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும்.
சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.
வாடிச் சருகான கற்றாழை மடலை தீயில் கருக்கி, தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப் புண்களில் மீது பூசி வர விரைவில் புண் ஆறும்.
கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் மட்டுமல்ல இரத்தக் கட்டும் மாறும்.
இச் செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வர குடல் புண், மூல நோய் மாறும். மலச் சிக்கல் தீரும்.
மஞ்சள்காமாலை நோய்க்கும் சோற்றுக்கற்றாழை மருந்தாக பயன்படுகிறது. தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதால் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையும் அதிகரிக்கிறது.

உங்கள் “”பேஸ்ட்”ல் தப்பு இருக்கா ? தீர்வுக்கு இருக்கு “”தேஜாவதி !”

நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் நன்றாக இல்லாவிட்டாலும் பொறுத்து கொள்பவர்கள், வாயிலிருந்து வரும் துர்நாற்றத்தை பொறுத்து கொள்ள மாட்டர். “ஹாலிடோசிஸ்’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த வாய் துர்நாற்றத்திற்கு வாய், மூச்சுப்பாதை, உணவுப்பாதை ஆகியவற்றில் பெருகும் நுண் கிருமிகளே காரணம். வாயிலிருந்து என்ன வாடை வருகிறது என்பதை ஆராய்வதைவிட, வாயில் துர்நாற்றம் ஏற்படுவதற்கு முதற்காரணமான பற்களை, சுத்தமாக வைத்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இன்று நாம் உபயோகிக்கும் பலவிதமான பற்பசைகளில், உயிருக்கே உலை வைக்கும் பல அபாயகரமான பொருட்கள் அடங்கியுள்ளன. அவை என்னவென்று தெரிந்து கொண்டால், பலரும் நம் பாரம்பரிய பற்பொடியை பயன்படுத்த ஆரம்பித்து விடுவர். துணி துவைக்க பயன்படும் காஸ்டிக் சோடா என்ற டிடர்ஜென்ட் பொடி, ஆய்வகங்களில் கிருமிநாசனியாக கண்ணாடி கலன்களை கழுவ பயன்படும் பார்மால்டிஹைடு, பெட்ரோலியம் சுத்திகரிக்கும் பொழுது, கழிவாக கிடைக்கக் கூடிய பாரபின் மெழுகு மற்றும் கிளிசரின், கரும்பலகைகளில் எழுத பயன்படும் சாக்பீஸ், பெயின்ட் தயார் செய்ய பயன்படும் டைட்டானியம், கேக் தயார் செய்ய பயன்படும் சாக்கரின், துணிகளின் சாயத்திற்கு பயன்படும் சாய நிறமிகள். இது மட்டுமின்றி, இவற்றை அடைத்து வைக்க பயன்படும் ககீயம் பூசப்பட்ட அலுமினிய அல்லது பிளாஸ்டிக் குப்பி ஆகியவை தான், நாம் உபயோகிக்கும் பற்பசையிலுள்ள அபாயகர பொருட்கள். பாரம்பரியமாக நாம் பயன்படுத்திய பற்பொடிகளில், இது போன்ற அபாயங்கள் இருப்பதில்லை. கவர்ச்சியான, வண்ணமில்லாத, செயற்கை வாசமில்லாத இயற்கை மணத்துடன் கூடிய பெரும்பாலான மூலிகை பற்பசைகள், நமக்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. அதுபோன்ற மூலிகை பற்பசைகளில் பயன்படும் சிறப்பான மூலிகை தான் “தேஜாவதி!’ “சேந்தோசைலம் அலாட்டம்’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட “ரூட்டேசியே’ குடும்பத்தை சார்ந்த தேஜாவதி, பல்வலி மரம் மற்றும் தும்புரு என்ற பெயர் கொண்டது. வடமாநிலங்களில் குளிர் பிரதேசங்களில் காணப்படும் ஒரு வகையான மரங்களின் பழம் மற்றும் பட்டைகளில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இவற்றிலுள்ள லினாலூன், சிட்ரால், ஜெரானியால், மெத்தில் சின்னமேட், லிமோனின், தம்புலின், தம்புலால் போன்ற பொருட்கள், பல் மற்றும் ஈறுகளில் வளரும் கிருமிகளை அழித்து வாய் துர்நாற்றத்தை நீக்கி, பற்களை சுத்தம் செய்கின்றன. இதிலிருந்து எடுக்கப்படும் நறுமண எண்ணெய் பல்வேறு வகையான மூலிகை பற்பசைகளில் சேர்க்கப்படுகிறது. உலர்ந்த தேஜாவதி பழங்கள், கருவேலம்பிசின், கடுக்காய் தோல், நெல்லி வற்றல், தான்றிக்காய் தோல், வாய்விடங்கம், நொச்சிப்பட்டை, வேம்புபட்டை, ஓமம், கிராம்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து, பொடித்து, சலித்து பல் துலக்கி வர வாய் துர்நாற்றம், பல் வலி, ஈறில் ரத்தம் வடிதல் ஆகியன நீங்கும். சித்தா ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கும் இமாலயா மூலிகை டென்டல் கிரீம் மற்றும் பல்வேறு வகையான மூலிகை பற்பசைகளில் தேஜாவதி சேர்க்கப்படுகிறது.
முட்டைகோஸ் சாப்பிடுவதால் உடல் பருமன் குறையுமா?
முட்டைகோசை பச்சையாகவோ அல்லது ஆவியில் வேகவைத்தோ உட்கொள்வதால் பசி குறையும். பெரும்பாலும் முட்டை பொரியல், அசைவ வறுவல், குழம்புகள் செய்யும் போது வதக்க வேண்டிய வெங்காயத்திற்கு பதிலாக இவற்றை பயன்படுத்துவதால் எண்ணெய் சேர்க்க வேண்டிய அவசியம் குறைகிறது. ஆனால், அடிக்கடி முட்டைகோஸ் உண்பதால் யூரிக் அமில மாறுபாடு, மூட்டுவலி, சிறுநீரக கற்கள் உண்டாகலாம். ஊட்டச்தச்து நிபுணர் அல்லது மருத்துவரை அணுகி, உங்கள் உடல் பருமனுக்கான காரணத்தை அறிந்து எடையை குறையுங்கள். நம் உடலில் இடப்பக்கம் இதயமும், வலப்பக்கம் கல்லீரலும் என அனைவருக்கும் இட, வலப்பக்கங்களில் உறுப்புகள் ஒரே மாதிரி அமைந்துள்ளன. ஆனால், சிலருக்கு இடப்பக்கத்திலுள்ள உறுப்புகள் அனைத்தும் வலப்பக்கத்திலும், வலப்பக்கத்திலுள்ள உறுப்புகள் இடப்பக்கத்திலும் பிறவியிலேயே அமைந்து விடுகின்றன. “சைட்டஸ் இன்வர்சஸ் டோட்டாலிஸ்’ என்று அழைக்கப்படும் இந்நிலை 25 ஆயிரத்தில் ஒரு பிறவிக்கு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கருவில் இருக்கும் பொழுதே இந்த மாற்றம் ஏற்படுகிறது. வளர்ச்சிக்கான ஜீன்கள் மற்றும் சில ஆட்டோசோம் குரோமசோம்களின் மாறுபாடுகள் போன்றவற்றால் இந்த குறைபாடு தோன்றுகிறது. இது போன்றவர்களுக்கு அப்பன்டிசைட்டிஸ், கோலிசிஸ்டைட்டிஸ், பான்கிரியாடைட்டிஸ் போன்றவற்றால் வலி ஏற்படும்பொழுது, சாதாரணமானவர்களுக்கு தோன்றும் இடங்களில், இந்த வலி தோன்றாமல் அதற்கு எதிர்பக்கத்தில் தோன்றுவதால், தவறான மருத்துவ கணிப்பு செய்யவும் வாய்ப்புள்ளது. எக்ஸ்-ரே, அல்ட்ராசோன் மற்றும் மருத்துவரின் நேரடி பரிசோதனையின் மூலம் சைட்டஸ் இன்வர்சஸ் என்ற உடல் உள்ளுறுப்புகளின் மாறுபட்ட இட அமைப்பை உறுதி செய்து கொள்ளலாம்.
- டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை

சோம்பேறி நோய்கள் – மூலிகை கட்டுரை


வளர்ந்து வரும் அறிவியல் உலகம் மனிதர்களை சோம்பேறிகளாக்கி விட்டது என்றே சொல்லலாம். 40 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை எண்ணிப்பாருங்கள்.
காலையில் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து ஆடவரும், பெண்டிரும் தத்தம் காலை கடன்களை கழிக்க ஒரு கையில் சொம்புடனும், மறுகையில் வேப்பங்குச்சி அல்லது ஆலங்குச்சியுடன் பல் துலக்கிக்கொண்டே, பல மைல் தூரம் சென்றவர்களுக்கு மலச்சிக்கல்தான் ஏது? நமது பெரும்பாலான பாட்டிகளுக்கு இன்று வரை முழங்கால் வலியோ, சர்க்கரை நோயோ,தோல் நோயோ இல்லை. இன்றும் சரியான எடையுடன் முதுமையின் பலவீனத்தை மட்டுமே தாங்கி, கம்பீரமாய் நடைபோடும் பல முதியோரின் ஆரோக்கிய ரகசியம்தான், நமது முன்னோர்களின் முந்தைய கால சுறுசுறுப்பு.வெறும் 200 சதுர அடிக்குள்ளேயே நாம் உண்ணும் உணவறை, படுத்து உறங்கும் படுக்கையறை, காலை கடன்களை கழிக்க கழிப்பறை என, ஒரு “”கட்டுக்கோப்பான” கூட்டுப்புழு வாழ்க்கை வாழும் நமக்கும், நமது சந்ததியினருக்கும் முந்தைய காலத்தின் சுதந்திரம் எப்படி புரிய வரும். வெளிநாடுகளை விட இந்தியாவில்தான் உடல் உழைப்பின்மையால் தோன்றும் சோம்பேறி நோய்கள் வேக,வேகமாக அதிகரித்து வருகின்றன. சோம்பேறித்தனத்தால் உடலில் தோன்றிய தசை இறுக்கம், களைப்பு, மந்தம் ஆகியவற்றை நீக்கி, உடலுக்கு சுறுசுறுப்பை தரும் அற்புத மூலிகை சொரிக்கொன்னை என்ற பெருவாகை. ஒராக்சிலம் இன்டிகம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட பிக்னோனியேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த மரங்களின் இலை, வேர், பட்டை,பூ மற்றும் விதைகள் இந்திய மருத்துவத்தில் பெருமளவு பயன்படுகின்றன. இதன் இலை மற்றும் பட்டைகளிலுள்ள பிளேவோன்கள், பாய்காலின், ஸ்குட்டலரின், அலோயமடின், கிரிசின். ஓரோக்சலின் மற்றும் பீட்டா சைட்டோஸ்டீரால்கள் வயிறு மற்றும் தசை பகுதிகளில் தங்கிய வாயுவை வெளியேற்றி,மூட்டுகளில் வலியை குறைத்து, நீரை வெளியேற்றி,உடலை எடை குறைவாக மாற்றுகின்றன.பெருவாகை, முன்னை, வில்வம், பாதிரி, குமிழம், சுண்டை, கண்டங்கத்திரி, நெருஞ்சில், ஆடாதோடை, செவ்வியம் ஆகியவற்றின் வேர்களை சம அளவு எடுத்து, சுத்தம் செய்து,உலர்த்தி, பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.35 கிராம் பொடியை 500 மி.லி., நீரில் போட்டு கொதிக்கவைத்து. 100 மி.லி.,யாக சுண்டிய பின் வடிகட்டி, காலை மற்றும் இரவு உணவுக்கு பின்பு குடித்து வரவேண்டும். சித்தா,ஆயுர்வேதா மருந்துக்கடைகளில் கிடைக்கும் தசமுலாதி கசாயம்,தன்வந்தராகி கசாயம் போன்றவற்றில் பெருவாகை சேர்க்கப்படுகிறது.
எனக்கு ஹீமோகுளோபின் பற்றாக்குறை உள்ளது. இதன் காரணமாக பல விதமான பழச்சாறுகளை தினமும் காலையில் குடித்து வருகிறேன். ஆனால் சிறிது நேரங்களில் எனக்கு மூச்சு விடுவதற்கு சிரமமாக உள்ளது போல் தோன்றுகிறது. சளித்தொல்லை இல்லை.இது எதனால் ஏற்படுகிறது?
வயிற்றுப்புழுக்களினாலும்,கல்லீரல்,மண்ணீரல் பலகீனத்தாலும் ரத்தச்சோகை ஏற்படலாம். அத்திப்பழம் ரத்தச்சோகையை நீக்கும். அயச்செந்தூரம்-100மி.கி., நெல்லிக்காய் லேகியம் – 5 கிராம் தினமும் இரண்டு வேளை 1 அல்லது 2 மாதங்கள் உணவுக்கு பின் சாப்பிட ரத்தசோகை தீரும். – டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை
சுற்றுச்சூழல் அழிவுக்கு இ-வேஸ்ட் எனப்படும் மின்னணு கழிவுப்பொருட்கள் ஒரு காரணமாக அமைகின்றன. பழைய பயன்படாத கணினிகள், மடிகணினிகள், “டிவி’க்கள், மொபைல் போன்கள் மற்றும் அனைத்து மின்னணு சாதனங்களை அழிப்பது பெரும் சவாலாக உள்ளது. இவற்றை அழிப்பதற்கு அதிக செலவும் ஏற்படுகிறது. இவற்றிலுள்ள காரீயம், பேரீயம் மற்றும் கனத்த உலோகங்கள் புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணமாக உள்ளன.
மண்,காற்று மற்றும் நிலத்தடி நீரில் மாசை ஏற்படுத்தும் இந்த கழிவுகளிலுள்ள செம்பு அழிக்கப்படும் பொழுது, டயாக்சின்களை வெளிப் படுத்தி, சுற்றுச்சூழலை சேதப்படுத்துகின்றன. வேறு எந்த கழிவுகளை விட மின்னணு கழிவுகள் எதிர்கால சுற்றுச்சூழலுக்கு சவாலாக உள்ளன என,சுற்றுச்சூழல் அறிஞர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

மருந்தெனப்படுவது யாதெனில்….

உணவே மருந்து, மருந்தே உணவு என்பது சித்த மருத்துவம். எனவேதான், பெரும்பாலான சித்த மருந்துகள், உணவாக உட்கொள்ளும்படியே கசாயம், அடை, புட்டு, பொடி, லேகியம், மணப்பாகு, நெய், எண்ணெய் போன்ற வடிவங்களில் காணப்படுகின்றன. உணவாக பயன்படும் ஒரு பொருளை, குறைந்தளவில் பக்குவப்படுத்தி சாப்பிடும்போது அது மருந்தாகவும், அதே பொருள் அளவுக்கு மிஞ்சி சாப்பிடும்போது நஞ்சாகவும் மாறிவிடுகிறது. ஒரு பொருளின் உள்ளேயே சத்துகுணம் என்னும் மருத்துவ தன்மையும், ராஜ குணம் என்னும் உணவுத்தன்மையும், தாமச குணம் என்னும் நச்சுத்தன்மையும் நிரம்பியுள்ளது. ஆகவேதான், அனுபவத்தின்படியும் அறிவியல் கருத்துகளின்படியும் உணவை மருந்தாக மாற்றிக்கொள்கிறோம். மருந்து என்பது ஒரு நோயை குணப்படுத்துவதுடன், மீண்டும் வராமல் காக்கும் தன்மையுடனும் அதை உட்கொள்ளும்போது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடாததாகவும், அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளும்படியும் இருக்க வேண்டும். இதுவே மருந்தின் இலக்கணம். ஆனால், நாம் உட்கொள்ளும் பெரும்பாலான மருந்துகள் இவ்வாறு இருப்பதில்லை. கிடைப்பதற்கு அரிதான அல்லது விலை மதிப்புள்ள உணவுகளில் பல்வேறுவகையான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இவற்றை அன்றாடம் சாப்பிட முடியாவிட்டாலும், அவ்வப்போதாவது சாப்பிட்டுவந்தால் பல்வேறு வகையான மருத்துவ பலன்களை பெறலாம். பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியதுடன் பெருமளவு மக்களால் விரும்பி உட்கொள்ளப்படும் அற்புத பழம்தான் நோனி. நோனி பழச்சாறாகவும், நோனி பொடியாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் பழங்களில் கரிநீரகங்களும், நார்ச்சத்தும் ஏராளமாக காணப்படுகிறது. வைட்டமின் ஏ, வைட்டமின் பி3, வைட்டமின் சி, இரும்பு, கால்சியம், சோடியம், பொட்டாசியம் போன்ற சத்துகளும், பிளேவனாய்டுகள், ஸ்கோபோலெட்டின், டம்னகாந்தல், இரிடாய்டுகள் போன்ற தாவர வேதிச்சத்துக்களும் ஏராளமாக காணப்படுகிறது. இவை மார்பக புற்றுநோய் மற்றும் மாதவிலக்கு கோளாறுகளை கட்டுப்படுத்துவதாக ஆரம்பகட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நோனி பழச்சாற்றை உட்கொண்டுவர, மாதவிலக்கு கோளாறுகள், வயிற்று உபாதைகள், நாட்பட்ட சளியில் தோன்றும் தொண்டை அழற்சி ஆகியவை நீங்கும். பழச்சாறு மட்டுமின்றி, நோனிப்பட்டையிலுள்ள அலிசாரின் மற்றும் கிளைக்கோசைடுகள் மூட்டுவாதத்தில் தோன்றும் வீக்கம் மற்றும் தூக்கமின்மையை நீக்கி, புத்துணர்ச்சியை உண்டாக்குகிறது. இதன் பட்டையிலுள்ள ரூபிக்குளோரிக் அமிலம் குடற்பாதையில் தோன்றும் நுண்கிருமிகளின் தேவையற்ற வளர்ச்சியை நீக்குகின்றன.

“பம்ப்ளிமாஸ்’

காலையில் எழும்போது தேநீருக்கு பதில் தேனும், சுடுநீரும், காலை உணவாக பாலில் ஊறிய அவல், காரட் மற்றும் துளசி, மதிய உணவாக இஞ்சி சூப்புடன், ஆவியில் வெந்த பச்சை காய்கறிகளுடன் சுட்ட சப்பாத்தி மற்றும் பருப்புக்கூட்டு, மாலையில் பாகற்காய் சூப் அல்லது எலுமிச்சை சர்பத், இரவில் முளைவிட்ட தானியங்களுடன் ஆப்பிள், வாழைப்பழம், பப்பாளி, மாதுளை, அன்னாசி, திராட்சை பழக்கலவைகள் என, ஒருநாள் உணவில் இடையிடையே போதுமான அளவு, தண்ணீருடன் கூடிய இயற்கையான வாழ்க்கை எல்லோருக்கும் பிடிக்கக் கூடியது தான். ஆனால், பலவகையான பணி, மாறுபட்ட பழக்க வழக்கம், இயற்கை உணவு கிடைப்பதில் சிரமம் போன்ற காரணங்களால் வேகவைத்த, எண்ணெயில் பொறித்த உணவுகளின் ஆதிக்கம், நம் வாழ்க்கை சூழலை மாற்றியமைத்து விட்டது. இதனால், பல உணவுகள் தன் இயற்கை குணத்தை இழந்து விடுகின்றன. ஆனால், எளிதில் கிடைக்கக்கூடிய சில பழங்களில் கூட ஏராளமான இயற்கை ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளன. “சிட்ரஸ் மேக்சிமா’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட, “ரூட்டேசியே’ குடும்பத்தைச் சார்ந்த சுளைகள் உள்ள, பம்ப்ளிமாஸ் பழம் மட்டுமின்றி அனைத்து பாகங்களும் ஏராளமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியுள்ளன. பழச்சுளைகள் இதயத்தை வலுப்படுத்தி உடல் வீக்கத்தை குறைக்கும். இலைகள் நரம்பு மண்டலம் மற்றும் ரத்தக்குழாய் களை பாதுகாக்கும். வேர் மற்றும் பட்டைகளிலுள்ள கவமாரின்கள், பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பல வகையான ஒட்டுண்ணி கிருமிகளை அழிக்கும் ஆற்றல் உடையன. பம்ப்ளிமாஸ் பழங்களை கழுவி, சாறெடுத்து, எட்டு பங்கு நீருடன் கலந்து, தேவையெனில் சர்க்கரை சேர்த்து குடித்துவர, உடல் குளிர்ச்சியடையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கால் வீக்கம் வற்றும். எலுமிச்சம் பழத்தை ஜூஸ், ஊறுகாய், சாதம் செய்து சாப்பிடுவதை போல் பம்ப்ளிமாஸ் பழத்தையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள உடல் பருமனும் குறையும்.

1 comment:

  1. காலையில் ஒரு கடன் தொல்லை எனும் உங்கள் கட்டுரையில் இசப்புகோல் பற்றி எழுதி உள்ளீர்கள். இசப்புகோல் பற்றி விரிவாக கூற முடியுமா. ஆசிர்வாத் மல்டி க்ரைன் ஆட்டாவில் இசப்புகோல் (psyllium husk) சேர்த்திருப்பதாக போட்டிருக்கிறது. கூகூளில் psyllium husk பக்க விளைவுகள் உண்டு என்கிறது. சரியான விளக்கங்கள் கொடுங்களேன்.

    ReplyDelete